பதிவு செய்த நாள்
25
மார்
2013
11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், இன்று (25ம் தேதி) இரவு, தல மகிமையை விளக்கும், வெள்ளி மாவடி சேவை உற்சவம், வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா நடைபெறும். இவ்வாண்டு விழா, கடந்த 17ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு, வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான இன்று காலை, ஆள்மேல் பல்லக்கு உற்சவம், இரவு, பிரபல உற்சவமான, வெள்ளி மாவடி சேவை உற்சவம் நடைபெற உள்ளது.ஏகாம்பரநாதர் கோவில், ஸ்தல விருட்சம் மாமரம். கோவில் மூலஸ்தானத்திற்கு பின்புறம், இரண்டாவது உட்பிரகாரத்தில் மிகப்பெரிய மாமரம் இருந்தது. இம்மரம், 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இம்மரத்தில், நான்கு கிளைகள் இருந்தன. ஒவ்வொரு கிளையில் பழுக்கும் பழங்களும், ஒவ்வொரு விதமான சுவை கொண்டவையாக இருந்தன.இவை, ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்ற, நான்கு வேதங்களை உணர்த்துவதாக கூறப்பட்டது. இம்மரம், தற்போது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், வறட்சியில் கருகிவிட்டது. தற்போது அவ்விடத்தில், புதிதாக மாங்கன்று வைக்கப்பட்டு நன்கு வளர்ந்து வருகிறது. இம்மரத்தின், கீழ் ஏகம்பரர், ஏலவார்குழலியுடன் வீற்றிருக்கிறார். அவருடைய திருவடி நிழலில், பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் கைகூப்பி வணங்கி நிற்கின்றனர்.இவர்களுக்கு கீழே, பஞ்சாக்கினி மத்தியில் தவம் செய்யும் தபஸ் காமாட்சி உருவம், அதன் பக்கத்தில், லிங்கோற்பவர் உருவம், அதனை அடுத்து காமாட்சி சிவலிங்கத்தை கைகளால் அணைத்துக் கொண்டிருக்கும் சிற்பங்கள் காட்சி தருகின்றன. இதை, மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழாவின், ஒன்பதாம் நாள் இரவு, வெள்ளி மாவடி சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.