பதிவு செய்த நாள்
27
மார்
2013
10:03
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். ஈரோடு மாவட்டம், பண்ணாரி மாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், பங்குனி உத்திரம் நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய்கிழமை, குண்டம் விழா நடக்கும். இந்தாண்டுக்கான குண்டம் விழா, கடந்த, 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, பண்ணாரி மாரிம்மன் கோவில் தெப்பக்குளத்தில் இருந்து, அம்மன் அழைப்பு நடந்தது. நேற்று அதிகாலை, 3:45 மணிக்கு தலைமை பூசாரி சேகர், குண்டத்தில் முறைப்படி பூஜை செய்து, முதலில் தீ மிதித்தார். இவரை தொடர்ந்து, பூசாரிகள், சப்பரத்தை சுமந்தபடி கோவில் பணியாளர்கள், பக்தர்கள் தீ மிதித்தனர். கடந்தாண்டைவிட இந்தாண்டு, பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. இவர்களை தொடர்ந்து, கால்நடைகள் தீ குண்டத்தில் இறக்கப்பட்டன.