பதிவு செய்த நாள்
22
மார்
2013
11:03
ஆழ்வார்குறிச்சி: சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் பங்குனி திருவிழா கால்நாட்டுதல் வைபவத்துடன் துவங்கியது. ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி தேர்த் திருவிழா 12நாட்கள் நடைபெறும். சிவசைலத்தில் கோயில் இருந்தாலும் தேரோட்டம் , தெப்ப உற்சவம் ஆகிய வைபவங்கள் ஆழ்வார்குறிச்சியில் தான் நடைபெறும். தேர்த் திருவிழாற்கான கால்நாட்டுவிழா நடந்தது. வரும் ஏப்.2ம்தேதி இரவு 9 மணி முதல் 9.30மணிக்குள் சிவசைலத்தில் அங்குரார்ப்பணமும், மறு நாள் 3ம் தேதி காலை 6 மணியிலிருந்து 6.30க்குள் சிவசைலத்தில் கொடியேற்றமும் நடக்கிறது. அன்றிரவு 9மணியளவில் சிவசைலத்தில் இருந்து வெள்ளி சப்பரத்தில் சுவாமி, அம்பாள் ஆழ்வார்குறிச்சிக்கு எழுந்தருளுகின்றனர். இரவு 11மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு ஊர் துவக்கத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஏப்.4ம்தேதி முதல் 6ம் தேதி வரை சுவாமி, அம்பாள் இரவு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா செல்கின்றனர். ஏப்.7ம் தேதி அதிகாலை திருத்தேருக்கு கால்நாட்டுதலும், இரவு சுவாமி, அம்பாள் இந்திர, விமான வாகனங்களில் எழுந்தருள்கின்றனர். ஏப். 12ம் தேதிவரை சுவாமி, அம்பாளுக்கு ஒவ்வொருநாளும் பல்வேறு நிகழ்ச்சிகளும், வீதி உலாவும் நடக்கிறது. 13ம்தேதி அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளலும், பின்னர் தேரோட்டமும் நடக்கிறது. 14ம்தேதி சித்திரை மாதம் முதல் நாள் அதிகாலை சுவாமி அம்பாள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி திருத்தேர் தடம் பார்த்தலும், சப்தாவர்ணமும் நடக்கிறது. மாலை சுவாமி, அம்பாள் சிவசைலம் எழுந்தருளலும், பின்னர் சிவசைலத்தில் தீர்த்தவாரியாகி ரிஷப வாகனத்தில் அத்ரி மகரிஷிக்கு காட்சியளிக்கும் வைபவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் அஜீத், செயல் அலுவலர் வெங்கடேஷ்வரன் மேற்பார்வையில் பங்குனி உற்சவ கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.