பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில், பங்குனி உத்திர பெருவிழா, கடந்த 17ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. விழாவின் எட்டாம் நாளான நேற்றுமுன்தினம் குன்றக்குடி வடக்கு வையாபுரி குளத்தில், தெப்ப உற்சவம் நடந்தது. அதை தொடர்ந்து, சுவாமி வள்ளி தெய்வானையுடன், வெள்ளி ரதத்தில் நான்கு வீதிகளில் திருவீதி உலா வந்தார்.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 5.30 மணிக்கு, சுவாமி, வள்ளி, தெய்வானையுடன், தேருக்கு எழுந்தருளினார். அங்கு அவருக்கு, சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.மாலை 3.30 மணிக்கு, பொன்னம்பல அடிகள் தலைமையில் பக்தர்கள் தேரை இழுத்தனர். நான்குரத வீதிகள் வழியாக வலம் வந்து, மாலை 5.15 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இரவு 8 மணிக்கு வெள்ளி ரதத்தில், சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று, கட்டுமாவடி, மீமிசல், ஆவுடையார் கோவில், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, கண்ணங்குடி, திருப்பாக்கோட்டை, ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம், திருவாடானை, காளையார்கோவில், கமுதி, சிவகங்கை, காரைக்குடி, கீழசிவல்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமானோர், அக்னி காவடி, பறவைக்காவடி எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.