பதிவு செய்த நாள்
22
மார்
2013
10:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில் உள்ள, 22 தீர்த்தங்களில், புனித நீராடும் பக்தர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க, இன்று முதல், பக்தர்கள் கையில் அடையாள வில்லை பொருத்தப்பட உள்ளது. ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில், 22 புனித தீர்த்தங்களில் நீராட, ஒரு நபருக்கு கட்டணமாக, 25 ரூபாய், கோவில் நிர்வாகம் வசூலிக்கிறது. ஒரு பக்தருக்கு தண்ணீர் இறைத்து ஊற்ற கூலியாக, யாத்திரை பணியாளருக்கு, 12 ரூபாய் வழங்குகிறது. ஆனால், கூடுதலாக, ஒரு பக்தரிடம், 200 ரூபாய் வரை, யாத்திரை பணியாளர்கள் வசூலிக்கின்றனர்; எதிர்க்கும் பக்தர்கள் தாக்கப்பட்டனர். இது, கோவில் நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.இந்நிலையில், மதுரை ஐகோர்ட் பதிவாளர் தலைமையில், விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து, முறைகேடு இல்லாமல், கட்டணம் வசூலிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி, ராமேஸ்வரம் கோவிலில் நீராட வரும் பக்தர்கள் கையில், "பார்கோடிக் முறையில் தயாரிக்கப்பட்ட, அடையாள வில்லை (கேன்ட் டிராக்), இன்று முதல் அணிவிக்கப்பட உள்ளது. இதில் தீர்த்த கட்டண விவரம் இருக்கும்; தண்ணீரில் சேதமடையாது. டிக்கெட் எடுக்காமல், யாரும் தீர்த்தமாடவோ, கூடுதல் கட்டணம் வசூலிக்கவோ முடியாது. முதல் மற்றும் 22வது தீர்த்தங்களில், பக்தர்கள் கையில் கட்டப்பட்ட அடையாள வில்லை, கோவில் ஊழியர்களால் ஸ்கேன் செய்யப்படும். இதுதவிர, இந்த இரு இடங்களில் உள்ள சி.சி.டி.வி., கேமரா மூலம் பக்தர்கள் எண்ணிக்கை பதிவாகும். யாத்திரை பணியாளர்கள் முறைகேடு செய்தாலோ, பக்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலோ, கோவில் அலுவலகத்தில் உள்ள, "வீடியோ ஸ்கிரீனில் அதிகாரிகள் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க முடியும்.