பதிவு செய்த நாள்
14
மார்
2013
11:03
புதுச்சேரி:உலக முத்துமாரியம்மன் கோவிலில், தளம் அமைக்கும் பணியை, அரசு கொறடா நேரு துவக்கி வைத்தார். புதுச்சேரி, பாரதி வீதியில், பழமை வாய்ந்த உலக முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொண்டு, புதிய ஆலயம் அமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் 19ம் தேதி, பூமி பூஜையுடன், திருப்பணி வேலைகள் துவங்கியது. கடந்த 6 மாதங்களில் பணிகள் வேகமாக நடந்து, மூலவர் கருவறையும், விநாயகர், முருகர் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தளம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. பணியை, உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வும், அரசு கொறடாவுமான நேரு துவக்கி வைத்தார். கோவில் சிறப்பு அதிகாரி கனகசபை மற்றும் திருப்பணிக் குழுவினர், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அதிகாரி கனகசபை கூறும்போது, "பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக, 17 லட்சம் ரூபாய் இதுவரை திரட்டப்பட்டுள்ளது. இந்த தொகையை வைத்து, திருப்பணி வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்னும் பல திருப்பணி வேலைகள் செய்ய வேண்டியுள்ளதால், பக்தர்கள் தாராளமாக நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார். உலக முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கான நிதியுதவியை, இந்து அறநிலையத் துறை உடனடியாக வழங்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.