பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, நேற்று காலை, திடீரென வாகனத்தை நிறுத்தி, சாலை ஓர கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த கோவில் குருக்களை அழைத்து, பூஜை செய்த பிரசாதத்தை வாங்கிச் சென்றார். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, ஈஞ்சம்பாக்கம் அனுமான் காலனியை சேர்ந்தவர் பால சூர்யா, 34. இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, 10க்கும் அதிகமான, விநாயகர் கோவில்களுக்கு பூஜை செய்து வருகிறார். மேலும், சாலைகளில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்வதும், இவரது வழக்கம். வழக்கம் போல், நேற்று காலை கிழக்கு கடற்கரைச் சாலையில், அக்கரை சிக்னல் அருகில் உள்ள, சாலையோர விநாயகர் கோவிலில், பூஜை செய்து கொண்டிருந்த போது, முதல்வர் ஜெயலலிதாவின் கார், இவரை கடந்து சென்றது. சிறிது நேரத்தில், முதல்வரின் கார் பின்னால் வந்து, கோவில் அருகே நின்றது. பாதுகாப்பு அதிகாரிகள், பூஜை செய்து கொண்டிருந்த சூர்யாவை அழைத்தனர். குருக்கள் சூர்யா, படபடப்பு கலந்த பயத்துடன், முதல்வர் அருகில் சென்றார். காரில் இருந்து இறங்கிய முதல்வர், அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர், பூஜை செய்த பிரசாதம் வாங்கி கொண்டு, 1,000 ரூபாய் ரொக்கப்பணம் அளித்தார். கோவில் குருக்கள் சூர்யா, சிறிது நேரம் என்ன நடந்தது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.