பதிவு செய்த நாள்
14
மார்
2013
11:03
திருச்சி: திருவானைக்கோவில் பங்குனித்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடக்கிறது.பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படும், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர் - அகிலாண்டேஸ்வரி கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி மாதம் நடக்கும் தேரோட்டத் திருவிழா பிரசித்திப் பெற்றது. நடப்பாண்டு, பங்குனி தேரோட்டத் திருவிழா, "எட்டுதிக்கு (எட்டு திசை) கொடியேற்றத்துடன். கடந்த, 9ம் தேதி துவங்கியது. அன்று முதல் தொடர்ந்து, மாலையில், சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், காமதேனு, கைலாசம், கிளி, வெள்ளி ரிஷப வாகனங்களில் ஸ்வாமியும், அம்மனும் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
*நான்கு தேர்: நேற்றிரவு, வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்வாமியும், அம்மனும் எழுந்தருளி, சகடை எனப்படும் தெருவடைச்சானில், 4ம் பிரகார வீதியுலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான, பங்குனித்தேர், இன்று காலை, 8 மணிக்கு வடம் பிடிக்கப்படுகிறது.
திருவானைக்கோவிலை பொறுத்தவரை, விநாயகர், முருகனுக்கு தனித்தனியாக சிறிய தேர்கள் உள்ளன. காலை, 6 மணியளவில், இரண்டு தேர்களும் வடம் பிடிக்கப்படும். தேரில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி, 4ம் பிரகார வீதியுலா வருகிறார். ஸ்வாமியும், அம்மனுக்கும் தனித்தனியாக பெரிய தேர்கள் உள்ளன. முதலில் சிவன் தேர் வடம் பிடிக்கப்பட்டு வலம் வந்த பின்னர், அம்மன் தேர் வடம் பிடிக்கப்படும். தேர் விழாவையொட்டி, அப்பகுதிகளில், தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, நீர்மோர், பானகங்களும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.வரும், 18ம் தேதி மதியம், நடராஜர் புறப்பாடாகி, பிரம்ம தீர்த்தக்குளத்தில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். 21ம் தேதி மாலை, பல்லக்கில் எழுந்தருளி, 4ம் பிரகார வீதியுலாவுடன் பங்குனித்தேரோட்ட திருவிழா முடிகிறது. ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் தங்கமுத்து மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.