Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகநானூறு (பகுதி-7) அகநானூறு (பகுதி-9)
முதல் பக்கம் » அகநானூறு
அகநானூறு (பகுதி-8)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
05:03

அகநானூறு - 281. பாலை

செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்,
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி,
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை  5
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,  10
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து, அவரோ சென்றனர்
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே.  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

அகநானூறு - 282. குறிஞ்சி

பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய,
செறி மடை அம்பின், வல் வில், கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு,
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்,
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப,  5
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு,
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு,
சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார்
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு  10
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்;
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி,
யாயும், அவனே என்னும்; யாமும்,  15
வல்லே வருக, வரைந்த நாள்! என,
நல் இறை மெல் விரல் கூப்பி,
இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே!  

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன்

அகநானூறு - 283. பாலை

நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்,
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி,
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர்  5
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப்
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும்,
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும் என்னாமை, கரி மரம்
கண் அகை இளங் குழை கால்முதல் கவினி,  10
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க,
பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென,
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து,
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப,  15
இனிய ஆகுக தணிந்தே
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே.  

உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

அகநானூறு - 284. முல்லை

சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு,
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி,
இன் துயில் எழுந்து, துணையொடு போகி,  5
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி,
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர்,
விசைத்த வில்லர், வேட்டம் போகி,
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்  10
காமர் புறவினதுவே காமம்
நம்மினும் தான் தலைமயங்கிய
அம் மா அரிவை உறைவு இன் ஊரே.  

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - இடைக்காடனார்

அகநானூறு - 285. பாலை

ஒழியச் சென்மார், செல்ப என்று, நாம்
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர்,
காடு தேர் மடப் பிணை அலற, கலையின்  5
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி,  10
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே, காதலர்;
வாராய் தோழி! முயங்குகம், பலவே.  15

உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

அகநானூறு - 286. மருதம்

வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை,
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க;
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ,
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி,
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த  5
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர!
விழையா உள்ளம் விழையும் ஆயினும்,
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு,
அறனும் பொருளும் வழாமை நாடி,  10
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன்
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்;
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்,
அரிய பெரியோர்த் தெரியுங்காலை,
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன  15
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே?  

வரைந்து எய்துவல் என்று நீங்கும் தலைமகன், தலைமகளை ஆற்றுவித்துக் கொண் டிருத்தல் வேண்டும் என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. - ஓரம்போகியார்

அகநானூறு - 287. பாலை

தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ,
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக,
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை,
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின்
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர்  5
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை,
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை,
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க,  10
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க,
அரம்பு வந்து அலைக்கும் மாலை,
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே.  

பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார்

அகநானூறு - 288. குறிஞ்சி

சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை,
சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை,
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல்,  5
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்!
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்,
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து,
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி  10
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க்
கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்,
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும்,
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து,
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக்  15
கொந்தொடு உதிர்த்த கதுப்பின்,
அம் தீம் கிளவித் தந்தை காப்பே.  

பகற்குறிக்கண் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - விற்றூற்று மூதெயினனார்

அகநானூறு - 289. பாலை

சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும்
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்,
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும்,  5
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி,  10
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப,
மை அற விரிந்த படை அமை சேக்கை
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ,
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி,  15
நல்ல கூறு என நடுங்கி,
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே?  

பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்

அகநானூறு - 290. நெய்தல்

குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை,
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர்,
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென,
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது,  5
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
அம் கண் பெண்ணை அன்புற நரலும்
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன்,
கழி சேர் புன்னை அழி பூங் கானல்,
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம்  10
மணவா முன்னும் எவனோ தோழி!
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன்
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை,
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல்
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ,  15
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே?  

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. - நக்கீரர்

அகநானூறு - 291. பாலை

வானம் பெயல் வளம் கரப்ப, கானம்
உலறி இலை இலவாக, பல உடன்
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப,
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப்
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப்  5
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல்,
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த்  10
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப,
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர
உவலை சூடிய தலையர், கவலை
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும்
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர  15
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய்
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று,
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி,
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி,
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம்  20
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப்
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்,
நல் எழில், மழைக் கண், நம் காதலி
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே.  25

பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ

அகநானூறு - 292.குறிஞ்சி

கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து,
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச்
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ,
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி
ஏதில் வேலன் கோதை துயல்வரத்  5
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்;
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து,
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள்,
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன்  10
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல்
உடு உறு கணையின் போகி, சாரல்
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ,
பலவின் பழத்துள் தங்கும்
மலை கெழு நாடன் மணவாக்காலே!  15

வெறி அச்சுறீஇ,தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர்

அகநானூறு - 293. பாலை

இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை
வலை வலந்தனைய ஆக, பல உடன்
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்,
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி,  5
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி,
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி,
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும்
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே,
செல்ப என்ப தோழி! யாமே,  10
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து,
இன்னா மொழிதும் என்ப;
என் மயங்கினர்கொல், நம் காதலோரே?  

பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். - காவன்முல்லைப் பூதனார்

அகநானூறு - 294. முல்லை

மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர் வார் கண்ணின் கருவிளை மலர,  5
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச,  10
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,
காய் சின வேந்தன் பாசறை நீடி,
நம் நோய் அறியா அறனிலாளர்
இந் நிலை களைய வருகுவர்கொல்? என
ஆனாது எறிதரும் வாடையொடு  15
நோனேன் தோழி! என் தனிமையானே.  

பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்

அகநானூறு - 295. பாலை

நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப,
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின்,
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை,
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி,
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள்  5
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி,
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும்
கல்லுடை அதர கானம் நீந்தி,
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து  10
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்,
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து,
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத்
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர்,  15
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும்
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும்,
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண்,  20
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின்
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே.  

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்

அகநானூறு - 296. மருதம்

கோதை இணர, குறுங் கால், காஞ்சிப்
போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல்,
அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடி,  5
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின்
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில்
பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும்
பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல்  10
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன்,
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல,
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே.  

வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியது. -மதுரைப் பேராலவாயார்

அகநானூறு - 297. பாலை

பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும்,
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி,
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி,  5
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்  10
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்,
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில்,
எழுதியன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை,
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம்  15
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும்
வெரு வரு கானம், நம்மொடு,
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே?  

பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

அகநானூறு - 298. குறிஞ்சி

பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி,
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட,
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ் சினைத்  5
தண் துளி அசைவளி தைவரும் நாட!
கொன்று சினம் தணியாது, வென்று முரண் சாம்பாது,
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது,
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின்,  10
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி,
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ,
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண்
நீ வந்ததனினும், இனிது ஆகின்றே
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை  15
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள்,
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்,
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு,
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர்  20
நீடலர் ஆகி வருவர், வல்லென;
கங்குல் உயவுத் துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே!  

இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்

அகநானூறு - 299. பாலை

எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும்,
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை  5
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு,
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன்
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்,
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்,
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென,  10
வைகு நிலை மதியம் போல, பையென,
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப,  15
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி,
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு,
அறல் மருள் கூந்தலின் மறையினள், திறல் மாண்டு
திருந்துகமாதோ, நும் செலவு என வெய்து உயிரா,
பருவரல் எவ்வமொடு அழிந்த  20
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே.  

இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார்

அகநானூறு - 300. நெய்தல்

நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,
பறி கொள் கொள்ளையர், மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை,
எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர்,  5
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல்
செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி,
செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை எனச்
சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து,
தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது,  10
நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப்
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,
சேணின் வருநர் போலப் பேணா,
இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின்,
வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ,  15
துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்
ஓதம் மல்கலின், மாறு ஆயினவே;
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம் என,
எமர் குறை கூறத் தங்கி, ஏமுற,
இளையரும் புரவியும் இன்புற, நீயும்  20
இல் உறை நல் விருந்து அயர்தல்
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.  

பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார் மணி மிடை பவளம் முற்றும்நித்திலக் கோவை

அகநானூறு - 301. பாலை

வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி,
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி!
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு,  5
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து,
ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை,
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி,
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர,  10
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ,
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை,
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர,  15
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக்
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப,
கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து,
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு  20
பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென,
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர்,
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன் தலை மன்றம் காணின், வழி நாள்,
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்;  
அதுவே மருவினம், மாலை; அதனால்,
காதலர் செய்த காதல்
நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே?  

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - அதியன் விண்ணத்தனார்

அகநானூறு - 302. குறிஞ்சி

சிலம்பில் போகிய செம் முக வாழை
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்,
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும்,  5
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் காதல் அம் தோழி!
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல்,  10
கிளி பட விளைந்தமை அறிந்தும், செல்க என,
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச்
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை,
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு,
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே.  15

பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

அகநானூறு - 303. பாலை

இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து,
பேஎய் கண்ட கனவின், பல் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்,
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன்
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை  5
மா இருங் கொல்லி உச்சித் தாஅய்,
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்
புலம் கந்தாக இரவலர் செலினே,
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்  10
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்!  15
ஐயம் தௌயரோ, நீயே; பல உடன்
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து,
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர்
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே.  20

தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - அவ்வையார்

அகநானூறு - 304. முல்லை

இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை,
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று,
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை,  5
செய்து விட்டன்ன செந் நில மருங்கில்,
செறித்து நிறுத்தன்ன தௌ அறல் பருகி,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை,
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய,  10
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல்
மணி மிடை பவளம் போல, அணி மிகக்
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப,  15
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை,
ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும்
அறவர்அல்லர், நம் அருளாதோர் என,
நம் நோய் தன்வயின் அறியாள்,  20
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?  

பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார்

அகநானூறு - 305. பாலை

பகலினும் அகலாதாகி, யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய,
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள்,
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை,  5
பருகுவன்ன காதலொடு திருகி,
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து,
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ;
அருளிலாளர் பொருள்வயின் அகல,
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து  10
யான் எவன் உளெனோ தோழி! தானே
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய்,
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய,
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனை எரி பிறப்ப ஊதும்  15
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே?  

பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

அகநானூறு - 306. மருதம்

பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ!
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட,
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்  5
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து,
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி  10
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி,
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு
ஊடினள் சிறு துனி செய்து எம்
மணல் மலி மறுகின் இறந்திசினோளே.  15

தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

அகநானூறு - 307. பாலை

சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய்,
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட,
பகலும் கங்குலும் மயங்கி, பையென,
பெயல் உறு மலரின் கண் பனி வார,
ஈங்கு இவள் உழக்கும் என்னாது, வினை நயந்து,  5
நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை
மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து,
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை,
பெருங் கை எண்கினம் குரும்பி தேரும்  10
புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில்,
கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து
உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது,
இரும் புறாப் பெடையொடு பயிரும்
பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே?  15

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

அகநானூறு - 308. குறிஞ்சி

உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல்
ஆலி அழி துளி பொழிந்த வைகறை,
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின்,
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ,  5
கலம் சுடு புகையின் தோன்றும் நாட!
இரவின் வருதல் எவனோ? பகல் வரின்,
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து,
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி,  10
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத்
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட,
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை,  15
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே.  

இரவு வருவானைப் பகல் வருக என்றது. - பிசிராந்தையார்

அகநானூறு - 309. பாலை

வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,  5
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை,
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய என்னார், கோடியர்
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன்  10
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
நாம் செலின், எவனோ தோழி! காம்பின்
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம்  15
தண் பெரு படாஅர் வெரூஉம்
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே?  

பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்

அகநானூறு - 310. நெய்தல்

கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற
நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும்,
தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து,
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின்,
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு  5
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும்
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட,
காதலின் வளர்ந்த மாதர்ஆகலின்,
பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால்,
குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப!  10
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப்
பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக்
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து  15
உரும் இசைப் புணரி உடைதரும்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.  

தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது. - நக்கீரனார்

அகநானூறு - 311. பாலை

இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று,
அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை,
எழுதியன்ன திண் நிலைக் கதவம்
கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென,
திறந்து நப் புணர்ந்து, நும்மின் சிறந்தோர்  5
இம்மை உலகத்து இல் எனப் பல் நாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு,
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப,
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர்
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி  10
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ்
சுரம் இறந்து ஏகினும், நீடலர்
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே.  

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்

அகநானூறு - 312. குறிஞ்சி

நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி,
இரவின் வரூஉம் இடும்பை நீங்க,
வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து,
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்,
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது,  5
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப்
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக,
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி!
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார்  10
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை,
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த
அடு புகழ் எஃகம் போல,
கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே!  

தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது; தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -மதுரை மருதன் இளநாகனார்

அகநானூறு - 313. பாலை

இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு! என
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும்,
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க,
ஐய ஆக வெய்ய உயிரா,  5
இரவும் எல்லையும் படர் அட வருந்தி,
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப,
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய,
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து,
வருவர் வாழி, தோழி! பெரிய  10
நிதியம் சொரிந்த நீவி போலப்
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை,
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர்
வசி படு புண்ணின் குருதி மாந்தி,
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல,  15
இல் வழிப் படூஉம் காக்கைக்
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.  

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

அகநானூறு - 314. முல்லை

நீலத்து அன்ன நீர் பொதி கருவின்,
மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின்
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப,
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப,
மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின்  5
திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள,
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை,
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி
கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன்
வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர்  10
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம் தொடைப்
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப,
இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை
எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது என,
கடவுட் கற்பின் மடவோள் கூற,  15
செய் வினை அழிந்த மையல் நெஞ்சின்
துனி கொள் பருவரல் தீர, வந்தோய்!
இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி!
வேலி சுற்றிய வால் வீ முல்லைப்
பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின்  20
இன் நகை இளையோள் கவவ,
மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே!  

வினை முற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்

அகநானூறு - 315. பாலை

கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின;
பெண் துணை சான்றனள், இவள் எனப் பல் மாண்
கண் துணை ஆக நோக்கி, நெருநையும்,
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும்,  5
அறியாமையின் செறியேன், யானே;
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள்,
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி,
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக்  10
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய்,
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப,
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென,
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி,
சேக்குவள் கொல்லோதானே தேக்கின்  15
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை,
ஊன் புழுக்கு அயரும் முன்றில்,
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.  

மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில் கீரத்தனார்

அகநானூறு - 316. மருதம்

துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை,
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து,
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட,
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து,  5
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள்,
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர,
பரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீ  10
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை!
அது புலந்து உறைதல் வல்லியோரே,
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து,
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி,
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப,  15
வைகுநர் ஆகுதல் அறிந்தும்,
அறியார் அம்ம, அஃது உடலுமோரே!  

தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது. -ஓரம்போகியார்

அகநானூறு - 317. பாலை

 மாக விசும்பின் மழை தொழில் உலந்தென,
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி,
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க,
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்  5
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப,
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல,
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து  10
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப,
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும்
ஆன் ஏமுற்ற காமர் வேனில்,
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக்  15
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம் என்ற பருவம் ஆண்டை
இல்லைகொல்? என மெல்ல நோக்கி,
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல,  20
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து
என்னுழியதுகொல் தானே பல் நாள்
அன்னையும் அறிவுற அணங்கி,
நல் நுதல் பாஅய பசலை நோயே?  

தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார்

அகநானூறு - 318. குறிஞ்சி

கான மான் அதர் யானையும் வழங்கும்;
வான மீமிசை உருமும் நனி உரறும்;
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய;
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம்  5
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்,
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட!
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ
இன்று தலையாக வாரல்; வரினே,
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய,  10
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை,
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே!  15

இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர்

அகநானூறு - 319. பாலை

மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி,
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை,  5
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை,
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை,
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின்  10
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள்
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத்
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள்,
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள்,
செல்வேம் என்னும் நும் எதிர்,  15
ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே!  

செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்

அகநானூறு - 320. நெய்தல்

ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ,
திமிலோன் தந்த கடுங் கண் வய மீன்,
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர்,
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும்
கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்ப!  5
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்
அலர் வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும்,
நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம்
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்,
தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை  10
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்
வண்டற் பாவை சிதைய வந்து, நீ
தோள் புதிது உண்ட ஞான்றை,
சூளும் பொய்யோ, கடல் அறி கரியே?  

பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

 
மேலும் அகநானூறு »
temple news
அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு நெடுந்தொகை என்று வேறு பெயரும் உண்டு. இந் ... மேலும்
 
அகநானூறு - பாயிரம்  நின்ற நீதி, வென்ற நேமி,பழுதில் கொள்கை, வழுதிய ரவைக்கண்,அறிவு வீற்றிருந்த செறிவுடை ... மேலும்
 
அகநானூறு - 41. பாலை வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்எரி மருள் பூஞ் சினை ... மேலும்
 
அகநானூறு - 81. பாலை நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,புல் அளைப் ... மேலும்
 
அகநானூறு - 121. பாலை நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,வறுமை கூரிய மண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar