பதிவு செய்த நாள்
05
ஏப்
2013
10:04
திருச்சி: உக்கிரமாகாளியம்மன் கோவில், "குட்டி குடித்தல் திருவிழாவில் பங்கேற்ற, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, பயபக்தியுடன் அம்மனை வணங்கி, விபூதி பூசினார். திருச்சி, தென்னூர், உக்கிரமாகாளியம்மன் கோவில், பங்குனித்தேர் திருவிழா, கடந்த, 2ம் தேதி துவங்கியது. கோவில் காவல் தெய்வமான சந்தனக் கருப்புக்கு, "குட்டி குடித்தல் திருவிழா, அவ்வூர் மந்தையில் நேற்று நடந்தது. பலி கொடுக்கப்பட்ட ஆடுகளின் ரத்தத்தை, மருளாளி உறிஞ்சி குடித்தது, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. திருவிழாவில் பங்கேற்க, தென்னூர் பகுதியில் உள்ள, தி.மு.க.,வினர், தி.மு.க., மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான நேருவுக்கு அழைப்பு விடுத்தனர்; ப்ளக்ஸ் பேனர், போஸ்டர் ஒட்டி வரவேற்பு அளித்தனர். காலை, 9:50 மணியளவில், தென்னூர் மந்தைக்கு, நேரு வந்தார். தென்னம் ஓலை, வெட்டிவேர் வேய்ந்த தேரில், மந்தையில் எழுந்தருளி, அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சில நிமிடங்கள் கண்களை மூடி நேரு, கைக்கூப்பி அம்மனை வழிபட்டார். அவருக்கு கோவில் பூசாரிகள், விபூதி பிரசாதம் அளித்தனர்; தலையில் விபூதியால் ஆசிர்வதித்து, நெற்றியிலும் பட்டையாக பூசினர். அதன்பின், நேரு, தன்கையிலிருந்த விபூதியையும் பூசி, அங்கிருந்து கிளம்பினார்.