பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், மூலவர் சன்னதிக்கு செல்ல முடியாமல், கேட்போட்டு பூட்டி விடுவதால் பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமிகளுக்கு தனித்தனி கருவறைகள் உள்ளன. முகப்பு பகுதியில் விநாயகர், முருகன் சிலைகள் உள்ளன. சுற்றுப் பிரகாரத்தின் தென்பகுதியில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பின்புறம் லிங்கோத்பவர், வடபகுதியில் முருகன், துர்க்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர், நவக்கிரகங்களும், கிழக்கு பகுதியில் சந்திரன், சூரிய சிலைகளும் உள்ளன. வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி சிறப்பு வழிபாட்டிற்காக பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சனிக்கிழமை நவக்கிரக வழிபாட்டிற்காக அதிகம் பேர் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் துர்க்கை, முருகன் சன்னதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய பக்தர்கள் வருகின்றனர். சிறப்பு அபிஷேகம் செய்வதற்கு செல்லும்போது, அர்ச்சகர் சுந்தரேஸ்வரர் சன்னதியின் முன்பகுதியை கேட்போட்டு மூடிச் சென்று விடுகிறார். இதனால் மூலவர் சன்னதிக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்ய செல்லும் அர்ச்சகர் மீண்டும் மூலவர் சன்னதிக்கு வர நீண்ட நேரம் ஆகிறது. இதனால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. கோயிலில் கூடுதல் அர்ச்சகர் நியமிக்க அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மூலவர் சன்னதியை கேட்போட்டு மூடுவதை தவிர்க்க வேண்டும், என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.