பதிவு செய்த நாள்
21
மார்
2013
05:03
அகநானூறு - 161. பாலை
வினைவயிற் பிரிதல் யாவது? வணர் சுரி
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி;
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை,
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி 5
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர் என்பது சிறப்பக்
கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல், 10
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல் வரல் இள முலை நனைய;
பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ.
பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு, முன்னமே உணர்ந்தாள். நம் பெருமாட்டி என்று, தலைமகனைச் செலவு விலக்கியது. - மதுரைப் புல்லங்கண்ணனார்
அகநானூறு - 162. குறிஞ்சி
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல,
கடல் கண்டன்ன மாக விசும்பின்
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க,
கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி, 5
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள்,
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி,
பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை
நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக;
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என 10
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண்,
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல்,
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்,
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி,
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது, 15
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, 20
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன்
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி,
நேர் கொள் நெடு வரைக் கவாஅன்
சூரரமகளிரின் பெறற்கு அரியோளே. 25
இரவுக் குறிக்கண் தலைமகளைத் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
அகநானூறு - 163. பாலை
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய,
தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள்,
எமியம் ஆக, துனி உளம் கூர,
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ,
பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி 5
விளியும் எவ்வமொடு, அளியள் என்னாது
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி! புனற் கால் 10
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ,
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
இனையை ஆகிச் செல்மதி;
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே!
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்
அகநானூறு - 164. முல்லை
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி,
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம்
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்;
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன் 5
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற.
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்.
எவன்கொல் மற்று அவர் நிலை? என மயங்கி,
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் 10
இது நற் காலம்; கண்டிசின் பகைவர்
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்,
கந்து கால் ஒசிக்கும் யானை,
வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே!
பாசறைக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார்
அகநானூறு - 165. பாலை
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென,
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்,
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் 5
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும்
இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்! என,
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென,
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ, 10
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி,
தருமணற் கிடந்த பாவை என்
அருமகளே என முயங்கினள் அழுமே!
மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ......
அகநானூறு - 166. மருதம்
நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்,
மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும்
பழம் பல் நெல்லின் வேளூர்வாயில்,
நறு விரை தௌத்த நாறுஇணர் மாலை, 5
பொறி வரி இன வண்டு ஊதல கழியும்
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்,
புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின்
அனையேன்ஆயின், அணங்குக, என்! என
மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின், 10
யார்கொல் வாழி, தோழி! நெருநல்
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ,
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு,
புதுவது வந்த காவிரிக்
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே? 15
பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, யான் ஆடிற்றிலன் என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார கேட்ப, சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார்
அகநானூறு - 167. பாலை
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின்
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை,
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே
இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப் 5
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச்
சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ,
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ், 10
முருங்கை மேய்ந்த பெருங் கை யானை
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று 15
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க்
கூர் முகச் சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறைப் பொதியிலானே? 20
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது. -கடியலூர் உருத்திரங்கண்ணனார்
அகநானூறு - 168. குறிஞ்சி
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக,
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே;
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப!
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் 5
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து,
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்;
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன்
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப, 10
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண்
வாள் வரி வயப் புலி கல் முழை உரற,
கானவர் மடிந்த கங்குல்;
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே?
இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது. - கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
அகநானூறு - 169. பாலை
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட,
அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை,
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன்
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை,
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக் 5
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும்
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து,
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை 10
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக்
கயல் உமிழ் நீரின் கண் பனி வார,
பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால், அளியள், திருந்திழைதானே!
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - தொண்டியாமூர்ச் சாத்தனார்
அகநானூறு - 170. நெய்தல்
கானலும் கழறாது; கழியும் கூறாது;
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது;
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே;
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, 5
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து,
பறைஇ தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால்
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு 10
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின்
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
நின் உறு விழுமம் களைந்தோள்
தன் உறு விழுமம் நீந்துமோ! எனவே.
தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
அகநானூறு - 171. பாலை
நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும்
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
பணை எழில் அழிய வாடும்; நாளும்
நினைவல்மாது அவர் பண்பு என்று ஓவாது
இனையல் வாழி, தோழி! புணர்வர் 5
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள் புரிந்து
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள்
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்,
திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை 10
எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின்,
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப்
பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய,
கருங் கோட்டு இருப்பை ஊரும்
பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே! 15
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -கல்லாடனார்
அகநானூறு - 172. குறிஞ்சி
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக்
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும்
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்; 5
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன்
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து,
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன்
புல் வேய் குரம்பை புலர ஊன்றி, 10
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில்,
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து,
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்
அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின் 15
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள்
மணி ஏர் மாண் நலம் சிதைய,
பொன் நேர் பசலை பாவின்றுமன்னே!
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
அகநானூறு - 173. பாலை
அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், நறு நுதல்
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல் 5
சில் நாள் தாங்கல்வேண்டும் என்று, நின்
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின்,
வருவர் வாழி, தோழி! பல புரி
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ,
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ, 10
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட,
காடு கவின் அழிய உரைஇ, கோடை
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க்
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம் 15
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரைக் கவாஅன்
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -முள்ளியூர்ப் பூதியார்
அகநானூறு - 174. முல்லை
இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து,
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் என,
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
செல்வேம்ஆதல் அறியாள், முல்லை 5
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து,
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
பழங்கண் கொண்ட பசலை மேனியள்,
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை 10
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள,
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்,
நல் மணல் வியலிடை நடந்த
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே?
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
அகநானூறு - 175. பாலை
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின்,
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் 5
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண்
தெரி வளை முன்கை பற்றியும், வினைமுடித்து
வருதும் என்றனர் அன்றே தோழி!
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் 10
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், 15
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு
மண் பயம் பூப்பப் பாஅய்,
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்; பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி சாத்தனார்.
அகநானூறு - 176. மருதம்
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால்,
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்,
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை 5
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க,
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல், 10
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர!
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, 15
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல்
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய, 20
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி,
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு,
கூர்நுனை மழுகிய எயிற்றள் 25
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே.
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம்- பாடிய இளங்கடுங்கோ
அகநானூறு - 177. பாலை
தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும்,
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு? எனப்
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண்
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் 5
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின்
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக்
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை,
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ,
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை 10
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
வல்லே வருவர்போலும் வெண் வேல்
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த 15
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
அணங்குடை வன முலைத் தாஅய நின்
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே. 20
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார்
அகநானூறு - 178. குறிஞ்சி
வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின்,
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி,
நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின்
பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி, 5
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு,
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப்
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன,
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக, 10
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர,
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து,
கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட்
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து, என்றும், 15
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி
எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக்
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத்
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என,
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை 20
முன் தான் கண்ட ஞான்றினு ம்
பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே.
தோழி வரைவு மலிந்து சொல்லியது. - பரணர்
அகநானூறு - 179. பாலை
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில்,
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு,
சிறு கண் யானை நெடுங் கை நீட்டி
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது, 5
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர்
நல் நிலை பொறித்த கல் நிலை அதர,
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச்
சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை, 10
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய்,
குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம்
மதி ஏர் வாள் நுதல் புலம்ப,
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே?
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
அகநானூறு - 180. நெய்தல்
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக,
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி,
வீ ததை கானல் வண்டல் அயர,
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து,
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை 5
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி,
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து,
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன் 10
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத்
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ,
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப்
பொன் நேர் நுண் தாது நோக்கி,
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே. 15
இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க் கண்ணம்பாளனார்
அகநானூறு - 181. பாலை
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின்,
என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ, 5
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன், 10
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை, 15
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான் தோய் புரிசைச் 20
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்,
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள்,
அணங்குசால், அரிவை இருந்த 25
மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே.
இடைச் சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
அகநானூறு - 182. குறிஞ்சி
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து,
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ,
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல்
வீளை அம்பின் இளையரொடு மாந்தி,
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட, 5
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர,
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட!
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல், 10
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும்,
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால்,
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ,
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க 15
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
வெறி அயர் வியன் களம் கடுக்கும்
பெரு வரை நண்ணிய சாரலானே.
தோழி இரா வருவானைப் பகல் வா என்றது. - கபிலர்
அகநானூறு - 183. பாலை
குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
திதலை அல்குல் அவ் வரி வாடவும்,
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்
நீடலர் என்றி தோழி! பாடு ஆன்று 5
பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி,
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு,
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி,
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,
காலை வந்தன்றால் காரே மாலைக் 10
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற,
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே? 15
தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -கருவூர்க் கலிங்கத்தார்
அகநானூறு - 184. முல்லை
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின்
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும்
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்!
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு 5
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட,
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி, 10
தௌ அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்,
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர்,
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க,
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் 15
செக்கர் வானம் சென்ற பொழுதில்,
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த்
தார் மணி பல உடன் இயம்ப
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே.
தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்
அகநானூறு - 185. பாலை
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை
நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய,
பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து,
இரும்பின் இன் உயிர் உடையோர் போல,
வலித்து வல்லினர், காதலர்; வாடல் 5
ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர்
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய,
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில், 10
பெரு விழா விளக்கம் போல, பல உடன்
இலை இல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பாலைபாடிய பெருங்கடுங்கோ
அகநானூறு - 186. மருதம்
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை
இருங் கயம் துளங்க, கால் உறுதொறும் 5
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே,
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப்
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட, 10
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,
இன்னும் பிறள் வயினானே; மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல்,
மாரி அம்பின், மழைத்தோற் பழையன் 15
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின்
யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர்
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே. 20
தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது. -பரணர்
அகநானூறு - 187. பாலை
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் 5
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி,
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு 10
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்,
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து,
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி,
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து 15
வேனில் வெற்பின் கானம் காய,
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை,
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து,
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை 20
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி,
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
வைகு கடல் அம்பியின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்
அகநானூறு - 188. குறிஞ்சி
பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ!
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ,
போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர்
அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர் 5
கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி,
பொலிந்த ஆயமொடு காண்தக இயலி, 10
தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும்,
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்,
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ? வாழிய, மழையே!
இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வீரை வெளியன் தித்தனார்
அகநானூறு - 189. பாலை
பசும் பழப் பலவின் கானம் வெம்பி,
விசும்பு கண் அழிய, வேனில் நீடி,
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி, 5
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன்
வெவ் வரை அத்தம் சுட்டி, பையென,
வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற,
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும் 10
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ்
நன்னராளர் கூடு கொள் இன் இயம்
தேர் ஊர் தெருவில் ததும்பும்
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே. 15
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார்
அகநானூறு - 190. நெய்தல்
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி, எல் பட,
வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே;
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்; 5
அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப்
பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த
வம்ப நாரை இரிய, ஒரு நாள்,
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும்,
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை 10
இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப,
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
நிரைமணிப் புரவி விரைநடை தவிர,
இழுமென் கானல் விழு மணல் அசைஇ, 15
ஆய்ந்த பரியன் வந்து, இவண்
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே!
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - உலோச்சனார்
அகநானூறு - 191. பாலை
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ,
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி,
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர்
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி, 5
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர்
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி,
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை, 10
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி,
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும்,
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! நிரை முகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
அறல் என விரிந்த உறல் இன் சாயல் 15
ஒலி இருங் கூந்தல் தேறும் என,
வலிய கூறவும் வல்லையோ, மற்றே?
தலைமகன் தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
அகநானூறு - 192. குறிஞ்சி
மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல்
பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ!
யாங்கு ஆகுவள்கொல் தானே? விசும்பின்
எய்யா வரி வில் அன்ன பைந் தார்,
செவ் வாய், சிறு கிளி சிதைய வாங்கி, 5
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங் குரல்
வளை சிறை வாரணம் கிளையொடு கவர,
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள்
நீ வந்து அளிக்குவைஎனினே மால் வரை
மை படு விடரகம் துழைஇ, ஒய்யென 10
அருவி தந்த, அரவு உமிழ், திரு மணி
பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்,
இரவும் இழந்தனள்; அளியள் உரவுப் பெயல்
உரும் இறை கொண்ட உயர்சிமைப்
பெரு மலைநாட! நின் மலர்ந்த மார்பே. 15
தோழி தலைமகனைச் செறிப்பு அறிவுறீஇ இரவுக் குறி மறுத்தது. -பொதும்பில்கிழான் வெண்கண்ணனார்
அகநானூறு - 193. பாலை
கான் உயர் மருங்கில் கவலை அல்லது,
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த,
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய்,
பொறித்த போலும் வால் நிற எருத்தின், 5
அணிந்த போலும் செஞ் செவி, எருவை;
குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி
கொல் பசி முது நரி வல்சி ஆகும் 10
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப்
பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி,
முருந்து ஏர் முறுவல், இளையோள்
பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே.
பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
அகநானூறு - 194. முல்லை
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை,
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப்
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால்,
வித்திய மருங்கின் விதை பல நாறி, 5
இரலை நல் மானினம் பரந்தவைபோல்,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி,
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட, 10
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் 15
கார்மன் இதுவால் தோழி! போர் மிகக்
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி,
விரிஉளை, நல் மான் கடைஇ
வருதும் என்று அவர் தௌத்த போழ்தே.
பருவம் கண்டு ஆற்றாமை மீதூர, தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார்
அகநானூறு - 195. பாலை
அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வரும் என, தாயே,
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி,
மனை மணல் அடுத்து, மாலை நாற்றி,
உவந்து, இனிது அயரும் என்ப; யானும், 5
மான் பிணை நோக்கின் மட நல்லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்,
இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள்,
கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய
நலம் புனை உதவியும் உடையன்மன்னே; 10
அஃது அறிகிற்பினோ நன்றுமன் தில்ல;
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி,
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங் கோல்,
ஆகுவது அறியும் முதுவாய், வேல!
கூறுகமாதோ, நின் கழங்கின் திட்பம்; 15
மாறா வருபனி கலுழும் கங்குலில்,
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்,
எம் மனை முந்துறத் தருமோ?
தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே?
மகட் போக்கிய நற்றாய் சொல்லியது. - கயமனார்
அகநானூறு - 196. மருதம்
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து,
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி,
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு 5
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
விடியல் வைகறை இடூஉம் ஊர!
தொடுகலம்; குறுக வாரல் தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய, 10
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை
அன்னிமிஞிலியின் இயலும்
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர்
அகநானூறு - 197. பாலை
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்,
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும்,
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம்
இனையல் வாழி, தோழி! முனை எழ 5
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின்,
மறம் மிகு தானை, கண்ணன் எழினி
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும்,
நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ
தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல் 10
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு,
கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு
இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர,
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி, 15
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம்
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு
இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -மாமூலனார்
அகநானூறு - 198. குறிஞ்சி
கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்? எனக்
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது,
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி,
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து;
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை 5
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின்
இள மழை சூழ்ந்த மட மயில் போல,
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து,
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல்
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, 10
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்,
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்,
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில்,
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன், 15
ஏர் மலர் நிறை சுனை உறையும்
சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே!
புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
அகநானூறு - 199. பாலை
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன்,
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும்
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து,
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர,
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல் 5
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ,
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன,
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்,
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய 10
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
கடல் போல் கானம் பிற்பட, பிறர் போல்
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று என்னும்
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, 15
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல்
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது,
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய, 20
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்,
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார்
அகநானூறு - 200. நெய்தல்
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்,
புலால் அம் சேரி, புல் வேய் குரம்பை,
ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து,
இன்னா உறையுட்டுஆயினும், இன்பம்
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள், 5
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப!
பொம்மற் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி,
எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற, 10
நல் தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று,
சேந்தனிர் செல்குவிர்ஆயின், யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்;
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே.
தலைமகள் குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குக் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார்