பதிவு செய்த நாள்
26
மார்
2013
11:03
கழுகுமலை:கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் முருகபக்தர்களிடம் பிரசித்தி பெற்றதாகும். கழுகுமலை மலைக்குன்றையே விமானமாக கொண்ட இக்கோயிலில் கழுகாசலமூர்த்தி ராஜகோலத்தில் பொதிகை மலையை நோக்கி மேற்கு முகமாக அருள்பாலிக்கிறார். மேலும் சுவாமியை சுற்றிவந்து தரிசனம் செய்ய வேண்டுமெனில் மலைக்குன்றையே சுற்றி வர வேண்டும் என்பதால் இங்கு நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு இணையாக பக்தர்கள் கருதுகின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு நாளும் முருகனுக்கு பல்வேறு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள், மாதாந்திர சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. அதேபோல் முருகனுக்கென்று சிறப்பாக கொண்டாடும் திருவிழாக்கள் பக்தர்களிடம் முக்கியத்துவம் வாய்ந்தது. முருகப்பெருமானின் திருவிழாக்களில் கழுகுமலை நகரமே விழாக்கோலம் பூண்டு கொண்டாடும் விழாவாக பங்குனி உத்திர தேரோட்ட திருவிழா உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 13 நாட்கள் கொண்டாடப்படும் பங்குனி உத்திர திருவிழா இந்தாண்டு கடந்த 17ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ராஜஅநுக்கை, தேவஅநுக்கையும் நடந்தது. இதையடுத்து நடந்த கொடியேற்றத்தை தொடர்ந்து 2ம்நாளன்று பூதவாகனத்திலும், 3ம் நாளன்று அன்னவாகனத்திலும், 4ம் நாளன்று வெள்ளி யானை வாகனத்திலும், 5ம் நாளன்று வெள்ளி மயில் வாகனத்திலும், 6ம் நாளன்று ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தருடன் அகிலாண்டேஸ்வரி அம்பிகையும், மேஷ வாகனத்தில் முருகனுடன் வள்ளி தெய்வானை திருவீதி உலாவும் நடந்தது. மேலும் 7ம் திருநாளன்று மாலை சுமார் 4 மணிக்கு சண்முகருக்கு அர்ச்சனையும், இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிவப்புமலர் சூடி சிவன் அம்சத்திலும், இரவு 12 மணிக்கு வெள்ளைமலர் சூடி அலங்காரம் செய்யப்பட்டு பிரம்மன் அம்சமாகவும், மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பச்சைமலர் சூடி அலங்காரம் செய்து திருமால் அம்சத்தில் கழுகுமலை மலைக்குன்றை சுற்றி கிரிவலமாக திருவீதி உலாவும், 8ம் திருநாளன்று கயிலாய பர்வத வாகனத்தில் திருவீதி உலாவும் நடந்தது. இதையடுத்து நேற்று 9ம் திருநாளாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைரத்தேர்வடம் பிடித்தல் நடந்தது.இதையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தள் பூஜை நடந்தது. தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நடந்தது. இதையடுத்து சுமார் 10.30 மணியளவில் கன்னியாகுமரி எஸ்பி மணிவண்ணன், கழுகுமலை டவுண்பஞ்., தலைவர் சுப்பிரமணியன், கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன் ஆகியோர் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர்.தொடர்ந்து பக்தர்களிள் பக்திகோஷம் விண்ணைப்பிளக்க வைரத்தேர் நான்கு ரதவீதிகளில் ஓடி மாலையில் நிலைக்கு வந்தது. மேலும் வைரத்தேருக்கு முன்னதாக கோரதத்தில் சண்டிகேஸ்வரரும், சட்ட ரதத்தில் விநாயகரும் முன் சென்றனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்ததுடன், இரவில் மயில் வாகனத்தில் தேர் தடம் பார்த்தல் நடந்தது. இந்நிலையில் இன்று தீர்த்தவாரியும், இரவில் தபசுக்காட்சியும், நாளை மறுநாள் வள்ளி திருக்கல்யாணமும், அடுத்தநாள் (மார்ச்.28) தந்த பல்லக்கில் பட்டின பிரவேசமும், இறுதிநாளில் (மார்ச்29) மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.பங்குனி உத்திர திருவிழா தேரோட்டத்தில் கழுகுமலை டவுண் பஞ்., தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் அருணா சுப்பிரமணியன், கோவில்பட்டி ராஜமீரா கோல்டு நிறுவனத்தினர், காமினி மோட்டார்ஸ் ஜெயக்கொடி, மகேஷ் மோட்டார்ஸ் கணேசன், மதி டிஜிட்டல் ஸ்டுடியோ மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதிராஜசேகர், திருகுமாரபுரம் ஷீரடி சாய்பாபா கோயில் பவுர்ணமி பூஜைக்குழுவினர், பசும்பொன் தேசிய கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துராஜ், ஸ்ரீஜெய்வைஷ்ணவி சிட்பண்ட் மேனேஜிங் டைரக்டர் இசக்கி, கழுகாசலமூர்த்தி குடவரைக்கோயில் உழவாரப்பணிக்குழு தலைவர் முத்துசாமி, சுந்தரம்மாள், பேராசிரியர்கள் சிவக்குமார், வேல்மணி, வக்கீல் ரவிசங்கர், கற்பகவள்ளி, சிவகாமசுந்தரி, ராமலட்சுமி, அரசப்பன், மாதவன், கார்த்திகேயன், பாலேஸ்வரி, உமாமகேஸ்வரி, வசந்தகுமாரி, சித்ரா, கரண்குமார், மதன்குமார், சுந்தர், சந்தோஷ், அக்ஷயா, செல்வம், அறிவுகதிர், அருட்சுடர், அருண், நிவேதா, கிரிவலக்குழு தலைவர் முருகன், ஆர்எம்ஆர் ஆயில் மில் ரமேஷ் குடும்பத்தினர், கோவில்பட்டி எம்எஸ் யுனிவர்சிட்டி கல்வி மையத்தினர், கண்ணன் சில்க்ஸ் நிறுவனத்தினர், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி, சென்ட்ரல் பாங்க் மண்டல மேலாளர் பெரியதம்பி, கழுகுமலை விஏஓ கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை தொடர்ந்து பசும்பொன் தேசிய கழக மாவட்ட இளைஞரணி சார்பில் அன்னதான பார்சல் வழங்கப்பட்டது. தேரோட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை கழுகுமலை இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.