பதிவு செய்த நாள்
21
மார்
2013
05:03
அகநானூறு - பாயிரம்
நின்ற நீதி, வென்ற நேமி,
பழுதில் கொள்கை, வழுதிய ரவைக்கண்,
அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து
வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ,
அருந்தமிழ் மூன்றுந் தெரிந்த காலை, 5
ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள்,
நெடிய வாகி யடிநிமிர்ந் தொழுகிய
இன்பப் பகுதி யின்பொருட் பாடல்,
நானூ றெடுத்து நூல்னவில் புலவர்,
களித்த மும்மதக் களிற்றியா னைநிரை, 10
மணியடு மிடைந்த அணிகிளர் பவளம்,
மேவிய நித்திலக் கோவை, யென்றாங்கு,
அத்தகு பண்பின் முத்திற மாக
முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக்
கருததெனப் பண்பினோ ருரைத்தவை நாடின், 15
அவ்வகைக் கவைதாம் செவ்விய வன்றி,
அரியவை யாகிய பொருண்மை நோக்கிக்,
கோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத்
தகவொடு சிறந்த அகவல் நடையாற்,
கருததினி தியற்றி யோனே பரித்தேர் 20
வளவர் காக்கும் வளநாட் டுள்ளும்
நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற்,
கெடலருஞ் சிறப்பின், இடையள நாட்டுத்
தீதில் கொள்கை மூதூ ருள்ளும்,
ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச் 25
செம்மை சான்ற தேவன்
தொன்மை சான்ற நன்மை யோனே.
இத் தொகைக்குக் கருத்து அகவலால் பாடினான் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன்.
அகநானூறு - 1. பாலை
வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய 5
கல் போல் பிரியலம் என்ற சொல்தாம்
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், 10
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின், வெளவுநர் மடிய,
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை 15
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார்
அகநானூறு - 2. குறிஞ்சி
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது 5
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? 10
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள்ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் 15
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர்
அகநானூறு - 3. பாலை
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை 5
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் 10
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், 15
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெ
அகநானூறு - 4. முல்லை
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, 5
கருவி வானம் கதழ் உறை சிதறி,
கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த 10
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் 15
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே.
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார்
அகநானூறு - 5. பாலை
அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள்
விளிநிலை கொளாள் தமியளன் மென்மெல
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
5
கண்ணிய துணரா வளவை யண்ணுதல்
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த வோமை முதையலங் காட்டுப்
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப 10
வுதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகுநுனை தோற்றி
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்
விரனுதி சிதைக்கும் நிரைநிலை யதர
பரன்முரம் பாகிய பயமில், கானம் 15
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ
டாகத்து தொடுக்கிய புதல்தன் புன்றலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையன்
மோயினள் உயிர்த்த காலை மாமலர்
மணியுரு இழந்த வணியிழை தோற்றங் 20
கண்டே கடிந்தனஞ் செலவே யண்டொடி
யுழைய மாகவு மினைவோள்
பிழையலன் மாதோ பிரிதும்நா மெனினே.
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.
அகநானூறு - 6. மருதம்
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் 5
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
வேழ வெண் புணை தழீஇ, பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு,
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, 10
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,
ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்! என,
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! 15
இளமை சென்று தவத் தொல்லஃதே;
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர்
அகநானூறு - 7. பாலை
முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின;
தலை முடிசான்ற; தண் தழை உடையை;
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய;
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; 5
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்!
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து என,
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி,
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! 10
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள்
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை,
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,
பிற்படு பூசலின் வழிவழி ஓடி, 15
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை,
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி,
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த 20
துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே.
மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. - கயமனார்.
அகநானூறு - 8. குறிஞ்சி
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும்,
அரிய அல்லமன் இகுளை! பெரிய 5
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்,
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, 10
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல,
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் 15
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ,
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம்,
அறிதலும் அறிதிரோ? என்னுநர்ப் பெறினே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார்.
அகநானூறு - 9. பாலை
கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின்,
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை,
செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு,
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் 5
உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு,
ஆலி வானின் காலொடு பாறி,
துப்பின் அன்ன செங் கோட்டு இயவின்,
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் 10
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி,
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து,
ஞாயிறு படினும், ஊர் சேய்த்து எனாது, 15
துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின்
எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண்
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ,
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி,
கன்று புகு மாலை நின்றோள் எய்தி, 20
கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி,
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி,
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல்,
அம் தீம் கிளவிக் குறுமகள் 25
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே?
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. - கல்லாடனார்
அகநானூறு - 10.நெய்தல்
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
நெய்தல் உண்கண் பைதல கலுழ, 5
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்
அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் 10
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே.
இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார்
அகநானூறு - 11. பாலை
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி, 5
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென,
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப்
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் 10
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர,
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல ஆகி,
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே! 15
தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள், ஆற்றுவல்என்பது படச் சொல்லியது. - அவ்வையார்
அகநானூறு - 12. குறிஞ்சி
யாயே, கண்ணினும் கடுங் காதலளே;
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; சீறடி சிவப்ப,
எவன், இல! குறுமகள்! இயங்குதி? என்னும்;
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; 5
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்,
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை,
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் 10
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம்,
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும்
நல் வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.
பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, இரவுக் குறி வாரா வரைவல் என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - கபிலர்
அகநானூறு - 13. பாலை
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் 5
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன் 10
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து,
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின்,
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட 15
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
கவவு இன்புறாமைக் கழிக வள வயல்,
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, 20
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
வெண் குருகு நரல, வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே!
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார்
அகநானூறு - 14. முல்லை
அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி,
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ, 5
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள,
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர்
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர,
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற, 10
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
மாலையும் உள்ளார்ஆயின், காலை
யாங்கு ஆகுவம்கொல்? பாண! என்ற
மனையோள் சொல் எதிர் சொல்லல்செல்லேன்,
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென, 15
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து,
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக,
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
கார் மழை முழக்கு இசை கடுக்கும், 20
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே
பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தனார்
அகநானூறு - 15 . பாலை
எம் வெங் காமம் இயைவது ஆயின்,
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, 5
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
தோழிமாரும் யானும் புலம்ப,
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் 10
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி, 15
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
குன்ற வேயின் திரண்ட என்
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!
மகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார்
அகநானூறு - 16. மருதம்
நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய்,
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை, 5
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே!
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,
வருகமாள, என் உயிர்! எனப் பெரிது உவந்து, 10
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு? என, யான் தற்
கரைய, வந்து விரைவனென் கவைஇ
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா, 15
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே? 20
பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், யாரையும் அறியேன் என்றாற்குத் தலைமகள் சொல்லியது. - சாகலாசனார்
அகநானூறு - 17. பாலை
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்,
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
உயங்கின்று, அன்னை! என் மெய் என்று அசைஇ,
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
முயங்கினள் வதியும்மன்னே! இனியே, 5
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
வல்லகொல், செல்லத் தாமே கல்லென 10
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின்,
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த,
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தௌ விளி
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்,
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல், 15
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின்,
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்,
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்,
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி, 20
வைகுறு மீனின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
அகநானூறு - 18. குறிஞ்சி
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி,
மராஅ யானை மதம் தப ஒற்றி,
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் 5
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப!
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள்,
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும் 10
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால்,
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக்
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை,
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில், 15
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய்
ஓம்பினள் எடுத்த, தட மென் தோள
தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. - கபிலர்
அகநானூறு - 19. பாலை
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை,
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம், 5
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று,
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது,
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின்
சேயிதழ் அனைய ஆகி, குவளை 10
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல்
வெய்ய உகுதர, வெரீஇ, பையென,
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை 15
பூ வீ கொடியின் புல்லெனப் போகி,
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக,
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!
நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. - பொருந்தில் இளங்கீரனார்
அகநானூறு - 20. நெய்தல்
பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி,
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ,
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் 5
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி,
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப்
பல் பூங் கானல் அல்கினம் வருதல் 10
கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர்,
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
கடி கொண்டனளே தோழி! பெருந்துறை,
எல்லையும் இரவும் என்னாது, கல்லென
வலவன் ஆய்ந்த வண் பரி 15
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே.
பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது. - உலோச்சனார்
அகநானூறு - 21. பாலை
மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் 5
செல்லல் என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப்
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர்
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன் 10
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்,
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்,
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை 15
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, 20
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும்
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே.
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார்
அகநானூறு - 22. குறிஞ்சி
அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரற் பொழுதில்,
படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை 5
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள் என,
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், 10
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த
சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல, 15
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
நோய் தணி காதலர் வர, ஈண்டு 20
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?
வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து, தலைமகள் ஆற்றாளாக,தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது;தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெற
அகநானூறு - 23. பாலை
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல்,
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி;
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,
காடே கம்மென்றன்றே; அவல, 5
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர்,
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ,
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே;
அனையகொல் வாழி, தோழி! மனைய 10
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும்
மௌவல், மாச் சினை காட்டி,
அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே!
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
அகநானூறு - 24. முல்லை
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை,
சிதரல் அம் துவலை தூவலின், மலரும்
தைஇ நின்ற தண் பெயல் கடைநாள், 5
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை,
விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி,
மங்குல் மா மழை, தென் புலம் படரும்
பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி,
தம் ஊரோளே, நன்னுதல்; யாமே, 10
கடி மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து,
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு,
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி,
கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு,
தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து, 15
கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள்,
இரவுத் துயில் மடிந்த தானை,
உரவுச் சின வேந்தன் பாசறையேமே.
தலைமகன் பருவங் கண்டு சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - ஆவூர் மூலங் கிழார்
***************
அகநானூறு - 26. மருதம்
முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்
அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ தோழி! அல்கல்
5
பெருங் கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி,
யான் ஓம் என்னவும் ஒல்லார், தாம் மற்று 10
இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே
புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ,
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே; 15
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்
செவிலி கை என் புதல்வனை நோக்கி,
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ
செல்வற்கு ஒத்தனம், யாம் என, மெல்ல என் 20
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு,
யாமும் காதலம், அவற்கு எனச் சாஅய்,
சிறு புறம் கவையினனாக, உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய்
மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே 25
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே?
தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
அகநானூறு - 27. பாலை
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம் அழ,
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார்,
செல்ப" என்ப என்போய்! நல்ல 5
மடவைமன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் 10
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்
தௌ நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப்
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட,
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல் 15
குருதியொடு துயல்வந்தன்ன நின்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?
செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைக்கணக்காயனார்
அகநானூறு - 28. குறிஞ்சி
மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி!
கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே
அருவி ஆன்ற பைங் கால் தோறும்
இருவி தோன்றின பலவே. நீயே, 5
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி,
பரியல் நாயொடு பல் மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின்
பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து,
கிள்ளைத் தௌ விளி இடைஇடை பயிற்றி, 10
ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,
சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள் என,
பிறர்த் தந்து நிறுக்குவள்ஆயின்,
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. - பாண்டியன் அறிவுடைநம்பி
அகநானூறு - 29. பாலை
"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள்,
கிடந்து உயிர் மறுகுவதுஆயினும், இடம் படின்
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப,
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று 5
இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின்
மாவின் நறு வடி போல, காண்தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,
வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண்
10
தாழக் கூறிய தகைசால் நல் மொழி
மறந்தனிர் போறிர் எம் எனச் சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை, 15
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி,
அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு 20
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே! 25
வினை முற்றி மீண்ட தலைமகன், எம்மையும் நினைத்தறிதிரோ? என்ற தலைமகட்குச் சொல்லியது. - வெள்ளாடியனார்
அகநானூறு - 30. நெய்தல்
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்
5
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,
பெருங் களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி, 10
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறுங் கானல் வந்து, நும்
வண்ணம் எவனோ? என்றனிர் செலினே? 15
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
அகநானூறு - 31. பாலை
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி,
நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று? என,
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து,
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து 5
மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு,
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் 10
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி,
சென்றார் என்பு இலர் தோழி! வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே. 15
பிரிவிடை ஆற்றாளாயினாள் என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்
அகநானூறு - 32. குறிஞ்சி
நெருநல் எல்லை ஏனல் தோன்றி,
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண் 5
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,
சூரரமகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என் 10
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
கடிய கூறி, கை பிணி விடாஅ,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின்
சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து, 15
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ.
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று,
என் குறைப் புறனிலை முயலும் 20
அண்கணாளனை நகுகம், யாமே.
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம்.- நல்வெள்ளியார்
அகநானூறு - 33. பாலை
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய,
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் 5
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள்
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண்
தௌயா நோக்கம் உள்ளினை, உளி வாய்
10
வெம் பரல் அதர குன்று பல நீந்தி,
யாமே எமியம் ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை,
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள், 15
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின்
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல.
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம்
செய்வினை ஆற்றுற விலங்கின்,
எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே? 20
தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
அகநானூறு - 34. முல்லை
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் 5
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி,
தௌ அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற,
செல்க, தேரே நல் வலம் பெறுந! 10
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி
துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி,
இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து என, 15
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
மழலை இன் சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே.
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
அகநானூறு - 35 . பாலை
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப
தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை,
நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர்
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த 5
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்,
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து,
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம் 10
துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து அணிந்து,
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன்
மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல
துஞ்சா முழவின் கோவற் கோமான்
நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை, 15
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு,
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே!
மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற் கீரத்தனார்
அகநானூறு - 36. மருதம்
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, 5
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், 10
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், 15
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
நார் அரி நறவின் எருமையூரன்,
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் 20
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர்
அகநானூறு - 37. பாலை
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி, 5
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து,
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை, 10
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர,
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, 15
மருதமர நிழல், எருதொடு வதியும்
காமர் வேனில்மன் இது,
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே!
தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார்
அகநானூறு - 38. குறிஞ்சி
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்,
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன். 5
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி,
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் 10
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல்
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து;
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு 15
அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
கூஉம் கணஃது எம் ஊர் என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே.
தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
அகநானூறு - 39. பாலை
ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து,
உள்ளியும் அறிதிரோ, எம்? என, யாழ நின்
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின்
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து 5
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்,
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு 10
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு,
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென,
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி,
அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப் 15
பரந்து படு பாயல் நவ்வி பட்டென,
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு,
இன்னகை! இனையம் ஆகவும், எம்வயின்
ஊடல் யாங்கு வந்தன்று? என, யாழ நின் 20
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி,
நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
வறுங் கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய்ஆகலின், புலத்தியால், எம்மே! 25
பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது.- மதுரைச் செங்கண்ணனார்
அகநானூறு - 40. நெய்தல்
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப,
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
குவை இரும் புன்னைக் குடம்பை சேர,
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, 5
தாழை தளரத் தூக்கி, மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனைய,
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
அறாஅலியரோ அவருடைக் கேண்மை! 10
அளி இன்மையின் அவண் உறை முனைஇ,
வாரற்கதில்ல தோழி! கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை 15
அகமடல் சேக்கும் துறைவன்
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே!
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது.- குன்றியனார்