Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகநானூறு (பகுதி-5) அகநானூறு (பகுதி-7)
முதல் பக்கம் » அகநானூறு
அகநானூறு (பகுதி-6)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
05:03

அகநானூறு - 201. பாலை

அம்ம, வாழி தோழி! பொன்னின்
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன்
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து,  5
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ,
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை,
உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
அலரும் மன்று பட்டன்றே; அன்னையும்  10
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும் என்று
எவன் கையற்றனை, இகுளை? சோழர்
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும்,
ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன்,  15
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
இருள் துணிந்தன்ன குவவுடூ மயிர்க் குருளைத்
தோல் முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.  

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்

அகநானூறு - 202. குறிஞ்சி

வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப,
புலிப் பகை வென்ற புண் கூர் யானை
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்,
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்  5
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி,
சிறு பல் மின்மினி போல, பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட!
யாமே அன்றியும் உளர்கொல் பானாள்,
உத்தி அரவின் பைத் தலை துமிய,  10
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை,
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக,
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி
தேராது வரூஉம் நின்வயின்
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே?  15

இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்

அகநானூறு - 203. பாலை

உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும்,
யாய் அறிந்து உணர்க என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்,
இன்னள் இனையள், நின் மகள் என, பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,  5
நாணுவள் இவள் என, நனி கரந்து உறையும்
யான் இவ் வறு மனை ஒழிய, தானே,
அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல் என, கழற் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற,  10
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன் வாயாக,
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்,  15
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த,
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே!  

மகட் போக்கிய தாய் சொல்லியது. - கபிலர்

அகநானூறு - 204. முல்லை

உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை,
கடல் போல் தானை, கலிமா, வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில்,  5
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து,
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர்
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை  10
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல்,
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.  

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்

அகநானூறு - 205. பாலை

உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின்
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல,
தையல்! நின் வயின் பிரியலம் யாம் எனப்
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி,
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே  5
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர,
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி,
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி,  10
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி,  15
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில்,
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி,
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து,
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர,  20
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக்
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.- நக்கீரர்

அகநானூறு - 206. மருதம்

என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப்
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப,
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம்,
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத்  5
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து
ஆராக் காதலொடு தார் இடை குழைய,  10
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து,
அடுபோர் வேளிர் வீரை முன்துறை,
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
பெரு பெயற்கு உருகியாஅங்கு,  15
துஇதிருந்ழை நெகிழ்ந்தன, தட மென் தோளே?  

வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார்

அகநானூறு - 207. பாலை

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர்
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக்  5
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்,
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை,
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள,
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல்
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல்  10
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை,
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து,
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக்
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்,  15
மறுத்த சொல்லள் ஆகி,
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே?  

மகட் போக்கிய தாய் சொல்லியது. - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்

அகநானூறு - 208. குறிஞ்சி

யாம இரவின் நெடுங் கடை நின்று,
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,  5
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று  10
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,
நிழல் செய்து உழறல் காணேன், யான் எனப்
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து,
உரு வினை நன்னன், அருளான், கரப்ப,
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்  15
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல்,
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல்
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல,
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி,  20
நல்கினள், வாழியர், வந்தே ஓரி
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக்
கார் மலர் கடுப்ப நாறும்,
ஏர் நுண், ஓதி மாஅயோளே!  

புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்

அகநானூறு - 209. பாலை

தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும்
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே,
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான்,
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்,
நேரா எழுவர் அடிப்படக் கடந்த  5
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என,
ஆழல் வாழி, தோழி! அவரே,
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து  10
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி,  15
நிலை பெறு கடவுள் ஆக்கிய,
பலர் புகழ் பாவை அன்ன நின் நலன  

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார்

அகநானூறு - 210. நெய்தல்

குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர்
எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன்
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட,
விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த்
திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து,  5
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி,
தான் இவண் வந்த காலை, நம் ஊர்க்
கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி,
ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன்  10
சாயல் மார்பின் பாயல் மாற்றி,
கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச்
செலவு அரிது என்னும் என்பது
பல கேட்டனமால் தோழி! நாமே.  

தோழி தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - உலோச்சனார்

அகநானூறு - 211. பாலை

கேளாய், எல்ல! தோழி! வாலிய
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
பறை கண்டன்ன பா அடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும்,
தண் மழை ஆலியின் தாஅய், உழவர்  5
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய,  10
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,  15
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே.  

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார்

அகநானூறு - 212. குறிஞ்சி

தா இல் நல் பொன் தைஇய பாவை
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன,
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்,
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய்,  5
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி,
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்,
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும்,  10
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று,
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை  15
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன்
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து,
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி,
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்  20
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது
எளியள் அல்லோட் கருதி,
விளியா எவ்வம் தலைத் தந்தோயே.  

அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. -பரணர்

அகநானூறு - 213. பாலை

வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர்
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்,
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி,  5
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும்
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது,  10
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப்
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப்
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து,
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை  15
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள்
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்,
சென்று, தாம் நீடலோஇலரே என்றும்
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை,  20
வலம் படு வென்றி வாய் வாள், சோழர்
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த
அறல் என நெறிந்த கூந்தல்,
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.  

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார்

அகநானூறு - 214. முல்லை

அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்,
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம்
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி,
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது;
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை,  5
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை,
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே;
அமரும் நம் வயினதுவே; நமர் என
நம் அறிவு தௌந்த பொம்மல் ஓதி
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப்  10
படு சுவற் கொண்ட பகு வாய்த் தௌ மணி
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ,
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப,
ஆர் உயிர் அணங்கும் தௌ இசை
மாரி மாலையும் தமியள் கேட்டே?  15

பாசறைக்கண் தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்

அகநானூறு - 215. பாலை

விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
வேறு பல் மொழிய தேஎம் முன்னி,
வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி,
செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே,  5
வலன் ஆக! என்றலும் நன்றுமன் தில்ல
கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி,
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்,
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்,  10
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை,
கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல்
படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ,
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு,
வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண்,  15
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே.  

செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது. - இறங்கு குடிக் குன்ற நாடன்

அகநானூறு - 216. மருதம்

நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள்
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்  5
பெட்டாங்கு மொழிப என்ப; அவ் அலர்ப்
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்;
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்,
கழனி உழவர் குற்ற குவளையும்,
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு,  10
பல் இளங் கோசர் கண்ணி அயரும்,
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
பெருங் களிற்று எவ்வம் போல,  15
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே.  

தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார்

அகநானூறு - 217. பாலை

பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை,
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன,
துவலை தூவல் கழிய, அகல் வயல்
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக்
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர,  5
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர,
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ,
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட,  10
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க,
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என,
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ எனச்
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே;  15
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர,
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,
எயிறு தீப் பிறப்பத் திருகி,
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே.  20

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்

அகநானூறு - 218. குறிஞ்சி

கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த,
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி,
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று,
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து,  5
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள்,
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல்,
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை,
படாஅவாகும், எம் கண் என, நீயும்,
இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி,  10
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெரு மலை விடரகம் வர அரிது என்னாய்,
வர எளிதாக எண்ணுதி; அதனால்,
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள்  15
அடைய முயங்கேம்ஆயின், யாமும்
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே
அன்னை அறியினும் அறிக! அலர் வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க!
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு,  20
ஒண் பூ வேங்கை கமழும்
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே!  

தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. - கபிலர்

அகநானூறு - 219. பாலை

சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி,
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்,
வாராயோ! என்று ஏத்தி, பேர் இலைப்
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல்
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி,  5
என் பாடு உண்டனைஆயின், ஒரு கால்,
நுந்தை பாடும் உண் என்று ஊட்டி,
பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து, யான்
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள்
அறனிலாளனொடு இறந்தனள், இனி என,  10
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச்
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
பொரி அரை விளவின் புன் புற விளை புழல்,
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர்  15
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை,
மடத் தகை மெலியச் சாஅய்,
நடக்கும்கொல்? என, நோவல் யான  

மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்

அகநானூறு - 220. நெய்தல்

ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ,
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும்,
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்,
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய,
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்  5
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின்,
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும்
காணலாகா மாண் எழில் ஆகம்
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே  10
நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின்,
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும்,
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்,
நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து,
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்,  15
இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்
நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து,
யாணர்த் தண் பணை உறும் என, கானல்
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள்  20
நல் எழில் சிதையா ஏமம்
சொல் இனித் தெய்ய, யாம் தௌயுமாறே.  

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்

அகநானூறு - 221. பாலை

நனை விளை நறவின் தேறல் மாந்தி,
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ,
பொம்மல் ஓதி எம் மகள் மணன் என,
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால்,
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல்,  5
மதி உடம்பட்ட மை அணற் காளை
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து,
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின்
தண் நறு முச்சி புனைய, அவனொடு
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை,  10
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை
காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ,
இரும் பிடி இரியும் சோலை
அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே.  

தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார்

அகநானூறு - 222. குறிஞ்சி

வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக்
கான நாடன் உறீஇய நோய்க்கு, என்
மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்;
முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண்,
கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும்,  5
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்,
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ,
தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின்,
மாதிரம் துழைஇ, மதி மருண்டு அலந்த
ஆதிமந்தி காதலற் காட்டி,  10
படு கடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்,
சென்மோ வாழி, தோழி! பல் நாள்,
உரவு உரும் ஏறொடு மயங்கி,
இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே.  15

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லியது. - பரணர்

அகநானூறு - 223. பாலை

மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே? பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர்
மறந்தும் அமைகுவர்கொல்? என்று எண்ணி,
ஆழல் வாழி, தோழி! கேழல்
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய்
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர்,  5
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை,
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின்
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ்  10
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட,
நன் முகை அதிரல் போதொடு, குவளைத்
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின்  15

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

அகநானூறு - 224. முல்லை

செல்க, பாக! எல்லின்று பொழுதே
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா,
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை,
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி,  5
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன,
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி,
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக,
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்,  10
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல்
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ,
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என,  15
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால்
அருங் கடி வியல் நகர் நோக்கி,
வருந்துமால், அளியள் திருந்திழைதானே.

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்

அகநானூறு - 225. பாலை

அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்,
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
இன்றே இவணம் ஆகி, நாளை,
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற  5
அகலா அம் துளை, கோடை முகத்தலின்,
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல்
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்,
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து,
யாத்த தூணித் தலை திறந்தவைபோல்,  10
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர்
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர,
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,  15
செறி தொடி முன்கை, நம் காதலி
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?  

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்

அகநானூறு - 226. மருதம்

உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்;
நாண் இலை மன்ற யாணர் ஊர!
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை,
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின்,
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக்  5
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்,
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான்,
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை,
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய,
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி,  10
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள்,
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,  15
போர் அடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.  

தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர்

அகநானூறு - 227. பாலை

நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே;
திதலை அல்குல் வரியும் வாடின;
என் ஆகுவள்கொல் இவள்? என, பல் மாண்
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி,
இனையல் வாழி, தோழி! நனை கவுள்  5
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப்
புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப,
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்
செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து,  10
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ,
நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள்,
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்,
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை,  15
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப்
பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்,
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்,
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து,  20
எல் உமிழ் ஆவணத்து அன்ன,
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே!  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது; பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்

அகநானூறு - 228. குறிஞ்சி

பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென
வரை இழி அருவி ஆரம் தீண்டித்
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில்,
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக்
கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி,  5
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே
செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல
வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று,
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப்  10
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய்
இரும் பிடி இரியும் சோலைப்
பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே.  

தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லி யது. - அண்டர் மகன் குறுவழுதியார்

அகநானூறு - 229. பாலை

பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன்
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்  5
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி,
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென,
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்!  10
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப,
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி
நல் மா மேனி தொலைதல் நோக்கி,
இனையல் என்றி; தோழி! சினைய  15
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப்
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து,
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை,
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம்
இன் இளவேனிலும் வாரார்,  20
இன்னே வருதும் எனத் தௌத்தோரே.  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

அகநானூறு - 230. நெய்தல்

உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப்
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல்,
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று,
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்!  5
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு,
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம்,
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின்,
தீதும் உண்டோ, மாதராய்? என,  10
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர்
கை வல் பாகன் பையென இயக்க,
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில்
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி,
சிறிய இறைஞ்சினள், தலையே  15
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.  

தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

அகநானூறு - 231. பாலை

செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்,
இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி,
நல் இசை வலித்த நாணுடை மனத்தர்
கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர்,  5
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கைக்
கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ,
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை
வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக
வருவர் வாழி, தோழி! பொருவர்  10
செல் சமம் கடந்த செல்லா நல் இசை,
விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட் பாண்டியன்
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
ஆடு வண்டு அரற்றும் முச்சித்
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே.  15

தலைமகள் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

அகநானூறு - 232. குறிஞ்சி

காண் இனி வாழி, தோழி! பானாள்,
மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின்,
மாஅல் யானை புலி செத்து வெரீஇ,
இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும்
பெருங் கல் நாடன் கேண்மை, இனியே,  5
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்,
மன்ற வேங்கை மண நாட் பூத்த
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர்
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும்  10
ஆர் கலி விழவுக் களம் கடுப்ப, நாளும்,
விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி,
முருகு என வேலற் தரூஉம்.
பருவமாகப் பயந்தன்றால், நமக்கே.  15

தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்,சொல்லியது. - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

அகநானூறு - 233. பாலை

அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின்
அலர் முலை நனைய, அழாஅல் தோழி!
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம்
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென,
ஊன் இல் யானை உயங்கும் வேனில்,  5
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின்,
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல்
பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல்
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு,  10
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ,
பொருள்வயின் நீடலோஇலர் நின்
இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே.  15

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார்

அகநானூறு - 234. முல்லை

கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப்
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய  5
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப,
கால் என மருள, ஏறி, நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர்
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந!
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை  10
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,
எல்லை போகிய புல்லென் மாலை,
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்,  15
கழி படர் உழந்த பனி வார் உண்கண்
நல் நிறம் பரந்த பசலையள்
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.  

தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார்

அகநானூறு - 235. பாலை

அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும்,
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ?
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து,
விண்டு முன்னிய கொண்டல் மா மழை  5
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ,
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய,  10
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்க,
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி,
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை  15
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய,
நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
தொல் நலம் சிதையச் சாஅய்,
என்னள்கொல் அளியள்? என்னாதோரே.  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்

அகநானூறு - 236. மருதம்

மணி மருள் மலர முள்ளி அமன்ற,
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன்
அரி நிறக் கொழுங் குறை வெளவினர் மாந்தி,
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை,
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப்  5
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக்
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன், நன்றும்
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல்  10
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப,
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியாமையின் அழிந்த நெஞ்சின்,
ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின்,
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை,  15
ஆட்டன் அத்தியைக் காணீரோ? என
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
கடல் கொண்டன்று என, புனல் ஒளித்தன்று என,
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த
ஆதிமந்தி போல,  20
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே.  

ஆற்றாமை வயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பரணர்

அகநானூறு - 237.பாலை

புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப,
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ,
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து  5
இன்னா கழியும் கங்குல் என்று நின்
நல் மா மேனி அணி நலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல்
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு,  10
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு,
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும்,
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து  15
ஐய அமர்த்த உண்கண் நின்
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே.  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார்

அகநானூறு - 238. குறிஞ்சி

மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்,
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென,
மட மான் வல்சி தரீஇய, நடு நாள்,
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து,  5
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற,
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு,
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி,
இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
பெருங் கல் நாட! பிரிதிஆயின்,  10
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும்
மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ்,
கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி
நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து,  15
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள்
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே?  

இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - கபிலர்

அகநானூறு - 239. பாலை

அளிதோதானே; எவன் ஆவதுகொல்?
மன்றும் தோன்றாது; மரனும் மாயும்
புலி என உலம்பும் செங் கண் ஆடவர்,
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்,
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய  5
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும்
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி,
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின்,
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய,  10
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே,
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்? என,
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு
நெருநலும் தீம் பல மொழிந்த
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே!  15

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்

அகநானூறு - 240. நெய்தல்

செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத்
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப,
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல்
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில்  5
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய,
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில்
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி,
யாயும் ஆயமோடு அயரும்; நீயும்,
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி,  10
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து,
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்,
பூ வேய் புன்னை அம் தண் பொழில்,
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே.  15

தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. - எழுஉப்பன்றி நாகன் குமரனார்

 
மேலும் அகநானூறு »
temple news
அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு நெடுந்தொகை என்று வேறு பெயரும் உண்டு. இந் ... மேலும்
 
அகநானூறு - பாயிரம்  நின்ற நீதி, வென்ற நேமி,பழுதில் கொள்கை, வழுதிய ரவைக்கண்,அறிவு வீற்றிருந்த செறிவுடை ... மேலும்
 
அகநானூறு - 41. பாலை வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்எரி மருள் பூஞ் சினை ... மேலும்
 
அகநானூறு - 81. பாலை நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,புல் அளைப் ... மேலும்
 
அகநானூறு - 121. பாலை நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,வறுமை கூரிய மண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar