பதிவு செய்த நாள்
20
மார்
2013
11:03
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின், ஏழு உபகோவில்களுக்கு, இந்தாண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, கோவில் இணை ஆணையர் புகழேந்தி தெரிவித்தார்.திருத்தணி முருகன் கோவில் கட்டுப்பாட்டிற்குள், 28 உபகோவில்கள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான உபகோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகி விட்டன.இதையடுத்து, அவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்யும் பணியில் திருத்தணி கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஏழு கோவில்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில், கடந்த 4ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், கூரம் வித்யா வனித பல்லவ பரமேஸ்வர சிவன் கோவிலுக்கு 1.85 லட்சம் ரூபாய் செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.அடுத்த மாதம், திருத்தணி சப்த கன்னியம்மன் கோவிலுக்கு, 1.50 லட்சம் ரூபாய் செலவிலும், வீரபத்ர சுவாமி கோவிலுக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலவிலும் கும்பாபிஷேகங்கள் நடக்க உள்ளன.அதேபோல், வேலூர் மாவட்டம் வளர்புரம் கிராமம் திருநாகேஸ்வர சுவாமி கோவில், ஆஞ்சநேயபுரம் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், திருத்தணி கோட்ட ஆறுமுகசுவாமி கோவில், விஜயராகவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.