Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குறுந்தொகை (பகுதி-5) குறுந்தொகை (பகுதி-7)
முதல் பக்கம் » குறுந்தொகை
குறுந்தொகை (பகுதி-6)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
01:03

குறுந்தொகை - 251. முல்லை - தோழி கூற்று

மடவ வாழி மஞ்ஞை மாயினம்
கால மாரி பெய்தென அதனெதிர்
ஆலலு மாலின பிடவும் பூத்தன
காரன் றிகுளை தீர்கநின் படரே
கழிந்த மாரிக் கொழிந்த பழநீர்  5
புதுநீர் கொளீஇய வுகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே.  
- இடைக்காடனார்.

குறுந்தொகை - 252. குறிஞ்சி - தலைவி கூற்று

நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த
கொடிய னாகிய குன்றுகெழு நாடன்
வருவதோர் காலை யின்முகந் திரியாது
கடவுட் கற்பி னவனெதிர் பேணி
மடவை மன்ற நீயெனக் கடவுபு  5
துனியல் வாழி தோழி சான்றோர்
புகழு முன்னர் நாணுப
பழியாங் கொல்பவோ காணுங் காலே.  
- கிடங்கிற் குலபதி நக்கண்ணனார்.  
 
குறுந்தொகை - 253. பாலை - தோழி கூற்று

கேளா ராகுவர் தோழி கேட்பின்
விழுமிது கழிவ தாயினு நெகிழ் நூற்
பூச்சே ரணையிற் பெருங்கவின் றொலைந்தநின்
நாட்டுயர் கெடப்பி னீடலர் மாதோ
ஒலிகழை நிவந்த ஓங்குமலைச் சாரற்  5
புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை
ஆறுசென் மாக்கள் சேக்கும்
கோடுயர் பிறங்கன் மலையிறந் தோரே.  
- பூங்கண்ணனார்.  

குறுந்தொகை - 254. பாலை - தலைவி கூற்று

இலையி லஞ்சினை யினவண் டார்ப்ப
முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்
தலையலர் வந்தன வாரா தோழி
துயிலின் கங்குல் துயிலவர் மறந்தனர்
பயினறுங் கதுப்பிற் பாயலு முள்ளார்  5
செய்பொருள் தரனசைஇச் சென்றோர்
எய்தின ராலென வரூஉந் தூதே.  
- பார்காப்பானார்.  

குறுந்தொகை - 255. பாலை - தோழி கூற்று

பொத்தில் காழ அத்த யாஅத்துப்
பொரியரை முழுமுதல் உருவக் குத்தி
மறங்கெழு தடக்கையின் வாங்கி உயங்குநடைச்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்
தடமருப் பியானை கண்டனர் தோழி  5
தங்கட னிறீஇய ரெண்ணி யிடந்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற வாறே.  
- கடுகு பெருந்தேவனார்.  

குறுந்தொகை - 256. பாலை - தலைவன் கூற்று

மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகை
பிணிகான் மென்கொம்பு பிணையொடு மார்ந்த
மானே றுகளுங் கானம் பிற்பட
வினைநலம் படீஇ வருது மவ்வரைத்
தாங்கல் ஒல்லுமோ பூங்குழை யோயெனச்  5
சொல்லா முன்னர் நில்லா வாகி
நீர்விலங் கழுத லானா
தேர்விலங் கினவால் தெரிவை கண்ணே.  
- .....  

குறுந்தொகை - 257. குறிஞ்சி - தலைவி கூற்று

வேரு முதலும் கோடு மோராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம்
அகலினும் அகலா தாகி  5
இகலுந் தோழிநங் காமத்துப் பகையே.  
- உறையூர்ச் சிறுகந்தனார்.  
 
குறுந்தொகை - 258. மருதம் - தோழி கூற்று

வாரலெஞ் சேரி தாரனின் றாரே
அலரா கின்றாற் பெரும காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்துகோட் டியானைச் சேந்தன் தந்தை
அரியலம் புகவி னந்தோட்டு வேட்டை  5
நிரைய ஒள்வாள் இளைஞர் பெருமகன்
அழிசி ஆர்க்கா டன்ன விவள்
பழிதீர் மாணலந் தொலைதல் கண்டே.  
- பரணர்.  

குறுந்தொகை - 259. குறிஞ்சி - தோழி கூற்று

மழைசேர்ந் தெழுதரு மாரிக் குன்றத்
தருவி யார்ந்த தண்ணறுங் காந்தள்
முகையவிழந் தானா நாறு நறுநுதல்
பல்லிதழ் மழைக்கண் மாஅ யோயே
ஒல்வை யாயினுங் கொல்வை யாயினும்  5
நீயளந் தறிவைநின் புரைமை வாய்போற்
பொய்ம்மொழி கூறல தெவனோ
நெஞ்ச நன்றே நின்வயி னானே.  
- பரணர்.  

குறுந்தொகை - 260. பாலை - தோழி கூற்று

குருகும் இருவிசும் பிவரும் புதலும்
வரிவண் டூத வாய்நெகிழ்ந் தனவே
சுரிவளைப் பொலிந்த தோளுஞ் செற்றும்
வருவர்கொல் வாழி தோழி பொருவார்
மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை  5
வண்தேர்த் தொண்டையர் வழையம லடுக்கத்துக்
கன்றி லோரா விலங்கிய
புன்றா ளோமைய சுரனிறந் தோரே.  
- கல்லாடனார்.  

குறுந்தொகை - 261. குறிஞ்சி - தலைவி கூற்று

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
நள்ளென் யாமத் தையெனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்  5
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.  
- கழார்க் கீரனெயிற்றியார்.  

குறுந்தொகை - 262. பாலை - தோழி கூற்று

ஊஉ ரலரெழச் சேரி கல்லென
ஆனா தலைக்கும் அறனி லன்னை
தானே இருக்க தன்மனை யானே
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க
உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு  5
விண்தொட நிவந்த விலங்குமலைக் கவாஅற்
கரும்புநடு பாத்தி யன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே.  
- பாலைபாடிய பெருங்கடுங்கோ

குறுந்தொகை - 263. குறிஞ்சி - தோழி கூற்று

மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச்
செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத்
தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல்  5
நோதக் கன்றே தோழி மால்வரை
மழைவிளை யாடு நாடனைப்
பிழையே மாகிய நாமிதற் படவே.  
- பெருஞ்சாத்தனார்.

குறுந்தொகை - 264. குறிஞ்சி - தலைவி கூற்று

கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரை
ஒலிநெடும் பீலி துயில்வர இயலி
ஆடுமயி லகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தக் காலும் பயப்பொல் லாதே.  5
- கபிலர்.  

குறுந்தொகை - 265. குறிஞ்சி - தோழி கூற்று

காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும்
தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடனறி மாக்கள் போல இடன்விட்
டிதழ்தளை யவிழ்ந்த ஏகல் வெற்பன்  5
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின்னிலை
யான்றனக் குரைத்தனெ னாகத்
தானா ணினனி தாகா வாறே.  
- கருவூர்க்கதப் பிள்ளை.   

குறுந்தொகை - 266. பாலை - தலைவி கூற்று

நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன்
றின்னா இரவின் இன்றுணை யாகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
மறப்புரும் பணைத்தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே.  5
- நக்கீரனார்.  

குறுந்தொகை - 267. பாலை - தலைவன் கூற்று

இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய  5
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும்
உறன்முறை மரபிற் கூற்றத்
தறனில் கோணற் கறிந்திசி னோரே.  
- காலெறி கடிகையார்.  

குறுந்தொகை - 268. குறிஞ்சி - தோழி கூற்று

சேறிரோ எனச் செப்பலு மாற்றாம்
வருவி ரோஎன வினவலும் வினவாம்
யாங்குச் செய்வாங்கொல் தோழிபாம்பின்
பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து  5
நெடுமென் பணைத்தோள் அடைந்திசி னோரே.  
- கருவூர்ச் சேரமான் சாத்தனார்.

குறுந்தொகை - 269. நெய்தல் - தலைவி கூற்று

சேயாறு சென்று துனைபரி யசாவா
துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல
வயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும்
நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய  5
உப்புவிளை கழனிச் சென்றனள் இதனால்
பனியிரும் மரப்பிற் சேர்ப்பற்
கினிவரி னெளியள் என்னும் தூதே.  
- கல்லாடனார்.  

குறுந்தொகை - 270. முல்லை - தலைவன் கூற்று

தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வீழுறை யினிய சிதறி ஊழிற்
கடிப்பிடு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெறுவான் யாமே
செய்வினை முடித்த செம்ம லுள்ளமோ  5
டிவளின் மேவின மாகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே.  
- பாண்டியன் பன்னாடுதந்தான்.  

குறுந்தொகை - 271. மருதம் - தலைவி கூற்று
 
அருவி யன்ன பருவறை சிதறி
யாறுநிறை பகரு நாடனைத் தேறி
உற்றது மன்னு மொருநாள் மற்றது
தவப்பன் னாள்தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோயா கின்றே.  5
- அழிசி நச்சாத்தனார்.  

குறுந்தெகை - 272. குறிஞ்சி - தலைவன் கூற்று

தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட
வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த
நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த
புன்கண் மடமா னேர்படத் தன்னையர்
சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக்  5
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறுகொண் டன்ன வுண்கண்
நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே.  
- ஒருசிறைப் பெரியனார்.  

குறுந்தொகை - 273. பாலை - தோழி கூற்று

அல்குறு பொழுதில் தாதுமுகை தயங்கப்
பெருங்காட் டுளரும் அசைவளி போலத்
தண்ணிய கமழும் ஒண்ணுத லோயே
நொந்தனை யாயிற் கண்டது மொழிவல்
பெருந்தேன் கண்படு வரையின் முதுமால்  5
பறியா தேறிய மடவோன் போல
ஏமாந் தன்றிவ் வுலகம்
நாமுளே மாகப் பிரியலன் தெளிமே.  
- சிறைக்குடி யாந்தையார்.  

குறுந்தொகை - 274. பாலை - தலைவன் கூற்று

புறவுப் புறத்தன்ன புன்கா லுகாஅய்க்
காசினை யன்ன நளிகனி யுதிர
விடுகணை வில்லொடு பற்றிக் கோடிவர்பு
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர்நசை வேட்கையி னார்மென்று தணியும்  5
இன்னாக் கானமும் இனிய பொன்னொடு
மணிமிடை யல்குல் மடந்தை
அணிமுலை யாக முயகினஞ் செலினே.  
- உருத்திரனார்.  

குறுந்தொகை - 275. முல்லை - தோழி கூற்று

முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக்
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி
எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை யினத்துப்
புல்லார் நல்லான் பூண்மணி கொல்லோ
செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு  5
வல்வில் இளையர் பக்கம் போற்ற
ஈர்மணற் காட்டாறு வரூஉம்
தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே.  
- ஒக்கூர் மாசாத்தியார்.  

குறுந்தொகை - 276. குறிஞ்சி - தலைவன் கூற்று

பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும்
பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள்
உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய
தொய்பில் காப்போர் அறிதலும் அறியார்
முறையுடை யரசன் செங்கோல் அவையத்  5
தியான்றற் கடவின் யாங்கா வதுகொல்
பெரிதும் பேதை மன்ற
அளிதோ னேயிவ் வழுங்கல் ஊரே.  
- கோழிக் கொற்றனார்.  

குறுந்தொகை - 277. பாலை - தோழி கூற்று

ஆசில் தெருவில் நாயில் வியன்கடைச்
செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது
ஓரிற் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே  5
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவ தென்றி
அக்கால் வருவரெங் காத லோரே.  
- ஓரிற் பிச்சையார்.  

குறுந்தொகை - 278. பாலை - தலைவி கூற்று

உறுவளி உளரிய அந்தளிர் மாஅத்து
முறிகண் டன்ன மெல்லென் சீறடிச்
சிறுபசும் பாவையும் எம்மும் உள்ளார்
கொடியர் வாழி தோழி கடுவன்
ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்  5
தேற்பன ஏற்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே.  
- பேரி சாத்தனார்.  

குறுந்தொகை - 279. முல்லை - தலைவி கூற்று

திரிமருப் பெருமை யிருணிற மையான்
வரிமிடறு யாத்த பகுவாய்த் தெண்மணி
புலம்புகொள் யாமத் தியங்குதொ றிசைக்கும்
இதுபொழு தாகவும் வாரார் கொல்லோ
மழைகழூஉ மறந்த மாயிருந் துறுகல்  5
துகள்சூழ் யானையிற் பொலியத் தோன்றும்
இரும்பல் குன்றம் போகித்
திருந்திறைப் பணைத்தோள் உள்ளா தோரே.  
- மதுரை மருதனிளநாகனார்.  

குறுந்தொகை - 280. குறிஞ்சி - தலைவன் கூற்று

கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்
நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சி லோதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.  5
- நக்கீரனார்.  

குறுந்தொகை - 281. பாலை - தலைவி கூற்று

வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்
டத்த வேம்பி னமலை வான்பூச்
சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக்
குன்றுதலை மணந்த கானம்  5
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே.  
- குடவாயிற் கீரத்தனார்.  

குறுந்தொகை - 282. பாலை - தோழி கூற்று

செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த
கௌவை நாற்றின் காரிரு ளோரிலை
நவ்வி நாண்மறி கவ்விக் கடன்கழிக்கும்
காரெதிர் தண்புனங் காணிற் கைவளை
நீர்திகழ் சிலம்பின் ஓராங் கவிழ்ந்த  5
வெண்கூ தாளத் தந்தூம்பு புதுமலர்
ஆர்கழல் புகுவ போலச்
சோர்குவ வல்ல என்பர்கொல் நமரே.  
- நாகம் போத்தனார்.  

குறுந்தொகை - 283. பாலை - தலைவி கூற்று

உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி யென்றும்
கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்  5
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடை பருந்துபார்த் திருக்கும்
நெடுமூ திடைய நீரில் ஆறே.  
- பாலை பாடிய பெருங்கடுங்கோ.  

குறுந்தொகை - 284. குறிஞ்சி - தோழி கூற்று

பொருத யானைப் புகர்முகங் கடுப்ப
மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன்
ஒண்செங் காந்தள் அவிழும் நாடன்
அறவ னாயினும் அல்ல னாயினும்
நம்மே சுவரோ தம்மிலர் கொல்லோ  5
வரையிற் றாழ்ந்த வால்வெள் ளருவி
கொன்னிலைக் குரம்பையி னிழிதரும்
இன்னா திருந்தவிச் சிறுகுடி யோரே.  
- மிளைவேள் தித்தனார்.  

குறுந்தொகை - 285. பாலை - தலைவி கூற்று

வைகல் வைகல் வைகவும் வாரார்
எல்லா எல்லை எல்லையுந் தோன்றார்
யாண்டுளர் கொல்லோ தோழி ஈண்டிவர்
சொல்லிய பருவமோ இதுவே பல்லூழ்
புன்புறப் பெடையொடு பயிரி யின்புற  5
இமைக்கண் ஏதா கின்றோ ஞெமைத்தலை
ஊனசைஇ யொருபருந் திருக்கும்
வானுயர் பிறங்கல் மலையிறந் தோரே.  
- பூதத் தேவனார்.  

குறுந்தொகை - 286. குறிஞ்சி - தலைவன் கூற்று

உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்த மூறும்அஞ் செவ்வாய்க் கமழகில்
ஆர நாறும் அறல்போற் கூந்தல்
பேரமர் மழைக்கட் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.  5
- எயிற்றியனார்.  

குறுந்தொகை - 287. முல்லை - தோழி கூற்று

அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ
முந்நாற் றிங்க ணிறைபொறுத் தசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு  5
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே.  
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.  

குறுந்தொகை - 288. குறிஞ்சி - தலைவி கூற்று

கறிவளர் அடுக்கத் தாங்கண் முறியருந்து
குரங்கொருங் கிருக்கும் பெருங்க னாடன்
இனிய னாகலி னினத்தி னியன்ற
இன்னா மையினு மினிதோ
இனிதெனப் படூஉம் புத்தே ணாடே.  5
- கபிலர்.  

குறுந்தொகை - 289. முல்லை - தலைவி கூற்று

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழைபிசைந் தனையே மாகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்ப தன்றியும்
மழையுந் தோழி மான்றுபட் டன்றே  5
பட்ட மாரி படாஅக் கண்ணும்
அவர்திறத் திரங்கு நம்மினும்
நந்திறத் திரங்குமிவ் வழங்கல் ஊரே.  
- பெருங் கண்ணனார்.  

குறுந்தொகை - 290. நெய்தல் - தலைவி கூற்று

காமந் தாங்குமதி யென்போர் தாம
தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல்
யாமெங் காதலர்க் காணே மாயிற்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல  5
மெல்ல மெல்ல இல்லா குதுமே.  
- கல்பொரு சிறுநுரையார்.  

குறுந்தொகை - 291. குறிஞ்சி - தலைவன் கூற்று

சுடுபுன மருங்கிற் கலித்த வேனற்
படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையா இன்பா ணித்தே
கிளியவள் விளியென எழலொல் லாவே
அதுபுலந் தழுத கண்ணே சாரற்  5
குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை
வண்டுபயில் பல்லிதழ் கலைஇத்
தண்துளிக் கேற்ற மலர்போன் றனவே.  
- கபிலர்.  

குறுந்தொகை - 292. குறிஞ்சி - தோழி கூற்று

மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல  5
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே.  
- பரணர்.  

குறுந்தொகை - 293. மருதம் - தலைவி கூற்று

கள்ளிற் கேளிர் ஆத்திரை யுள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சியங் குறுங்காய்
ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி யருமன் மூதூ ரன்ன
அயவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை  5
தித்திக் குறங்கின் ஊழ்மா றலைப்ப
வருமே சேயிழை யந்திற்
கொழுநற் காணிய அளியேன் மன்னே.  
- கள்ளில் ஆத்திரையனார்.  

குறுந்தொகை - 294. நெய்தல் - தோழி கூற்று

கடலுட னாடியும் கான லல்கியும்
தொடலை யாயமொடு தழுவணி யயர்ந்தும்
நொதுமலர் போலக் கதுமென வந்து
முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே
தித்தி பரந்த பைத்தக லல்குல்  5
திருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத்
தழையினும் உழையிற் போகான்
தான்தந் தனன்யாய் காத்தோம் பல்லே.  
- அஞ்சிலாந்தையார்.  

குறுந்தொகை - 295. மருதம் - தோழி கூற்று

உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும்
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே யிதோ
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென  5
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே.  
- தூங்கலோரியார்.  
 
குறுந்தொகை - 296. நெய்தல் - தலைவி கூற்று

அம்ம வாழி தோழி புன்னை
அலங்குசினை யிருந்த அஞ்சிறை நாரை
உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற்
கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணந் துறைவற் காணின் முன்னின்று  5
கடிய கழறல் ஓம்புமதி தொடியோள்
இன்ன ளாகத் துறத்தல்
நும்மின் தகுமோ என்றனை துணிந்தே.  
- பெரும்பாக்கனார்.

குறுந்தொகை - 297. குறிஞ்சி - தோழி கூற்று

அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர்
வைவார் வாளி விறற்பகை பேணார்
மாறுநின் றிறந்த ஆறுசெல் வம்பலர்
உவலிடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல்லுயர் நனந்தலை நல்ல கூறிப்  5
புணர்ந்துடன் போதல் பொருளென
உணர்ந்தேன் மன்றவவர் உணரா வூங்கே.  
- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.  

குறுந்தொகை - 298. குறிஞ்சி - தோழி கூற்று

சேரி சேர மெல்ல வந்துவந்
தரிது வாய்விட் டினிய கூறி
வைகல் தோறும் நிறம்பெயர்ந் துறையுமவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி
இன்கடுங் கள்ளின் அகுதை தந்தை  5
வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர்
மடப்பிடிப் பரிசில் மானப்
பிறிதொன்று குறித்ததவ னெடும்புற நிலையே.  
- பரணர்.  

குறுந்தொகை - 299. நெய்தல் - தலைவி கூற்று

இதுமற் றெவனோ தோழி முதுநீர்ப்
புணரி திளைக்கும் புள்ளிமிழ் கானல்
இணரவிழ் புன்னை யெக்கர் நீழற்
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டன மன்னெங் கண்ணே யவன்சொற்  5
கேட்டன மன்னெஞ் செவியே மற்றவன்
மணப்பின் மாணல மெய்தித்
தணப்பின் நெகிழ்பவெந் தடமென் றோளே.  
- வெண்மணிப்பூதியார்.

குறுந்தொகை - 300. குறிஞ்சி - தலைவன் கூற்று

குவளை நாறுங் குவையிருங் கூந்தல்
ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்க்
குண்டுநீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண்பல் தித்தி மாஅ யோயே
நீயே, அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையே
 5
யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்கும்
கடல்சூழ் மண்டிலம் பெறினும்
விடல்சூ ழலனான் நின்னுடை நட்பே.  
- சிறைக்குடி ஆந்தையார்  

 
மேலும் குறுந்தொகை »
temple news
குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் குறுந்தொகை எனப்பட்டது. இந்நூல் 400 பாடல்களைக் ... மேலும்
 
குறுந்தொகை - கடவுள் வாழ்த்து தாமரை புரையுங் காமர் சேவடிப்பவழத் தன்ன மேனித் திகழொளிக்குன்றி ... மேலும்
 
குறுந்தொகை - 51. நெய்தல் - தோழி கூற்று கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்நூலறு முத்திற் காலொடு ... மேலும்
 
குறுந்தொகை - 101. குறிஞ்சி - தலைவன் கூற்று விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்அரிதுபெறு சிறப்பிற் ... மேலும்
 
குறுந்தொகை - 151. பாலை - தலைவன் கூற்று வங்காக் கடந்த செங்காற் பேடைஎழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar