திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் சிவனை பாடிய தலங்கள், பாடல் பெற்ற சிவத்தலங்கள் என அழைக்கப்படுகின்றன. 274 தலங்கள் இவ்வாறு பாடல் பெற்றுள்ளன. இதில் திருஞானசம்பந்தர் நாயன்மார்களில் இருவரைப் பற்றி பாடியிருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டியன் நெடுமாறன், சமண சமயத்தை பின்பற்றினார். அவரை சைவ சமயத்தை பின்பற்றச்செய்வதற்காக, அவரது மனைவி மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் இருவரும் திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரும்படி அழைத்தனர். சம்பந்தரும் மதுரை வந்தார். அவரை குலச்சிறையார் வரவேற்றார். முதலில் திருவாலவாய் கோயிலை தரிசித்த திருஞானசம்பந்தர், மங்கையர்கரசியாரையும், அவரது அமைச்சர் குலச்சிறையாரையும் சிறப்பித்து சொல்லும் வகையில் மங்கையர்க்கரசி வலவர்கோன் பாவை என்னும் பதிகத்தை பாடினார். திருஞானசம்பந்தரால் வாழ்த்தப்பட்ட இவர்கள் இருவரும் சிவனருள் பெற்று நாயன்மார் வரிசையில் இணைந்தனர். குலச்சிறை நாயனாரை சுந்தரமூர்த்தி, ஒட்டக்கூத்தர் இருவரும் பெருநம்பி குலச்சிறையார் என்று பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.