திருமால் தசாவதாரம் எடுத்தார். இதன்பிறகு சீனிவாசனாக பூமிக்கு வந்து திருப்பதியில் கோயில் கொண்டார். புராணகாலத்தில் அவர் கபிலர் என்னும் பெயரில் முனிவராகவும் அவதாரம் எடுத்த கதை தெரியுமா! முதல் மனிதர் எனக்கருதப்படும் ஸ்வாயம்புவ மநு, அவரது மனைவி தேவஹுதி ஆகியோருக்கு பிறந்தவர் கபிலர். இவர் சிறந்த ஞானியாக விளங்கினார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, சாந்தமே உருவான திருமால், ஆவேசமாகி விட்டால் யாராலும் தாங்க முடியாது. அவ்வாறு ஒருமுறை, தன் ஆவேசத்தை வெளிப்படுத்த எடுத்த அவதாரம் இது. இவர் புகையற்ற நெருப்பின் நிறம் உடையவர். கைகளில் சங்கு, ஜெபமணிமாலை இருக்கும். ராமபிரானின் முன்னோரான ஸகரன் மன்னனாக இருந்த போது, அஸ்வமேத யாகம் செய்தார். அவருக்கு 60 ஆயிரம் பிள்ளைகள். (அக்காலத்தில் இது சாத்தியமாக இருந்தது. காரணம், அப்போது மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தனர். தசரதர் 60 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்கிறது ராமாயணம்) ஸகரன் அஸ்வமேத யாகம் செய்தபோது, அனுப்பப்பட்ட குதிரை காணாமல் போனது. அதைத் தேடி வந்த ஸகரனின் பிள்ளைகள் கபிலமுனிவர் அருகே அது நிற்பதைக் கண்டு, அவரே திருடியதாகக் குற்றம் சாட்டினர். கோபமடைந்த கபிலர் அவர்களைச் சாம்பலாக்கி விட்டார். பின் ஸகரனின் வம்சத்தில் பிறந்த அம்சுமான் என்பவன் இறந்து போன தன் மூதாதையர் நற்கதியடைய கபிலமுனிவரை வேண்ட அவரும் அருள்செய்தார்.