பதிவு செய்த நாள்
20
மார்
2013
10:03
ஆர்.எஸ்.மங்கலம்: தேவிபட்டினம் அருகே உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட கோவில் என்பதாலும், சூரிய ஓளி படும்படி விநாயகர் அமைக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பு. இங்குள்ள விநாயகரை பூஜித்தால், திருமண தடைகள் உள்ளிட்ட பல்வேறு தடைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்கிளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் இங்கு விநாயகரை வழிபட்ட பின்னரே, ராமேஸ்வரம் செல்கின்றனர். இத்தனை புனிதம் நிறைந்த இந்த கோயிலில் உள்ள இரண்டு குளங்களிலும் குப்பை நிறைந்து, துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்களுக்கு கழிப்பறை வசதி உட்பட, அடிப்படை வசதிகள் இல்லை. அவசரத்திற்கு ஒதுங்க கூட, இடமின்றி தவிக்கின்றனர். சுற்றுலா பயணிகள் இந்திரஜித், கல்யாணி கூறியதாவது: குளத்தை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்ப வேண்டும். குளியலறை, கழிப்பறை வசதி செய்ய கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.