ஜெகந்நாத பெருமாள் கோவிலில் சுக்லபட்ச மகாஅஷ்டமி ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2013 10:03
கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த நாதன்கோயில் ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோவிலில் சுக்லபட்ச மகாஅஷ்டமி ஹோமம் நேற்றுமுன்தினம் நடந்தது. வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில், 40ல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோயில் சேத்திரமாகும். நாதன்கோயில் கிராமத்தில் உள்ள இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது. நந்தி பெயரிலேயே தீர்த்தம் உடைய சிறப்பு பெற்ற தலம். பஞ்சாயுதபாணியாய் எழுந்தருளியிருக்கும் இப்பெருமானை திருமங்கை ஆழ்வார், 10 பாசுரங்கள் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த மண்ணுலகில் ஒப்பற்ற திவ்ய தேசமாகச் சிறப்பிக்கப்பட்டு, "தட்சிண ஜெகந்நாதம் என்றும் இத்தலம் அழைக்கப்பட்டு வருகிறது. மகாலெட்சுமி பிரார்த்தனை செய்து எட்டு அஷ்டமி விரதம் இருந்து, எட்டாவது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாக போற்றப்படுகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்ல பட்ச அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தால், மாங்கல்யதடை, குழந்தை பேரினண்மை, குடும்ப பிரச்சினைகள், நாட்பட்ட நோய்கள் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி என்பதால் செண்பகவல்லித்தாயாருக்கு நேற்றுமுன்தினம் காலை 11.30 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை சுக்லபட்ச மகாஅஷ்டமி ஹோமம் நடந்தது. பங்குனிமாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமியில் தாயாருக்கும், மூலவர் மற்றும் உற்சவ பெருமாளுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.