பதிவு செய்த நாள்
23
மார்
2013
10:03
நகரி: திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தெப்ப உற்சவம் இன்று துவங்குகிறது.தெப்ப உற்சவ விழா, இன்று முதல் இம்மாதம், 28ம் தேதி வரை, ஐந்து நாட்கள், சிறப்பு வைபவமாக நடைபெறுகிறது. தெப்ப உற்சவத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், மலையப்ப சுவாமி, தினமும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகள் குறித்து, நிர்வாக அதிகாரி சுப்ரமணியம் கூறியதாவது:தெப்ப உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு என, 500 ரூபாய் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள், திருமலையில் உள்ள தேவஸ்தான விசாரணை மைய கவுன்டரில், நாளை (இன்று) முதல் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தினமும், 200 பேருக்கு இந்த டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும். தெப்ப உற்சவ விழாவை ஒட்டி, திருமலை கோவில் மாடவீதி, தெப்ப திருக்குளம் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சுப்பிரமணியம் கூறினார்.