பதிவு செய்த நாள்
18
மார்
2013
11:03
மன்னார்குடி: வைணவ ஸ்தலங்களில் புகழ்பெற்றதும், தென்திருப்பதி என அழைக்கப்படும் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில், பங்குனி பெருவிழாவில் வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பங்குனி பெருவிழாவில்,18 நாட்கள் பிரம்ம உற்சவம், 12 நாட்கள் விடையாற்றி விழா துவங்கியது. பிரம்ம உற்சவத்தில் புன்னை வாகனம், ஹம்ச வாகனம், கண்டபேரண்டபட்ஷி, புஷ்பபல்லக்கு, ரிஷியமுக பர்வதம், சிம்ம வாகனம், தங்க சூர்யபிரபை,வெள்ளிசேஷ வாகனம், தங்க கருடவாகனம், வெள்ளி ஹனுமந்த வாகனம், யானை வாகனம் போன்ற வாகனங்களில், தினந்தோறும் பெருமாள் தோன்றி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாளித்தார். பங்குனி பெருவிழாவில் சிறப்புஅம்சமான வெண்ணைத்தாழி விழாவில், ஸ்ரீ வித்ய ராஜகோபாலஸ்வாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் தங்களின் எண்ணம் நிறைவேற மனதில் வேண்டிக்கொண்டு, வெண்ணெயை கிருஷ்ணர் கோலத்தில் தோன்றிய ராஜகோபாலன் மீது வீசினர். இதனைத்தொடர்ந்து மதியம், 3 மணிக்கு செட்டி அலங்காரம் நடந்தது. இரவு, ஏழு மணியளவில் கள்ளர் சமூகத்தார் சார்பில் வெட்டுங்குதிரை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்கக்குதிரையில் ராஜகோபாலனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, வாணவேடிக்கை முழங்க, வீதிகளில் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெண்ணைத்தாழி நிகழ்ச்சியை யாதவர் சமூகத்தாரும், செட்டி அலங்காரம் மற்றும் வெட்டுங்குதிரை நிகழ்வை, கள்ளர் சமூகத்தார் செய்திருந்தனர்.