பதிவு செய்த நாள்
25
மார்
2013
11:03
திருப்பாலைவனம்: திருப்பாலீஸ்வரர் கோவிலில் நடந்து வரும், பிரம்மோற்சவ விழாவில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பொன்னேரி - பழவேற்காடு சாலை திருப்பாலைவனம், லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா, இம்மாதம், 17ம்தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.கடந்த ஆண்டு, 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய தேர் உருவாக்கப்பட்டது. அந்த தேரினை கொண்டு, பிரம்மோற்சவ விழாவின், 8ம் நாளான நேற்று முன்தினம் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.லோகாம்பிகை சமேத திருப்பாலீஸ்வரர் உற்சவ பெருமான், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, புதிய தேரில் எழுந்தருளினார்.பின்னர், காலை 8:00 மணிக்கு புறப்பட்ட தேர், மாடவீதி வலம் வந்து சன்னிதி தெரு, ரெட்டி, பழவேற்காடு பிரதான சாலை வழியாக சென்று, மாலை 3:00மணிக்கு நிலைக்கு வந்து அடைந்தது.விழாவில், திருப்பாலைவனம், வேம்பேடு, மெதூர், ஆவூர், வஞ்சிவாக்கம், வோன்பாக்கம், காஞ்சிவாயல், ஆசானபூதூர், செஞ்சியம்மன் நகர், தொட்டிமேடு, பழவேற்காடு உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு, தேரின் வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.