பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
கும்பகோணம்: கும்பகோணம் மகாமக குளத்தைச் சுற்றி இன்று பவுர்ணமி தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.கும்பகோணம் சேக்கிழார் மன்றம் சார்பில், மகாமக குள பவுர்ணமி தீர்த்த வலம் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், ஜனரஞ்சனி சபா துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் பேசிதாவது: பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் உலகெங்கிலும் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடுவது வழக்கம். 5 ஏக்கர் பரப்பளவும் 40 அடி ஆழமும் 27 படிகளும் கொண்ட இப்புனித குளத்தில் உள்ளே வாயு, கங்கா, பிர்மா, யமுனை, குபேர, கோதாவரி, ஈசானியா, நர்மதை, சரஸ்வதி, இந்திர, அக்னி, காவேரி, யம, குமரி, நருதி, பயோஹிணி, தேவ, வருண, சரயு, கன்யா என 20 வகையான தீர்த்த கிணறுகள் உள்ளன. மகாமகக் குளத்தை சுற்றிலும் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 மண்டபங்கள் அமைந்துள்ளன அதில் ஒவ்வொரு மண்டபத்திலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வவர், தானேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்ளேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என மொத்தம் 16 வகையான சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து சோடசமகாலிங்க சுவாமிகள் என அழைப்பது வழக்கம். "தென்னிந்தியாவின் கும்பமேளா என கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மாசி மகத்திருவிழாவை அழைப்பது வழக்கம். அதே போல், ஆண்டுதோறும் மாசிமாத மகத்தின் போது மாசிமகத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாக்களின் போது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பக்தர்கள் வந்து மகாமகக் குளத்தில் புனித நீராடிச் செல்கின்றனர். இந்த புனித குளத்தை பவுர்ணமி தினத்தில் தீர்த்த வலம் வந்தால், சாந்தம் மிளிரவும், அமைதி ஒளிரவும், பகைமை அகன்று, சுபிட்சம் மலரும் என்பதால் தீர்த்த வலம் வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று 26ம் தேதி பங்குனி மாத பவுர்ணமி தினமான மாலை 5.30 மணிக்கு வீரசைவ மடத்திலிருந்து வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கிறது. நிகழ்ச்சியை வீரசைவ மடத்தின் சுவாமிகள் நீலகண்ட தேசிகேந்திர மகா சுவாமிகள் தொடங்கி வைக்கிறார். ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில் மகா மக குளத்தைச் சுற்றி மூன்று முறை தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வலம் வரும்போது, திருமுறை பாராயணம், மங்கள இசை இசைப்பட உள்ளது. தொடர்ந்து, ஒவ்வொரு மாத பவுர்ணமியில் தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், சேக்கிழார் மன்ற செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் பரசுராமன், ஜனரஞ்சனி சபா செயலாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.