பதிவு செய்த நாள்
29
மார்
2013
10:03
நாமக்கல்: நாமக்கல் நரசிம்ம ஸ்வாமி கோவில் திருத்தேர் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியின் அருள் பெற்றுச் சென்றனர். நாமக்கல் கோட்டை சாலையில், பிரசித்தி பெற்ற நரசிம்ம ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில், பங்குனி தேர்த் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான கோவில் திருத்தேர் விழா, கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, திருத்தேர் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன், மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் காந்திமுருகேசன், நகராட்சி சேர்மன் கரிகாலன் ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். திருத்தேர் முக்கிய வீதி வழியாக சென்று, நிலையை அடைந்தது. அதுபோல், மதியம் ரங்கநாதர் திருத்தேர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் வீதி உலா நடந்தது. திருத்தேரை, நகரின் முக்கிய பிரமுகர்கள், மக்கள் வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் சென்று, மீண்டும் நிலையை அடைந்தது. திருத்தேர் விழாவில், நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியின் அருள் பெற்றுச் சென்றனர். விழாவை முன்னிட்டு, ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைத்து, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.