கோவில்பட்டி: கோவில்பட்டி ஓம்சக்தி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஓம்சக்தி கோயிலின் 6ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜைகளில் முதல் நாள் இரவில் 51 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். மறுநாள் காலையில் கணபதி பூஜையுடன் வருஷாபிஷேக சிறப்பு பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இதையடுத்து செண்பகவல்லியம்மன் கோயில் தெப்பக்குள பிள்ளையார் கோயிலில் இருந்து 60க்கும் மேற்பட்ட பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக, சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளை ஹரிஹரபட்டர், கணேசபட்டர், கணேசய்யர் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில் வீரவாஞ்சி நகர் சங்கரேஸ்வரி புற்றுக்கோயில் அர்ச்சகர் சுப்பிரமணியய்யர், தொழிலதிபர் பிரேமாமுருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஓம்சக்தி கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.