Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகநானூறு (பகுதி-6) அகநானூறு (பகுதி-8)
முதல் பக்கம் » அகநானூறு
அகநானூறு (பகுதி-7)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
05:03

அகநானூறு - 241. பாலை

துனி இன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம, அவர் என முனியாது
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்,
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை  5
மூங்கில் இள முளை திரங்க, காம்பின்
கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை,
பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி,
தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை  10
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை
விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய்
வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச்
செம் முக மந்தி ஆடும்  15
நல் மர மருங்கின் மலை இறந்தோரே!  

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்.

அகநானூறு - 242. குறிஞ்சி

அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச்
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை,
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம்,  5
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்பு தர வந்தமை அறியாள், நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும் என, பல் பிரப்பு இரீஇ,
அறியா வேலற் தரீஇ, அன்னை  10
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி,
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம்,
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள்,
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய,  15
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ்
முயங்கல் இயைவதுமன்னோ தோழி!
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில்
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச்
சாந்த மென் சினை தீண்டி, மேலது  20
பிரசம் தூங்கும் சேண் சிமை
வரையக வெற்பன் மணந்த மார்பே!  

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார்

அகநானூறு - 243. பாலை

அவரை ஆய் மலர் உதிர, துவரின
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப,
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக்
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய,
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு  5
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக்
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை!
நெடிது வந்தனை என நில்லாது ஏங்கிப்
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை  10
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்று;
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே!  15

தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்கு, தலைமகள் ஆற்றேன் என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்

அகநானூறு - 244. முல்லை

பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை
பகல் உறை முது மரம் புலம்பப் போகி,
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை  5
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை
வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு
இனிதுகொல், வாழி தோழி? என, தன்
பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப,
அருந் துயர் உடையள் இவள் என விரும்பிப்  10
பாணன் வந்தனன், தூதே; நீயும்
புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி,
நெடுந் தேர் ஊர்மதி, வலவ!
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!  

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை.......மள்ளனார்

அகநானூறு - 245. பாலை

உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார்
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர் என
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி,
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்,  5
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
வல் வில் இளையர் தலைவர், எல் உற,
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை,
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்,
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள்  10
கான யானை வெண் கோடு சுட்டி,
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற,
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக்  15
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி,
அம் மா அரிவை ஒழிய,  20
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே.  

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லி, செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்

அகநானூறு - 246. மருதம்

பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக,
நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர!
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு  5
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு
ஆடினை என்ப, நெருநை; அலரே
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்,
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்  10
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய,
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
மொய் வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.  

தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - பரணர்

அகநானூறு - 247. பாலை

மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து,
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை,
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின்,  5
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும்
அரிய கானம் என்னார், பகை பட
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக்
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி,  10
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார்

அகநானூறு - 248. குறிஞ்சி

நகை நீ கேளாய் தோழி! அல்கல்;
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ,
இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு
நால்முலைப் பிணவல் சொலி
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற  5
தறுகட் பன்றி நோக்கி, கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது,
அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம் என,
எய்யாது பெயரும் குன்ற நாடன்  10
செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி அவிழ்ந்து,
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை,
ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து துயல்வர,
இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை;
வல்லே என் முகம் நோக்கி,  15
நல்லை மன்! என நகூஉப் பெயர்ந்தோளே.  

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்ப, தோழி சொல்லியது. - கபிலர்

அகநானூறு - 249. பாலை

அம்ம வாழி, தோழி! பல் நாள்
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும்
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி,  5
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ,
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார்  10
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ,
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த  15
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து,
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி,
உழை மான் இன நிரை ஓடும்
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே.  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நக்கீரனார் ய கான் ஒழிந்து,

அகநானூறு - 250. நெய்தல்

எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப,
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர,
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட,  5
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி,
தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன்,
வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும்
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு
அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய்,  10
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது, கங்குலானே!  

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்

அகநானூறு - 251. பாலை

தூதும் சென்றன; தோளும் செற்றும்;
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்;
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்  5
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித்
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில்,
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர்  10
பணியாமையின், பகை தலைவந்த
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்,
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை  15
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி
மா நிலம் நௌயக் குத்தி, புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
நிரம்பா நீள் இடைப் போகி,
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே.  20

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி சொல்லியது. - மாமூலனார்

அகநானூறு - 252. குறிஞ்சி

இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து
வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி,
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி,  5
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட,
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத்
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித்  10
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல்,
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப்
பெருங் குளம் காவலன் போல,
அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே?  

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது. - நக்கண்ணையார்

*********************
அகநானூறு - 257. பாலை

வேனிற் பாதிரிக் கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம்,
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின்
பொம்மல் ஓதி பொதுள வாரி,  5
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச்
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள
நுண் கோல் எல் வளை தௌர்க்கும் முன்கை  10
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி,
வல்லுவைமன்னால் நடையே கள்வர்
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார்,
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து,
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து,  15
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்,
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ,
வெள் அரா மிளிர வாங்கும்  20
பிள்ளை எண்கின் மலைவயினானே.  

உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்

*********************
அகநானூறு - 261. பாலை

கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர,
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த்
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல்
இலங்கு வளை தௌர்ப்ப வீசி, சிலம்பு நகச்  5
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி
ஏகு என, ஏகல் நாணி, ஒய்யென
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்,
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு,  10
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்,
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே.  15

புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

அகநானூறு - 262. குறிஞ்சி

முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது,  5
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்  10
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்  15
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்தமாறே.  

இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்

அகநானூறு - 263. பாலை

தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத் தோன்றி,
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம்
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம்
பயம் கெடத் திருகிய பைது அறு காலை,
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு,  5
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார்,
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி,
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ!  10
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க,
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே!  15

மகட் போக்கிய தாய் சொல்லியது. - கருவூர்க் கண்ணம்பாளனார்

அகநானூறு - 264. முல்லை

மழை இல் வானம் மீன் அணிந்தன்ன,
குழை அமல் முசுண்டை வாலிய மலர,
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப்
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்,
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு,  5
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர,
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து,
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக,
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி,
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர்  10
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக்
காய் சின யானை கங்குல் சூழ,
அஞ்சுவர இறுத்த தானை
வெஞ் சின வேந்தன் பாசறையோரே?  15

பருவம் கண்டு, வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு இளங்கண்ணனார்

அகநானூறு - 265. பாலை

புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து,
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ் வரை மானும்கொல்லோ?
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை  5
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ?
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல்,
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து,
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு  10
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து,
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து,
அணங்கு அரு மரபின் பேஎய் போல
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க,  15
துகள் அற விளைந்த தோப்பி பருகி,
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர், பூசா வாயர்,
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும்  20
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ,
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே!  

பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. -மாமூலனார்

அகநானூறு - 266. மருதம்

கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின்
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை,
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ,
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ,  5
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண்
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலையாகி,
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து,
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்  10
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன,
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது  15
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்
திரு மணி விளக்கின் அலைவாய்ச்  20
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே!  

பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. -பரணர்

அகநானூறு - 267. பாலை

நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து,
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து,
திறம் வேறு ஆகல் எற்று? என்று ஒற்றி,
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து,
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை,  5
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை,
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர,
மை பட்டன்ன மா முக முசுவினம்
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென  10
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய்,
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
தாம் பழி உடையர்அல்லர்; நாளும்
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு வினை  15
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த,
தோளே தோழி! தவறு உடையவ்வே!  

பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

அகநானூறு - 268. குறிஞ்சி

அறியாய் வாழி, தோழி! பொறி வரிப்
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய  5
காமம் கலந்த காதல் உண்டுஎனின்,
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது,  10
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி,
செய்து பின் இரங்கா வினையொடு
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே!  

குறை வேண்டிப் பின் நின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்

அகநானூறு - 269. பாலை

தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க!
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக!
ஏறுடை இன நிரை பெயர, பெயராது,
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறுமார்,  5
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி,
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்  10
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால்
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்,
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்  15
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர,
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தௌ விளி இயம்ப,
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ,
திரு நுதல் மகளிர் குரவை அயரும்  20
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின்
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
ஒண் செங் கழுநீர் அன்ன, நின்
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே.  25

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார்

அகநானூறு - 270. நெய்தல்

இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்,
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே;
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை  5
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும்
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே,
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான்
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,
அம் மா மேனி தொல் நலம் தொலைய,  10
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே,
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்,
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே.  15

பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -சாகலாசனார்

அகநானூறு - 271. பாலை

பொறி வரிப் புறவின் செங் காற் சேவல்
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி,
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு,
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக்
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி,  5
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப்
பல் காய் அம் சினை அகவும் அத்தம்
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு
நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர்எனினே,  10
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே,
களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும்
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள்,  15
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்,
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே?  

செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

அகநானூறு - 272. குறிஞ்சி
=
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப்
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி,
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க,  5
தனியன் வந்து, பனி அலை முனியான்,
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகர,
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக்  10
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும்,
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு,
முருகு என உணர்ந்து, முகமன் கூறி,
உருவச் செந் தினை நீரொடு தூஉய்,
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ!  15
என் ஆவது கொல்தானே பொன் என
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?  

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

அகநானூறு - 273. பாலை

விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின்,
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ,
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப,
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்,
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர்  5
அறியார்கொல்லோ, தாமே? அறியினும்,
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்,
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ?
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு  10
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி,
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை,
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி,
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம்  15
நில வரை எல்லாம் நிழற்றி,
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.  

பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.-அவ்வையார்

அகநானூறு - 274. முல்லை

இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து,
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம்
பருவம் செய்த பானாட் கங்குல்,
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி,  5
திண் கால் உறியன், பானையன், அதளன்,
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ,  10
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே.  

தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக் காடனார்

அகநானூறு - 275. பாலை

ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என,  5
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
மழலை இன் சொல், கழறல் இன்றி,
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,
ஏதிலாளன் காதல் நம்பி,  10
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி  15
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
செம் புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?  

மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்

அகநானூறு - 276. மருதம்

நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன்
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக்
கடி இலம் புகூஉம் கள்வன் போல,
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு  5
ஆவது ஆக! இனி நாண் உண்டோ?
வருகதில் அம்ம, எம் சேரி சேர!
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண,
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல,  10
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன்
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல்,
பரந்து வெளிப்படாது ஆகி,
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே!  15

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர்

அகநானூறு - 277. பாலை

தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப்
பகல் அழி தோற்றம் போல, பையென
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக,
கடையல்அம் குரல வாள் வரி உழுவை  5
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது,
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்,
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
பொத்துடை மரத்த புகர் படு நீழல்,  10
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின்
வாரா அளவை ஆயிழை! கூர் வாய்
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர்
மனை உறை கோழி மறனுடைச் சேவல்  15
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி,
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம, தானே;
வாரார் தோழி! நம் காதலோரே.  20

தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன்

அகநானூறு - 278. குறிஞ்சி

குண கடல் முகந்த கொள்ளை வானம்
பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத்
தோல் நிரைத்தனைய ஆகி, வலன் ஏர்பு,
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி,
உரும் உரறு அதிர் குரல் தலைஇ, பானாள்,  5
பெரு மலை மீமிசை முற்றினஆயின்,
வாள் இலங்கு அருவி தாஅய், நாளை,
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி
வருவதுமாதோ, வண் பரி உந்தி,
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை;  10
பனி பொரு மழைக் கண் சிவப்ப, பானாள்
முனி படர் அகல மூழ்குவம்கொல்லோ
மணி மருள் மேனி ஆய்நலம் தொலைய,
தணிவு அருந் துயரம் செய்தோன்
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே?  15

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. - கபிலர்

அகநானூறு - 279. பாலை

நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும்,
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ,
ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென் முலை முற்றம் கடவாதோர் என,  5
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
ஆள்வினை மாரியின் அவியா, நாளும்
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை  10
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு
புணர் துயில் எடுப்பும் புனல் தௌ காலையும்
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி,  15
கையறு நெஞ்சினள், அடைதரும்
மை ஈர் ஓதி மாஅயோளே?  

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்

அகநானூறு - 280. நெய்தல்

பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்,  5
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின்,  10
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?  

தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், - அம்மூவனார்

 
மேலும் அகநானூறு »
temple news
அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு நெடுந்தொகை என்று வேறு பெயரும் உண்டு. இந் ... மேலும்
 
அகநானூறு - பாயிரம்  நின்ற நீதி, வென்ற நேமி,பழுதில் கொள்கை, வழுதிய ரவைக்கண்,அறிவு வீற்றிருந்த செறிவுடை ... மேலும்
 
அகநானூறு - 41. பாலை வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்எரி மருள் பூஞ் சினை ... மேலும்
 
அகநானூறு - 81. பாலை நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,புல் அளைப் ... மேலும்
 
அகநானூறு - 121. பாலை நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,வறுமை கூரிய மண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar