பதிவு செய்த நாள்
20
மார்
2013
11:03
அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், அம்மனுக்கு தேர் உருவாக்க அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அச்சிறுப்பாக்கத்தில், ஆட்சீஸ்வரர் @காவில் அமைந்துள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் சோழ, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. மாநிலம் முழுவதுமிருந்து பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
திருவிழா: கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு, ஆடிப்பூரம், கந்தசஷ்டி, கார்த்திகை, மகா சிவராத்திரி, மகா சங்கடஹர சதுர்த்தி, குரு பெயர்ச்சி, பிரதோஷம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இவ்விழா 12 நாட்கள் நடைபெறும். முக்கிய விழாவான தேர் திருவிழா, ஏழாம் நாள் நடைபெறும். இவ்விழாவில் அச்சிறுப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
தேர் பழுது: இக்கோவிலில், மரத்தால் உருவாக்கப்பட்ட, இரண்டு @தர்கள் இருந்தன. பெரிய @தரில் சிவனும், சிறிய தேரில் அம்பிகையும் வீதியுலா வருவர். கடந்த 1986 ஆண்டு வரை, இரண்டு தேர்களும் வீதியுலா வந்தன. அதன்பின் போதிய பராமரிப்பின்றி தேர்கள் சிதிலமடைந்தன. இதனால், டிராக்டரை தேர் போல் வடிவமைத்து, தேர் திருவிழாவை நடத்தினர்.இந்நிலையில், அறநிலையத்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து, 15 லட்சம் ரூபாய் செலவில் மரத்தேரை உருவாக்கினர். புதிய தேரோட்டம் 2007ம் ஆண்டு சித்திரைத் திருவிழாவின்போது நடந்தது. ஆனால், அம்மனுக்கான தேர், இதுவரை உருவாக்கப்படவில்லை.ஒவ்வொரு ஆண்டும் அம்மன் டிராக்டரில் பவனி வருகிறார். இது பக்தர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மனுக்கான தேரை உருவாக்க, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.