பதிவு செய்த நாள்
29
மார்
2013
10:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்றுமுன்தினம் இரவு நூதன வெள்ளி உருத்திரகோடி விமானம் உற்சவம், வாண வேடிக்கையுடன் சிறப்பாக நடந்தது. இன்று காலை தீர்த்தவாரி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், கடந்த 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு, வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்றுமுன்தினம் பகல் 12:00 மணிக்கு, கந்தப்பொடி உற்சவம் நடந்தது. இரவு நூதன வெள்ளி உருத்திரகோடி விமான உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி, இரவு 9:30 மணிக்கு, ஏகாம்பரநாதர் வெள்ளி உருத்திரகோடி விமானத்தில் எழுந்தருளினார். அதன்பின் அம்மன், முருகர், விநாயகர், தனித்தனி வாகனத்தில் எழுந்தருளினர். மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் முன்பாக கேரள வாத்தியக் குழுவினர் இசைக் கருவிகளை இசைத்தபடி சென்றனர். சிவன், விஷ்ணு, நரசிம்மர், விநாயகர் வேடமிட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். இரவு 11:00 மணிக்கு ஊர்வலம் பூக்கடை சத்திரம் பகுதியை வந்தடைந்தது. அங்கு வாண வேடிக்கை நடந்தது. இரவு 12:00 மணிக்கு சுவாமி அங்கிருந்து கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இன்று, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நிறைவு பெறுகிறது. அதையொட்டி காலை சர்வதீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இரவு கொடி இறக்கம் மற்றும் யானை வாகன உற்சவம் நடைபெறும். நாளை காலை 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம், மாலை 6:00 மணிக்கு, பொன் விமானத்தில் திருமுறை உற்சவம் நடைபெறும்.