மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பல் உற்சவம் கோலாகலமாக நடந்தது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சுப்ரமணியர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 18ம் தேதி துவங்கியது. கடந்த 26ம் தேதி தேர் திருவிழாவும், நேற்று முன்தினம் காலை அக்னி குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது.நேற்று அதிகாலை 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மலை கோவிலில் இருந்து சுப்ரமணியர் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் கோவில் அருகேயுள்ள குளத்திற்கு அழைத்து வரப்பட்டார்.அங்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பலில், அதிகாலை 2:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேதராய் சுப்ரமணியர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தெப்பல் குளத்தை மூன்று முறை வளம் வந்தவுடன், உற்சவரை மலை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். தெப்பல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.