பதிவு செய்த நாள்
30
மார்
2013
11:03
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில், புதிய தேர் வெள்ளோட்ட விழா நடந்தது.பக்தர்கள் புதிய தேரை வடம் பிடித்து, "கோவிந்தா கோஷமிட்டு இழுத்தனர். புதியதேர் செய்யும் பணி, 17 லட்சம் ரூபாய் செலவில் 2005ல் துவங்கியது. மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகத்தால், நிதி ஒதுக்கப்பட்டு,தேர் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டது. கடந்த எட்டு மாதங்களாக நடந்த தேர் செய்யும் பணி, சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. புதிய தேர் 27 அடி உயரம், இரும்பு அச்சுக்கு மேல் ஐந்து அலங்கார அடுக்குகள் கொண்டதாகவும், வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மா அடுக்கான முதல் அடுக்கில் கதலிநரசிங்கப்பெருமாள், சிவன், விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களின் சிற்பமும், கோண அடுக்கான 2ம் அடுக்கில் சிற்ப வேலைகளும், 3ம் அடுக்கில், பெருமாளின் அவதாரம், 4ம் அடுக்கில் தேவாசனம் மற்றும் ஆழ்வார் அவதாரம், 5ம் அடுக்கில் உற்சவர் அமரும் சிம்மாசன பீடம் மற்றும் தசாவதார சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய தேருக்கான வெள்ளோட்ட விழாவை முன்னிட்டு, அதிகாலையில் யாகங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. பூரண கும்பம் தேரில் ஏற்றப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து "கோவிந்தா கோஷமிட்டு தேர் இழுத்தனர். சிறப்பு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.