கடவுளிடம் அன்பு காட்டுவது பக்தி. அவரை முழுமையாகச் சரணடைவது பிரபத்தி. பக்தியும் பிரபத்தியும் ஒன்றாக இருந்தாலும் பக்தியை விட பிரபத்தியே உயர்வானது. வேங்கடேச சரணௌ சரணம் பிரபத்யே, லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்று கடவுளையே சரணாகதியாக வழிபடுவர். பக்தியை குரங்குக்குட்டிக்கும், பிரபத்தியை பூனைக்குட்டிக்கும் ஒப்பிடுவர். தாய்க்குரங்கு மரம் விட்டு மரம் தாவும் போது, குட்டிக்குரங்கு தன் இருகைகளால் தாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். தாய்க்குரங்கு தன்னைக் கீழே விடாது என்று குட்டிக்குரங்கு நம்பினாலும். முன்னெச்சரிக்கையாக தன் கைகளால் தாயைப் பற்றுவது போல கடவுளை நம்புவதோடு சுயமுயற்சியும் கொண்டு வாழ்வது பக்தி. தாய்ப்பூனை எங்கு சென்றாலும், குட்டியைத் தன் வாயால் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லும். குட்டிப்பூனை இதற்காக எந்த முயற்சியும் செய்வதில்லை. அதுபோல, கடவுளிடம் சரணடைந்து, எல்லாவற்றையும் அவன் பார்த்துக்குவான்! என்ற நிலையில் இருத்தலே பிரபத்தி. பக்தியை விட பிரபத்திவழி சுலபமானது. ஆனால், பிரபத்திக்கு ஆழமான நம்பிக்கை அவசியம்.