Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கலித்தொகை (பகுதி-4)
முதல் பக்கம் » கலித்தொகை
கலித்தொகை (பகுதி-3)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
04:03

கலித்தொகை - மருதக் கலி 91

அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்,
புரி நெகிழ் முல்லை, நறவோடு, அமைந்த
தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்
பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின்
இன்று நன்று, என்னை அணி; 5
அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்குஎவன்,
ஐயத்தால்? என்னைக் கதியாதி; தீது இன்மை
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு;
மற்றது, அறிவல், யான் நின் சூள்; அனைத்தாக நல்லார்
செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார் 10
கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின்
தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி
அரி மதர் உண் கண்ணார் ஆராக் கவவின்,
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும்
செரு ஒழிந்தேன்; சென்றீ, இனி; 15
தெரியிழாய்! தேற்றாய் சிவந்தனை காண்பாய், நீ தீது இன்மை
ஆற்றின் நிறுப்பல் பணிந்து;
அன்னதேல், ஆற்றல் காண்
வேறுபட்டாங்கே கலுழ்தி; அகப்படின்,
மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும் 20
கூறி உணர்த்தலும் வேண்டாது; மற்று நீ
மாணா செயினும், மறுத்து, ஆங்கே நின்வயின்
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய்,
பேணாய் நீ பெட்பச் செயல்.

கலித்தொகை - மருதக் கலி 92

புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக்
கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே:
முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி,
மயங்கி, மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது,
உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்; 5
அரிதின் அறம் செய்யா, ஆன்றோர், உலகும்,
உரிதின் ஒருதலைப்பு எய்தலும் வீழ்வார்ப்
பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில்
தருதல் தகையாதான் மற்று;
நனவினால் போலும், நறுநுதால்! அல்கல் 10
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக்
கரை அணி காவினகத்து;
உரை, இனி தண்டாத் தீம் சாயல் நெடுந்தகாய்! அவ் வழிக்
கண்டது எவன் மற்று நீ; 15
கண்டது உடன் அமர் ஆயமொடு அவ் விசும்பு ஆயும்
மட நடை மா இனம், அந்தி அமையத்து,
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால்,
இறை கொண்டு இருந்தன்ன நல்லாரைக் கண்டேன்,
துறை கொண்டு உயர் மணல்மேல் ஒன்றி நிறைவதை, 20
ஓர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து
வேட்டதே கண்டாய், கனா;
கேட்டை விரையல் நீ; மற்று வெகுள்வாய்! உரை ஆண்டு
இதுவாகும், இன் நகை நல்லாய்! பொதுவாக
தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர் 25
பூங் கொடி வாங்கி, இணர் கொய்ய, ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனை அரண் போல உடைந்தன்று, அக் காவில்
துனை வரி வண்டின் இனம்
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக் 30
காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச,
அவருள்,
ஒருத்தி, செயல் அமை கோதை நகை;
ஒருத்தி, இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப;
ஒருத்தி, தெரி முத்தம், சேர்ந்த, திலகம்; 35
ஒருத்தி, அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க,
ஒருத்தி, வரி ஆர் அகல் அல்குல் காழகம்;
ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப:
ஒருத்தி, புலவியால் புல்லாதிருந்தாள், அலவுற்று
வண்டினம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன் 40
தண் தார் அகலம் புகும்;
ஒருத்தி, அடி தாழ் கலிங்கம் தழீஇ, ஒரு கை
முடி தாழ் இருங் கூந்தல் பற்றி, பூ வேய்ந்த
கடி கயம் பாயும், அலந்து
ஒருத்தி, கணம் கொண்டு அவை மூச, கை ஆற்றாள், பூண்ட 45
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு, ஓச்சி,
வணங்கு காழ் வங்கம் புகும்;
ஒருத்தி, இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள்,
பறந்தவை மூசக் கடிவாள், கடியும்
இடம் தேற்றாள் சோர்ந்தனள், கை; 50
ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக்
கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்,
தெரியிழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார், வண்டிற்கு
வண்டலவர்; கண்டேன், யான்
நின்னை நின் பெண்டிர் புலந்தனவும், நீ அவர் 55
முன் அடி ஒல்கி உணர்த்தினவும், பல் மாண்
கனவின் தலையிட்டு உரையல்; சினைஇ யான்
செய்வது இல் என்பதோ? கூறு;
பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான்
நல் வாயாக் காண்டை நறுநுதால்! பல் மாணும் 60
கூடிப் புணர்ந்தீர்! பிரியன்மின்; நீடிப்
பிரிந்தீர்! புணர் தம்மின் என்பன போல,
அரும்பு அவிழ் பூஞ் சினைதோறும் இருங் குயில்
ஆனாது அகவும் பொழுதினான், மேவர,
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் 65
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார்,
ஆனா விருப்போடு அணி அயர்ப, காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு.

கலித்தொகை - மருதக் கலி 93

வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய,
தண்டாத் தீம் சாயற் பரத்தை, வியல் மார்ப!
பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீய,
கண்டது எவன்? மற்று உரை;
நன்றும் தடைஇய மென் தோளாய்! கேட்டீவாயாயின் 5
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
கடவுளர்கண் தங்கினேன்;
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ
கடவுண்மை கொண்டு ஒழுகுவார்;
அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன் 10
முத்து ஏர் முறுவலாய்! நாம் மணம் புக்கக்கால்,
இப் போழ்து போழ்து என்று அது வாய்ப்பக் கூறிய
அக் கடவுள், மற்று அக் கடவுள்  அது ஒக்கும்
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்;
மாயமோ; கைப்படுக்கப் பட்டாய் நீ; கண்டாரை 15
வாயாக யாம் கூற வேட்டீவாய்! கேள், இனி;
பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்பப்
பறி முறை நேர்ந்த நகாராக, கண்டார்க்கு
இறு முறை செய்யும் உருவொடு, நும் இல்,
செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ; 20
நறுந் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரல் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப,
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள், நீ
பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ;
ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச் 25
சூர் கொன்ற செவ்வேலாற் பாடி, பல நாளும்,
ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு
மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ;
கண்ட கடவுளர்தம்முளும், நின்னை
வெறி கொள் வியன் மார்பு வேறாகச் செய்து, 30
குறி கொளச் செய்தார் யார்? செப்பு: மற்று யாரும்
சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்!
தேறினேன்; சென்றீ நீ செல்லா விடுவாயேல்,
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய
நெட்டிருங் கூந்தற் கடவுளர் எல்லார்க்கும் 35
முட்டுப்பாடு ஆகலும் உண்டு.

கலித்தொகை - மருதக் கலி 94

என் நோற்றனைகொல்லோ
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றீத்தை;
அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான், 5
ஆண்தலைக்கு ஈன்ற பறழ் மகனே நீ! எம்மை,
வேண்டுவல் என்று விஇலக்கினை; நின் போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று;
மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி,
நெறித்துவிட்டன்ன நிறை ஏரால் என்னைப் 10
பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்;
நீ நல்கின் உண்டு, என் உயிர்
குறிப்புக் காண் வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன
கல்லாக் குறள! கடும் பகல் வந்து எம்மை,
இல்லத்து வா என, மெய் கொளீஇ, எல்லா! நின் 15
பெண்டிர் உளர்மன்னோ? கூறு;
நல்லாய்! கேள்: உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய
கொக்கு உரித்தன்ன கொடு மடாய்! நின்னை யான்
புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின்,
அக்குளுத்து; புல்லலும் ஆற்றேன்; அருளீமோ, 20
பக்கத்துப் புல்லச் சிறிது
போ, சீத்தை! மக்கள் முரியே! நீ மாறு, இனி; தொக்க
மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங் கொடி போல,
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர், எம்மைப்
புரப்பேம் என்பாரும் பலரால்; பரத்தை என் 25
பக்கத்துப் புல்லீயாய் என்னுமால்; தொக்க
உழுந்தினும் துவ்வா, குறு வட்டா! நின்னின்
இழிந்ததோ, கூனின் பிறப்பு? கழிந்து ஆங்கே,
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும், உற்றீயாக்
கூனி குழையும் குழைவு காண்; 30
யாமை எடுத்து நிறுத்தற்றால், தோள் இரண்டும் வீசி,
யாம் வேண்டேம் என்று விலக்கவும், எம் வீழும்
காமர் நடக்கும் நடை காண் கவர் கணைச்
சாமனார் தம்முன் செலவு காண்க;
ஓஒ! காண், நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள் நாம் 35
உசாவுவம்; கோன் அடி தொட்டேன்;
ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப! அடங்கினேன்; ஏஎ!
பேயும் பேயும் துள்ளல் உறும் எனக்
கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்;
தண்டாத் தகடு உருவ! வேறாகக் காவின் கீழ்ப் 40
போதர்; அகடு ஆரப் புல்லி முயங்குவேம்
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்துவிட்டாங்கு.

கலித்தொகை - மருதக் கலி 95

நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் எல்லா! நீ
நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி,
ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு, இனி, நின் ஆங்கே, நின் சேவடி சிவப்ப
செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த 5
குறும்பூழ்ப் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும்
அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது;
குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்;
புதுவன ஈகை வளம் பாடி, காலின்
பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின் 10
இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின்,
தபுத்த புலர்வில் புண்;
ஊரவர் கவ்வை உளைந்தீயாய், அல்கல் நின்
தாரின்வாய்க் கொண்டு முயங்கி, பிடி மாண்டு, 15
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும்
பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம்
ஈரமாய் விட்டன புண்;
கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின்
துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும் 20
ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம்தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு;
ஆயின், ஆயிழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை
போற்றிய, நின் மெய் தொடுகு;
அன்னையோ! மெய்யைப் பொய் என்று மயங்கிய, கை ஒன்று 25
அறிகல்லாய் போறிகாண், நீ;
நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றி, தவறு தலைப்பெய்து,
கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள், இனி
அருளுகம் யாம்; யாரேம், எல்லா! தெருள
அளித்து, நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் 30
விளித்து, நின் பாணனோடு ஆடி அளித்தி
விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்;
நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்.

கலித்தொகை - மருதக் கலி 96

ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய்ச் சொல்;
பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை;
சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை;
யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்? கேள் இனி:
ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்! 5
குதிரை வழங்கி வருவல்
அறிந்தேன், குதிரைதான்;
பால் பிரியா ஐங்கூந்தற் பல் மயிர்க் கொய் சுவல்,
மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை,
நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ் 10
ஞால் இயல் மென் காதின் புல்லிகைச் சாமரை,
மத்திகைக் கண்ணுறையாகக் கவின் பெற்ற
உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி,
நேர் மணி நேர் முக்காழ்ப் பல்பல கண்டிகை,
தார் மணி பூண்ட தமனிய மேகலை, 15
நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி, ஆர்ப்ப இயற்றி, நீ
காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை,
ஆய் சுதை மாடத்து அணி நிலா முற்றத்துள்,
ஆதிக் கொளீஇ, அசையினை ஆகுவை, 20
வாதுவன்; வாழிய, நீ!
சேகா! கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட
மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க்கண்
குதிரையோ, வீறியது;
கூர் உகிர் மாண்ட குளம்பினது; நன்றே 25
கோரமே வாழி! குதிரை;
வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக்
குதிரை உடல் அணி போல, நின் மெய்க்கண்
குதிரையோ, கவ்வியது;
சீத்தை! பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே 30
வியமே வாழி! குதிரை;
மிக நன்று, இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை;
பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட
பருமக் குதிரையோ அன்று; பெரும! நின்
ஏதில் பெரும் பாணன் தூது ஆட, ஆங்கே ஓர் 35
வாதத்தான் வந்த வளிக் குதிரை; ஆதி
உரு அழிக்கும், அக் குதிரை; ஊரல், நீ; ஊரின், பரத்தை
பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச் சார்த்
திரி; குதிரை ஏறிய செல்.

கலித்தொகை - மருதக் கலி 97

அன்னை: கடுஞ் சொல் அறியாதாய் போல, நீ
என்னைப் புலப்பது ஒறுக்குவென்மன் யான்
சிறுகாலை இற் கடை வந்து, குறி செய்த
அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர,
எவ் வழிப் பட்டாய்? சமனாக இவ் எள்ளல்; 5
முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர்
புத்தியானை வந்தது; காண்பான் யான் தங்கினேன்;
ஒக்கும்
அவ் யானை வனப்பு உடைத்தாகலும் கேட்டேன்:
அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு 10
ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடை,
தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு,
தொய்யகத் தோட்டி, குழை தாழ் வடி மணி,
உத்தி பொறித்த புனை பூண் பருமத்து
முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து, 15
நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து,
தன் நலம் காட்டி, தகையினால், கால் தட்டி வீழ்க்கும்,
தொடர் தொடராக வலந்து; படர் செய்யும்
மென் தோள் தடக் கையின் வாங்கி, தற் கண்டார்
நலம் கவளம் கொள்ளும்; நகை முக வேழத்தை 20
இன்று கண்டாய் போல் எவன் எம்மைப் பொய்ப்பது, நீ;
எல்லா! கெழீஇ, தொடி செறித்த தோள் இணை, தத்தித்
தழீஇக் கொண்டு, ஊர்ந்தாயும் நீ;
குழீஇ அவாவினால், தேம்புவார் இற் கடை ஆறா,
உவா அணி ஊர்ந்தாயும் நீ; 25
மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண்
நீர்க்கு விட்டு, ஊர்ந்தாயும் நீ;
சார்ச்சார் நெறி தாழ் இருங் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம்
சிறு பாகராகச் சிரற்றாது, மெல்ல,
விடாஅது நீ எம் இல் வந்தாய்; அவ் யானை 30
கடாஅம் படும்; இடத்து ஓம்பு;

கலித்தொகை - மருதக் கலி 98

யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும்
புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய்
மாட்டு மாட்டு ஓடி, மகளிர்த் தரத்தர,
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் 5
பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை
காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம்
கேட்டும் அறிவேன்மன், யான்;
தெரி கோதை அம் நல்லாய்! தேறீயல் வேண்டும்
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை 10
வரு புனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்;
ஓஒ! புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்; புனல் ஆங்கே
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக,
மாண் எழில் உண் கண் பிறழும் கயல் ஆக, 15
கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆகம்,
நாணுச் சிறை அழித்து நன்பகல் வந்த அவ்
யாணர்ப் புதுப் புனல் ஆடினாய், முன் மாலை,
பாணன் புணையாகப் புக்கு;
ஆனாது அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி, 20
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி,
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்; குளித்தாங்கே
போர்த்த சினத்தால் புருவத் திரை இடா,
ஆர்க்கும் ஞெகிழத்தான் நல் நீர் நடை தட்பச்
சீர்த் தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு, 25
ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர்;
ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க,
புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும்
கரை கண்டதூஉம் இலை;
நிரைதொடீஇ! பொய்யா வாட் தானை, புனை கழற் கால், தென்னவன் 30
வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத்
தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்;
மெய்யதை, மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல்
பல் காலும் ஆடிய செல்வுழி, ஒல்கிக் 35
களைஞரும் இல் வழி, கால் ஆழ்ந்து தேரோடு
இள மணலுள் படல் ஓம்பு முளை நேர்
முறுவலார்க்கு ஓர் நகை செய்து.

கலித்தொகை - மருதக் கலி 99

நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து,
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் 5
பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த
இழை அணி கொடித் திண் தேர், இன மணி யானையாய்!
அறன் நிழல் எனக் கொண்டாய், ஆய் குடை; அக் குடைப்
புற நிழற்கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா
பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை! 10
பொய்யாமை நுவலும், நின் செங்கோல்; அச் செங்கோலின்
செய் தொழில் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை!
ஏமம் என்று இரங்கும், நின் எறி முரசம்; அம் முரசின்
ஏமத்து இகந்தாளோ, இவள்? இவண் காண்டிகா 15
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட உழப்பாளை!
ஆங்கு
நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற
வடுக் காட்ட, கண் காணாதற்றாக, என் தோழி
தொடி கொட்ப நீத்த கொடுமையைக் 20
கடிது என உணராமை கடிந்ததோ, நினக்கே.

கலித்தொகை - மருதக் கலி 100

ஈண்டு, நீர்மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்,
வேண்டாதார் நெஞ்சு உட்க, வெரு வந்த கொடுமையும்,
நீண்டு தோன்று உயர் குடை நிழல் எனச் சேர்ந்தார்க்குக்
காண் தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும்,
மாண்ட நின் ஒழுக்கத்தான், மறு இன்றி, வியன் ஞாலத்து 5
யாண்டோ ரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்!
ஐயம் தீர்ந்து யார்கண்ணும் அருந் தவ முதல்வன் போல்
பொய் கூறாய் என நின்னைப் புகழ்வது கெடாதோதான்
நல்கி நீ தெளித்த சொல் நசை எனத் தேறியாள்
பல் இதழ் மலர் உண்கண் பனி மல்கக் காணுங்கால்; 10
சுரந்த வான் பொழிந்தற்றா, சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோதான்
கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணுங்கால்;
உறை வரை நிறுத்த கோல், உயிர் திறம் பெயர்ப்பான் போல், 15
முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோதான்
அழி படர் வருத்த, நின் அளி வேண்டிக் கலங்கியாள்
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணுங்கால்;
ஆங்கு
தொல் நலம் இழந்தோள், நீ துணை எனப் புணர்ந்தவள்; 20
இன் உறல் வியன் மார்ப! இனையையால்; கொடிது என,
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ,
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே.

அருஞ்சோழன் நல்லுருத்திரனார் அருளிய முல்லைக் கலி

கலித்தொகை - முல்லைக் கலி 101

தளி பெறு தண் புலத்துத் தலைப் பெயற்கு அரும்பு ஈன்று,
முளி முதல் பொதுளிய, முட் புறப் பிடவமும்;
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும்;
மணி புரை உருவின காயாவும்; பிறவும்; 5
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்,
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு;
அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப 10
வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப,
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ
மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண் 15
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்தி,
கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்
அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்; 20
சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி
விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடி,
குடர் சொரியக் குத்தி, குலைப்பதன் தோற்றம் காண்
படர் அணி அந்தி, பசுங் கட் கடவுள்
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு, 25
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்;
செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக்
கதன் அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாடி,
நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்
ஆர் இருள் என்னான் அருங் கங்குல் வந்து, தன் 30
தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்;
என ஆங்கு
அணி மாலைக் கேள்வன் தரூஉமார், ஆயர்
மணி மாலை ஊதும் குழல் 35
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை, ஆயின்; படாஅகை
ஈன்றன, ஆய மகள் தோள்;
பகலிடக் கண்ணியன், பைதற் குழலன்,
சுவன்மிசைக் கோல் அசைத்த கையன், அயலது; 40
கொல் ஏறு சாட இருந்தார்க்கு, எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம், யாம்;
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள்,
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு, ஒரு நாள்,
கோளாளன் ஆகாமை இல்லை; அவற் கண்டு 45
வேளாண்மை செய்தன கண்;
ஆங்கு, ஏறும் வருந்தின; ஆயரும் புண் கூர்ந்தார்;
நாறு இருங் கூந்தற் பொதுமகளிர் எல்லாரும்
முல்லைஅம் தண் பொழில் புக்கார், பொதுவரோடு,
எல்லாம் புணர் குறிக் கொண்டு. 50

கலித்தொகை - முல்லைக் கலி 102

கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து, ஏற்ற
தண் நறும் பிடவமும், தவழ் கொடித் தளவமும்,
வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும்,
அன்னவை பிறவும், பன் மலர் துதைய,
தழையும் கோதையும் இழையும் என்று இவை 5
தைஇயினர், மகிழ்ந்து, திளைஇ விளையாடும்
மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு
என் உயிர் புக்கவள், இன்று;
ஓஒ! இவள், பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்,
திரு மா மெய் தீண்டலர் என்று, கருமமா, 10
எல்லாரும் கேட்ப, அறைந்து அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட்டவள்;
சொல்லுக! பாணியேம் என்றார்; அறைக என்றார், பாரித்தார்,
மாணிழை ஆறாகச் சாறு;
சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து, நோக்கும் வாய்! எல்லாம் 15
மிடை பெறின், நேராத் தகைத்து;
தகை வகை மிசைமிசைப் பாயியர், ஆர்த்து உடன்
எதிர்எதிர் சென்றார் பலர்;
கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து,
உருத்து எழுந்து ஓடின்று மேல்; 20
எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்
அவருள், மலர் மலி புகல் எழ, அலர் மலிர் மணி புரை நிமிர் தோள் பிணைஇ  25
எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி,
வருத்தினான் மன்ற, அவ் ஏறு;
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்கொலோ
ஏறு உடை நல்லார் பகை;
மடவரே, நல் ஆயர் மக்கள் நெருநல், 30
அடல் ஏற்றெருத்து இறுத்தார்க் கண்டும், மற்று இன்றும்,
உடல் ஏறு கோள் சாற்றுவார்!
ஆங்கு, இனி
தண்ணுமைப் பாணி தளராது எழூஉக
பண் அமை இன் சீர்க் குரவையுள், தெண் கண்ணி, 35
திண் தோள், திறல் ஒளி, மாயப் போர், மா மேனி,
அம் துவர் ஆடைப் பொதுவனோடு, ஆய்ந்த
முறுவலாள் மென் தோள் பாராட்டி, சிறுகுடி
மன்றம் பரந்தது, உரை!

கலித்தொகை - முல்லைக் கலி 103

மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும்,
புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,
குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்,
பல் ஆன் பொதுவர், கதழ் விடை கோள் காண்மார் 5
முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லர், பெரு மழைக் கண்ணர், மடம் சேர்ந்த
சொல்லர், சுடரும் கனங் குழைக் காதினர்,
நல்லவர் கொண்டார், மிடை;
அவர் மிடை கொள; 10
மணி வரை மருங்கின் அருவி போல
அணி வரம்பு அறுத்த வெண் காற் காரியும்,
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல்
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும்,
கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல் 15
வளையுபு மலிந்த கோடு அணி சேயும்,
பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து
அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும்,
பெரு மலை விடரகத்து, ஒருங்கு உடன் குழீஇ,
படு மழை ஆடும் வரையகம் போலும் 20
கொடி நறை சூழ்ந்த தொழூஉ;
தொழுவினுள், புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின, ஏறு;
ஏற்றின் அரி பரிபு அறுப்பன, சுற்றி,
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண் 25
உருவ மாலை போல,
குருதிக் கோட்டொடு குடர் வலந்தன;
கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன்,
ஆடி நின்று, அக் குடர் வாங்குவான், பீடு காண்
செந் நூற் கழி ஒருவன் கைப் பற்ற, அந் நூலை 30
முந் நூலாக் கொள்வானும் போன்ம்;
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்:
கோட்டினத்து ஆயர் மகன் அன்றே மீட்டு ஒரான்
போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு,
தார் போல் தழீஇயவன்; 35
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்;
கோவினத்து ஆயர் மகன் அன்றே ஓவான்
மழை ஏற்றின் மேல் இருந்து ஆடி, துறை அம்பி
ஊர்வான் போல் தோன்றுமவன்;
தொழீஇஇ! காற்றுப் போல வந்த கதழ் விடைக் காரியை 40
ஊற்றுக் களத்தே அடங்கக் கொண்டு, அட்டு, அதன்
மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை
ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு,
சீற்றமோடு ஆர் உயிர் கொண்ட ஞான்று, இன்னன்கொல்
கூற்று என உட்கிற்று, என் நெஞ்சு; 45
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்
புல்லினத்து ஆயர் மகன் அன்றே புள்ளி
வெறுத்த வய வெள் ஏற்று அம் புடைத் திங்கள்
மறுப் போல் பொருந்தியவன்;
ஓவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற 50
சேஎச் செவி முதற் கொண்டு, பெயர்த்து ஒற்றும்
காயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகை கண்டை
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய் பகுத்து இட்டு, புடைத்த ஞான்று, இன்னன்கொல்
மாயோன் என்று உட்கிற்று, என் நெஞ்சு; 55
ஆங்கு, இரும் புலித் தொழுதியும் பெருங் களிற்றினமும்
மாறுமாறு உழக்கியாங்கு உழக்கி, பொதுவரும்
ஏறு கொண்டு, ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டாங்கே
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்துப் பிறழ
பயில் இதழ் மலர் உண்கண் 60
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத்
தாது எரு மன்றத்து அயர்வர், தழூஉ;
கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆய மகள்
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை, 65
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து
நைவாரா ஆய மகள் தோள்;
வளியர் அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆய மகள் தோள்; 70
விலை வேண்டார், எம் இனத்து ஆயர் மகளிர்
கொலை ஏற்றுக் கோட்டிடை, தாம் வீழ்வார் மார்பின்
முலையிடைப் போல, புகின்;
ஆங்கு,
குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி, 75
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே!

கலித்தொகை - முல்லைக் கலி 104

மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய 5
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும்
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும், 10
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும், ஆங்கு அப்
பொரு வரும் பண்பினவ்வையும், பிறவும் 15
உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல,
புரிபு புரிபு புகுத்தனர், தொழூஉ
அவ் வழி, முள் எயிற்று ஏஎர் இவளைப் பெறும், இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்;
ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில் பெறும், வை மருப்பின் 20
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி
வெரூஉப் பிணை மான் நோக்கின் நல்லாட் பெறூஉம், இக்
குரூஉக் கண் கொலை ஏறு கொள்வான் வரிக் குழை
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும், வெந் துப்பின்
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு 25
அறைவனர், நல்லாரை, ஆயர் முறையினால்,
நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல், மிடைமிசைப்
பேணி நிறுத்தார் அணி;
அவ் வழி, பறை எழுந்து இசைப்ப, பல்லவர் ஆர்ப்ப,
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த 30
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு;
அவ் ஏற்றின்
மேல் நிலை மிகல் இகலின், மிடை கழிபு இழிபு, மேற்சென்று,
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான்,
பால் நிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தாளை 35
நோனாது குத்தும் இளங் காரித் தோற்றம் காண்
பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும்
நீல் நிற வண்ணனும் போன்ம்;
இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க,
வரி பரிபு இறுபு இறுபு குடர் சோரக் குத்தி, தன் 40
கோடு அழியக் கொண்டானை ஆட்டித் திரிபு உழக்கும்
வாடில் வெகுளி எழில் ஏறு கண்டை, இஃது ஒன்று
வெரு வரு தூமம் எடுப்ப, வெகுண்டு
திரிதரும் கொல் களிறும் போன்ம்;
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றித் தலைச் சென்று, 45
தோள் வலி துணி பிணி, துறந்து இறந்து எய்தி, மெய் சாய்ந்து,
கோள் வழுக்கித் தன் முன்னர் வீழ்ந்தான்மேல் செல்லாது,
மீளும் புகல் ஏற்றுத் தோற்றம் காண் மண்டு அமருள்
வாள் அகப்பட்டானை, ஒவ்வான் எனப் பெயரும்
மீளி மறவனும் போன்ம் 50
ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப,
மறுத்து மறுத்து மைந்தர் சார,
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப,
இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப
பாடு ஏற்றுக் கொள்பவர், பாய்ந்து மேல் ஊர்பவர், 55
கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ;
தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர், 60
வாங்கு எழில், நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர், தழூஉ;
பாடுகம், வம்மின் பொதுவன் கொலை ஏற்றுக்
கோடு குறி செய்த மார்பு;
நெற்றிச் சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில், 65
செற்றார் கண் சாய, யான் சாராது அமைகல்லேன்;
பெற்றத்தார் கவ்வை எடுப்ப, அது பெரிது
உற்றீயாள், ஆயர் மகள்;
தொழீஇஇ! ஒருக்கு நாம் ஆடும் குரவையுள், நம்மை
அருக்கினான் போல் நோக்கி, அல்லல் நோய் செய்தல், 70
குரூஉக் கண் கொலை ஏறு கொண்டேன், யான் என்னும்
தருக்கு அன்றோ ஆயர் மகன்;
நேரிழாய்! கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே,
ஆர்வுற்று, எமர், கொடை நேர்ந்தார் அலர் எடுத்த 75
ஊராரை உச்சி மிதித்து;
ஆங்கு,
தொல் கதிர்த் திகிரியாற் பரவுதும் ஒல்கா
உரும் உறழ் முரசின் தென்னவற்கு
ஒரு மொழி கொள்க, இவ் உலகு உடன்! எனவே. 80

கலித்தொகை - முல்லைக் கலி 105

அரைசு படக் கடந்து அட்டு, ஆற்றின் தந்த
முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்கு
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து எனப்
பார் வளர், முத்தமொடு படு கடல் பயந்த
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி, 5
தீது இன்று பொலிக! எனத் தெய்வக் கடி அயர்மார்,
வீவு இல் குடிப் பின் இருங் குடி ஆயரும்,
தா இல் உள்ளமொடு துவன்றி, ஆய்பு உடன்,
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத்
தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும், 10
ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப்
பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்,
பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்,
அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் 15
கணம் கொள் பல் பொறிக் கடுஞ் சினப் புகரும்,
வேல் வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண் காற் சேயும்,
கால முன்பின் பிறவும், சால
மடங்கலும், கணிச்சியும், காலனும், கூற்றும், 20
தொடர்ந்து செல் அமையத்துத் துவன்று உயிர் உணீஇய,
உடங்கு கொட்பன போல் புகுத்தனர், தொழூஉ
அவ்வழி,
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க,
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க, 25
நேர் இதழ் நிரைநிரை நெறி வெறிக் கோதையர் அணி நிற்ப,
சீர் கெழு சிலை நிலைச் செயிர் இகல் மிகுதியின், சினப் பொதுவர்
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த,
ஆர்பு, உடன் பாய்ந்தார், அகத்து;
மருப்பில் கொண்டும், மார்பு உறத் தழீஇயும், 30
எருத்திடை அடங்கியும், இமில் இறப் புல்லியும்,
தோள் இடைப் புகுதந்தும், துதைந்து பாடு ஏற்றும்,
நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடி,
கொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு
கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக் குத்தி, 35
கொள்வார்ப் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி,
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்!
பாடு ஏற்றவரைப் படக் குத்தி, செங் காரிக்
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா 40
நகை சால் அவிழ் பதம் நோக்கி, நறவின்
முகை சூழும் தும்பியும் போன்ம்!
இடைப் பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு எய்தி,
மிடைப் பாயும் வௌ? ஏறு கண்டைகா
வாள் பொரு வானத்து, அரவின் வாய்க் கோட்பட்டுப் 45
போதரும் பால் மதியும் போன்ம்!
ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று, மாறா
இரு பெரு வேந்தரும் இகலிக் கண்ணுற்ற
பொரு களம் போலும், தொழூஉ;
வெல் புகழ் உயர் நிலைத் தொல் இயல், துதை புதை துளங்கு இமில் 50
நல் ஏறு கொண்ட, பொதுவன் முகன் நோக்கி,
பாடு இல, ஆய மகள் கண்;
நறுநுதால்! என்கொல் ஐங் கூந்தல் உளர,
சிறு முல்லை நாறியதற்குக் குறு மறுகி,
ஒல்லாது உடன்று, எமர் செய்தார், அவன் கொண்ட 55
கொல் ஏறு போலும் கதம்;
நெட்டிருங் கூந்தலாய்! கண்டை இஃது, ஓர் சொல்;
கோட்டினத்து ஆயர் மகனொடு யாம் பாட்டதற்கு
எம் கண் எமரோ பொறுப்பர்; பொறாதார்
தம் கண் பொடிவது எவன்; 60
ஒண்ணுதால்!
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னைக்
கண்ணுடைக் கோலள் அலைத்ததற்கு, என்னை
மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி,
அலர் செய்து விட்டது இவ் ஊர்; 65
ஒன்றிப் புகர் இனத்து ஆய மகற்கு ஒள்ளிழாய்!
இன்று எவன், என்னை எமர் கொடுப்பது அன்று, அவன்
மிக்குத் தன்மேல் சென்ற செங் காரிக் கோட்டிடைப்
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு;
என, 70
பாடு இமிழ் பரப்பகத்து அரவணை அசைஇய
ஆடு கொள் நேமியாற் பரவுதும் நாடு கொண்டு,
இன் இசை முரசின் பொருப்பன், மன்னி
அமை வரல் அருவி ஆர்க்கும்
இமையத்து உம்பரும் விளங்குக! எனவே. 75

கலித்தொகை - முல்லைக் கலி 106

கழுவொடு சுடு படை சுருக்கிய தோற்கண்,
இமிழ் இசை மண்டை உறியொடு, தூக்கி,
ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர்,
வழூஉச் சொற் கோவலர், தத்தம் இன நிரை
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் 5
அவ்வழி,
நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,
மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல் ஏற்றினம் பல களம் புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன; 10
தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி, எவ் வாயும்,
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின்,
மெய் வார் குருதிய, ஏறு எல்லாம் பெய் காலைக்
கொண்டல் நிரை ஒத்தன;
அவ் ஏற்றை, 15
பிரிவு கொண்டு, இடைப் போக்கி, இனத்தோடு புனத்து ஏற்றி,
இரு திறனா நீக்கும் பொதுவர்
உரு கெழு மா நிலம் இயற்றுவான்,
விரி திரை நீக்குவான், வியன் குறிப்பு ஒத்தனர்;
அவரை, கழல உழக்கி, எதிர் சென்று சாடி, 20
அழல் வாய் மருப்பினால் குத்தி, உழலை
மரத்தைப் போல் தொட்டன ஏறு;
தொட்ட தம், புண் வார் குருதியால் கை பிசைந்து, மெய் திமிரி,
தங்கார் பொதுவர் கடலுள் பரதவர்
அம்பி ஊர்ந்தாங்கு, ஊர்ந்தார், ஏறு 25
ஏறு தம், கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக் குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ,
ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட
மாலை போல், தூங்கும் சினை;
ஆங்கு, 30
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம்
அன்பு உறு காதலர் கை பிணைந்து, ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர், தழூஉ;
முயங்கிப் பொதிவேம்; முயங்கிப் பொதிவேம்;
முலை வேதின் ஒற்றி, முயங்கிப் பொதிவேம் 35
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே!
பல் ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளி மேல்
கொல் ஏறு கொண்டான் குருதி மயக்குறப்
புல்லல் எம் தோளிற்கு அணியோ? எம் கேளே!
ஆங்கு, போர் ஏற்று அருந் தலை அஞ்சலும், ஆய்ச்சியர் 40
காரிகைத் தோள் காமுறுதலும், இவ் இரண்டும்
ஓராங்குச் சேறல் இலவோ? எம் கேளே!
கொல் ஏறு கொண்டான், இவள் கேள்வன் என்று, ஊரார்
சொல்லும் சொல் கேளா, அளை மாறி யாம் வரும்
செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளே; 45
ஆங்க,
அருந் தலை ஏற்றொடு காதலர்ப் பேணி,
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்;
ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு,
மாற்றாரைக் கடக்க, எம் மறம் கெழு கோவே! 50

கலித்தொகை - முல்லைக் கலி 107

எல்லா! இஃது ஒன்று கூறு குறும்பு இவர்
புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், எம்
கொல் ஏறு கோடல் குறை என, கோவினத்தார்
பல் ஏறு பெய்தார் தொழூஉ;
தொழுவத்து, 5
சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக்
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று மன்;
அதனை, கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது 10
கெட்டனள், என்பவோ, யாய்;
இஃதொன்று கூறு;
கேட்டால், எவன் செய்ய வேண்டுமோ? மற்று, இகா!
அவன் கண்ணி அன்றோ, அது;
பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான் 15
கை புனை கண்ணி முடித்தாள், என்று, யாய் கேட்பின்,
செய்வது இலாகுமோ மற்று;
எல்லாத் தவறும் அறும்;
ஓஒ! அஃது அறுமாறு;
ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின், 20
நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின்,
நின்னை நோதக்கதோ இல்லைமன் நின் நெஞ்சம்,
அன்னை நெஞ்சு, ஆகப் பெறின்
அன்னையோ,
ஆயர் மகனையும் காதலை, கைம்மிக
ஞாயையும் அஞ்சுதிஆயின், அரிதுஅரோ 25
நீ உற்ற நோய்க்கு மருந்து;
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா!
வருந்துவேன் அல்லனோ, யான்;
வருந்தாதி;
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன் 30
கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, திண்ணிதா,
தெய்வ மால், காட்டிற்று இவட்கு என, நின்னை அப்
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு.

கலித்தொகை - முல்லைக் கலி 108

இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல
அகல் அல்குல், தோள், கண், என மூவழிப் பெருகி,
நுதல், அடி, நுசுப்பு, என மூவழிச் சிறுகி,
கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு,
அகலாங்கண் அளை மாறி, அலமந்து, பெயருங்கால், 5
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி! நின்னை எவன் பிழைத்தேன், எல்லா! யான்;
அஃது அவலம் அன்று மன;
ஆயர் எமர் ஆனால், ஆய்த்தியேம் யாம், மிக;
காயாம்பூங் கண்ணிக் கருந் துவர் ஆடையை, 10
மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர்
ஆயனை அல்லை; பிறவோ அமரருள்
ஞாயிற்றுப் புத்தேள் மகன்;
அதனால் வாய்வாளேன்;
முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன 15
பல்லும் பணைத் தோளும், பேர் அமர் உண்கண்ணும்,
நல்லேன், யான் என்று, நலத்தகை நம்பிய
சொல்லாட்டி! நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்!
சொல்லாதி;
நின்னைத் தகைத்தனென், அல்லல் காண்மன்; 20
மண்டாத கூறி, மழ குழக்கு ஆகின்றே,
கண்ட பொழுதே கடவரைப் போல, நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய, நிற்
கொண்டது எவன் எல்லா! யான்,
கொண்டது, 25
அளை மாறிப் பெயர்தருவாய்! அறிதியோ அஞ் ஞான்று,
தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல்,
இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், என் நெஞ்சம்
களமாக் கொண்டு ஆண்டாய்; ஓர் கள்வியை அல்லையோ;
நின் நெஞ்சம் களமாக்கொண்டு யாம் ஆள, எமக்கு எவன் எளிதாகும்; 30
புனத்துளான் என்னைக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ;
இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ;
தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ;
அனைத்து ஆக,
வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால், சேய்த்து அன்றி, 35
அண்ணணித்து ஊர் ஆயின், நண்பகல் போழ்து ஆயின்,
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்ன
வெயிலொடு, எவன், விரைந்து சேறி உதுக்காண்;
பிடி துஞ்சு அன்ன அறை மேல, நுங்கின் 40
தடி கண் புரையும் குறுஞ் சுனை ஆடி,
பனிப் பூந் தளவொடு முல்லை பறித்து,
தனி, காயாந் தண் பொழில், எம்மொடு வைகி,
பனிப் படச் செல்வாய், நும் ஊர்க்கு;
இனிச் செல்வேம், யாம்; 45
மா மருண்டன்ன மழைக் கண் சிற்றாய்த்தியர்
நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை, அவை
ஆ முனியா ஏறு போல், வைகல், பதின்மரைக்
காமுற்றுச் செல்வாய்; ஓர் கட்குத்திக் கள்வனை;
நீ எவன் செய்தி, பிறர்க்கு; 50
யாம் எவன் செய்தும், நினக்கு;
கொலை உண்கண், கூர் எயிற்று, கொய் தளிர் மேனி,
இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி;
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் 55
தலையினால் தொட்டு உற்றேன், சூள்;
ஆங்கு உணரார் நேர்ப; அது பொய்ப்பாய் நீ; ஆயின்
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்
வேந்து ஊட்டு அரவத்து, நின் பெண்டிர் காணாமல்,
காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்துத் 60
தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை,
ஆம்பற் குழலால் பயிர் பயிர் எம் படப்பைக்
காஞ்சிக் கீழ்ச் செய்தேம் குறி.

கலித்தொகை - முல்லைக் கலி 109

கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப்
பேராது சென்று, பெரும் பதவப் புல் மாந்தி,
நீர் ஆர் நிழல் குடம்சுட்டு இனத்துள்ளும்,
போர் ஆரா ஏற்றின், பொரு நாகு, இளம் பாண்டில்
தேர் ஊர, செம்மாந்தது போல், மதைஇனள் 5
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்,
மோரோடு வந்தாள் தகை கண்டை; யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு
பண்ணித் தமர் தந்து, ஒரு புறம் தைஇய
கண்ணி எடுக்கல்லாக் கோடு ஏந்து அகல் அல்குல் 10
புண் இல்லார் புண்ணாக நோக்கும்; முழு மெய்யும்
கண்ணளோ? ஆயர் மகள்
இவள்தான் திருத்தாச் சுமட்டினள், ஏனைத் தோள் வீசி,
வரிக் கூழ வட்டி தழீஇ, அரிக் குழை
ஆடல் தகையள்; கழுத்தினும் வாலிது 15
நுண்ணிதாத் தோன்றும், நுசுப்பு
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம்
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்கொல்லோ?
படை இடுவான்மன் கண்டீர், காமன் மடை அடும்
பாலொடு கோட்டம் புகின்; 20
இவள் தான், வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால், மருந்து அல்லள்
யார்க்கும் அணங்காதல் சான்றாள் என்று, ஊர்ப் பெண்டிர்,
மாங்காய் நறுங் காடி கூட்டுவேம்; யாங்கும்
எழு நின் கிளையொடு போக என்று தத்தம்
கொழுநரைப் போகாமல் காத்து, முழு நாளும், 25
வாயில் அடைப்ப, வரும்.

கலித்தொகை - முல்லைக் கலி 110

கடி கொள் இருங் காப்பில் புல்லினத்து ஆயர்
குடிதொறும் நல்லாரை வேண்டுதி எல்லா!
இடு தேள் மருந்தோ, நின் வேட்கை தொடுதரத்
துன்னி, தந்தாங்கே, நகை குறித்து, எம்மைத்
திளைத்தகு எளியமாக் கண்டை; அளைக்கு எளியாள் 5
வெண்ணெய்க்கும் அன்னள் எனக் கொண்டாய் ஒண்ணுதால்!
ஆங்கு நீ கூறின், அனைத்தாக; நீங்குக;
அச்சத்தான் மாறி, அசைவினான் போத்தந்து,
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்மகள்!
மத்தம் பிணித்த கயிறு போல், நின் நலம் 10
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு;
விடிந்த பொழுதினும் இல்வயின் போகாது,
கொடுந் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும்
கடுஞ்சூல் ஆ நாகு போல், நிற் கண்டு, நாளும்,
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு 15
எவ்வம் மிகுதர, எம் திறத்து, எஞ்ஞான்றும்,
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்றாகி,
கை தோயன் மாத்திரை அல்லது, செய்தி
அறியாது அளித்து என் உயிர்;
அன்னையோ, மன்றத்துக் கண்டாங்கே, சான்றார் மகளிரை 20
இன்றி அமையேன் என்று, இன்னவும் சொல்லுவாய்;
நின்றாய்; நீ சென்றீ; எமர் காண்பர்; நாளையும்
கன்றொடு சேறும், புலத்து.

 
மேலும் கலித்தொகை »
temple news
150 கலிப்பாக்களை கொண்டது.ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. ... மேலும்
 
கலித்தொகை - 1. கடவுள்வாழ்த்து ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் ... மேலும்
 
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 51 சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்மணற் சிற்றில் காலின் சிதையா, ... மேலும்
 
கலித்தொகை - முல்லைக் கலி 111 தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar