பதிவு செய்த நாள்
21
மார்
2013
04:03
ஐங்குறுநூறு - 36. வரவுரைத்த பத்து
அத்த பலவின் வெயில்தின் சிறுகாய்
அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும்
காடுபின் ஒழிய வந்தனர் தீர்கினிப்
பல்லிதல் உண்கண் மடந்தைநின்
நல்லெழில் அல்குல் வாடிய நிலையே. 351
விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகிஅல் அன்ன விழுப்பிணர்ப்
பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும்
வெஞ்சுரம் அரிய என்னார்
வந்தனர் தோழிநம் காத லோரே. 352
எரிக்கொடி கலை இய செவ்வரை போலச்
சுடர்ப்பூண் விளங்கும் எந்தெழில் அகலம்
நீ இனிது முயங்க வந்தனர்
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. 353
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றாஇ
மறியுடை மான்பிணை கொள்ளாது கழியும்
அரிய சுரன்வந் தனரே
தெரியிழை அரிவைநின் பண்புதர விரைந்தே. 354
திருந்திழை அரிவை நின்னலம் உள்ளி
அருஞ்செயல் பொருட்பிணி பெருந்திரு உறுகெனச்
சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச்
சிறுகண் யானை திரிதரும்
நெறிவிலங்கு அதர கானத் தானே. 355
உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்
யானை பிணித்த பொன்புனை கயிற்றின்
ஒள்ளெரி மேய்ந்த சுரத்திடை
உள்ளம் வாங்கத் தந்தநின் குணனே. 356
குரவம் மலர மரவம் பூப்பச்
சுரன்அணி கொண்ட கானம் காணூஉ
அழுங்குக செய்பொருள் செலவுஎன விரும்பிநின்
அம்கலிழ் மாமை கவின
வந்தனர் தோழிநம் காத லோரே. 357
கோடுயர் பன்மலை இறந்தனர் ஆயினும்
நீடவிடுமோ மற்றே நீடுநினைந்து
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி
உடிஅத்தெழு வெள்ள மாகிய கண்ணே. 358
அரும்பொருள் வேட்கைய மாகிநின் துறந்து
பெருங்கல் அதரிடைப் பிரிந்த காலைத்
தவநனி நெடிய வாயின இனியே
அணியிழை உள்ளியாம் வருதலின்
அணிய வாயின சுரத்தைடை யாறே. 359
எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடை
அரிய வாயினும் எளிய அன்றே
அவவூறு நெஞ்சம் கலவுநனி விரும்பிக்
கடுமான் திண்தேர் கடைஇ
நெடுமான் நோக்கிநின் உள்ளி வரவே. 360
ஐங்குறுநூறு - 37. முன்னிலைப் பத்து
உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகந்துறை
வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத்
தொடலை தை இய மடவரல் மகளே
கண்ணினும் கதவநின் முலையே
முலையினும் கதவநின் தடமென் தோளே. 361
பதுக்கைத் தாய ஒதுக்கருங் கவலைச்
சிறுகண் யானை உறுபகை நினையாது
யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப
அருள்புரி நெஞ்சம் உய்த்தர
இருள்பொர நின்ற இரவி னானே. 362
சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்
கொலைவல் எயினர் தங்கைநின் முலைய
சுணங்கென நினைதி நீயே
அணங்கென நினையும்என் அணங்குறு நெஞ்சே. 363
முளமா வல்சி எயினர் தங்கை
இளமா எயிற்றிக்கும் இந்நிலை அறியச்
சொல்லினேன் இரக்கும் அளவை
வெள்வேல் விடலை விரையா தீமே. 364
கணமா தொலைச்சித் தன்னையர் தந்த
நிணவூன் வல்சிப் படுபுள் ஒப்பும்
நலமாண் எயிற்றி போலப் பலமிகு
நல்நலம் நயவர உடையை
என்நோற் றனையோ மாஇன் தளிரே. 365
அன்னாய் வாழிவேண் டன்னை தோழி
பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை
கொன்னே கடவுதி யாயின் என்னதூஉம்
அறிய ஆகுமோ மற்றே
முறியிணர்க் கோங்கM பயந்த மாறே. 366
பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ
விரியிணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி
விரிவுமலர் அணிந்த வேனில் கான்யாற்றுத்
தேரொடு குறுக வந்தோன்
பேரொடு புணர்ந்தன்று அன்னைஇவள் உயிரே. 367
எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்பலர்
பொரிப்பூம் புன்கின் புகர்நிழல் வரிக்கும்
தண்பத வேனில் இன்ப நுகர்ச்சி
எம்மொடு கொண்மோ பெருமநின்
எம்மெல் ஓதி அழிவிலள் எனினே. 368
வளமலர் ததிந்த வண்டுபடு நறும்பொழில்
முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறிநீ செய்தனை என்ப அலரே
குரவ நீள்சினை உறையும்
பருவ மாக்குயில் கௌவையில் பெரிதே. 369
வண்சினைக் கோங்கின் தண்கமழ் படலை
இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப
நீநயந்து உறையப் பட்டோள்
யாவ ளோஎம் மறையா தீமே. 370
ஐங்குறுநூறு - 38. மக்கட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து.
மள்ளர் கோட்டின் மஞ்ஞை யாலும்
உயர்நெடும் குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி இனிய வாகுக தில்ல
அறநெறி இதுவெனத் தெளிந்தஎன்
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே. 371
என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை
நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு
அழுங்கல் மூதூர் அலரெழச்
செழும்பல் குன்றம் இறந்தஎன் மகளே. 372
நினைத்தொறும் கலிலும் இடும்பை எய்துக
புலிக்கோட் பிழைட்த கவைக்கோட்டு முதுகலை
மான்பிணை அணைதர ஆண்குரல் விளிக்கும்
வெஞ்சுரம் என்மகள் உய்த்த
வம்பமை வல்வில்விடலை தாயே. 373
பல்லூல் நினைப்பினும் நல்லென் றூழ
மிளி முன்பின் காளை காப்ப
முடியகம் புகாக் கூந்தலள்
கடுவனும் அறியாக் காடுஇறந் தோளே. 374
இதுவென் பாவை பாவை இதுஎன்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர்நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி என்றிவை
காண்தொறும் காண்தொறும் கலங்க
நீங்கின ளோஎன் பூங்க ணோளே. 375
நாள்தொறும் கலிழும் என்னினும் இடைநின்று
காடுபடு தீயின் கனலியர் மாதோ
நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப்
பூப்புரை உண்கண் மடவரல்
போக்கிய புணர்த்த அறனில் பாலே. 376
நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்றஎன் மகளே
பந்தும் பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே. 377
செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலையாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன் தேமொழித்
துணையிலள் கலிழும் நெஞ்சின்
இணையேர் உண்கண் இவட்குநோ வதுமே. 378
தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின்
இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரை
இனக்களிறு வழங்கும் சோலை
வயக்குறு வெள்வேல் அவற்புணர்ந்து செலவே. 379
அத்தம் நீளிடை அவனொடு போகிய
முத்தேர் வெண்பல் முகிழ்நகை மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்றஅவள் ஆயத் தோரே. 380
ஐங்குறுநூறு - 39. உடன்போக்கின் கண் இடைச் சுரத்து உரைத்த பத்து.
பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர்
யார்கொல் அளியர் தாமே வார்சிறைக்
குறுங்கால் மகன்றில் அன்ன
உடன்புணர் கொள்கைக் காத லோரே. 381
புன்னொலிக்கு அமர்த்த கண்ணன் வெள்வேல்
திருந்துகழ் காளையொடு அருஞ்சுரம் கழிவோள்
எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப்
புனையிழை மகளிர்ப் பயந்த
மனைகெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே. 382
கோள்சுரும்பு அரற்றும் நாள்சுரத்து அமன்ற
நெடுங்காண் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி
வல்ஞ்சுரி வாலிணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ள மகிழ்கூர்ந்துஅன்றே
பஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
அம்சாய் கூந்தல் ஆய்வது கண்டே. 383
சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர்
நும்மொன்று இரந்தனென் மொழிவல் எம்மூர்
ஆய்நயந்து எடுத்த ஆய்நலம் கலின
ஆரிடை இறந்தனள் என்மின்
நேர் இறை முன்கைஎன் ஆயத் தோர்க்கே. 384
கடுங்கண் காளையொட்ய் நெடுந்தேர் ஏறிக்
கோள்வல் வேங்கை மலையிறக்கொழிய
வேறுபல் அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக்
கூறுமின் வாழியோ ஆறுசெல் மாக்கள்
நல்தோள் நயந்துபா ராட்டி
என்கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே. 385
புன்கண் யானையொடு புலிவழங்கு அத்தம்
நய்ந்த காதலற் புணர்ந்துசென் றனளே
நெடுஞ்சுவர் நல்லில் மருண்ட
இடும்பை உறவிநின் கடுஞ்சூல் மகளே. 386
அறம்புரி அருமறை நவின்ற நாவில்
திறம்புரி கொள்கை அந்தணீர் தொழுவலென்று
ஒள்தொடி வினவும் பேதையம் பெண்டே
கண்டனெம் அம்ம சுரத்திடை அவளை
இந்துணை இனிதுபா ராட்டக்
குன்றுயர் பிறங்கல் மலையிறந்த் தோளே. 387
நெரும்பவிர் கனலி உர்ப்புசினந் தணியக்
கருங்கால் யாத்து வரிநிழல் இரீஇச்
சிறுவரை இறப்பின் காண்குவை செறிதொடிப்
பொன்னேர் மேணி மடந்தையொடு
வென்வேல் விடலை முன்னிய சுரனே. 388
செய்வினை பொலிந்த செறிகழல் நோந்தாள்
மையணல் காளையொடு பைய இயலிப்
பாவை யன்னஎன் ஆய்தொடி மடந்தை
சென்றனள் என்றிர் ஐய
ஒன்றின வோஅவள் அம்சிலம் படியே. 389
நல்லோர் ஆங்கண் பர்ந்துகை தொழுது
பல்லூழ் மறுகி வனவு வோயே
திண்தோள் வல்வில் காளையொடு
கண்டனெம் மன்ற சுரத்திடை யாமே. 390
ஐங்குறுநூறு - 40. மறுதரவுப் பத்து
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெம்சின விறல்வேல் காளையொடு
அம்சில் ஓதியை வரக்கரைந் தீமே. 391
வேய்வனப்பு இழந்த தோளும் வெயில்தெற
வாய்கவின் தொந்த நுதலும் நோக்கிப்
பரியல் வாழி தோழி பரியின்
எல்லைஇல் இடும்பை தரூஉம்
நல்வரை நாடனொடு வந்த மாறே. 392
துறந்ததன் கொண்டு துயரடச் சாஅய்
அறம்புலந்து பழிக்கும் அண்க ணாட்டி
எவ்வ நெஞ்சிற்கு ஏம மாக
வந்தன ளோநின் மகளே
வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே. 393
மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த
அன்பில் அறானும் அருளிற்று மன்ற
வெஞ்சுரம் இறந்த அம்சில் ஓதிப்
பெருமட மான்பிணை அலைத்த
சிறுநுதல் குறுமகள் காட்டிய வம்மே. 394
முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூர்எரிச்
சுடர்விடு நெடுங்கொடி விடர்குகை முழங்கும்
இன்னா அருஞ்சுரம் தீர்ந்தனம் மென்மெல
ஏகுமதி வாழியோ குறுமகள் போதுகலந்து
கறங்கிசை அருவி வீழும்
பிறங்கிரும் சோலைநம் மலைகெழு நாட்டே. 395
புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர் கொய்துநிண்
கதுப்பயல் அணியும் அளவை பைபயச்
சுரத்திடை அயர்ச்சியை ஆறுக மடந்தை
கல்கெழு சிறப்பின் நம்மூர்
எவ்விருந் தாகிப் புகுக நாமே. 396
கவிழ்மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்
சுரன்அணி வாரா நின்றனள் என்பது
முன்னுற விரந்தநீர் உரைமின்
இன்நகை முறுவல்என் ஆயத்தோர்க்கே. 397
புள்ளும் அறியாப் பல்பழம் பழுனி
மடமான் அறியாத் தடநீர் நிலைஇச்
சுரநனி இனிய வாகுக என்று
நினைத்தொறும் கலிழும் என்னினும்
மிகப்பெரிது புலம்பின்று தோழிநம் ஊரே. 398
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே. 399
மள்ளர் அன்ன மரவந் தழீஇ
மகளிர் அன்ன ஆடுகொடி நுடக்கும்
அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில்
காதல் புணர்ந்தனள் ஆகி ஆய்கழல்
வெஞ்சின விரல்வேல் காலையொடு
இன்றுபுகு தருமென வந்தன்று வந்தன்று தூதே. 400