பதிவு செய்த நாள்
05
ஏப்
2013
05:04
ராமராஜ்யம் வேண்டுமென இந்த உலகமே எதிர்பார்க்கிறது. ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரம் ஆயிரக்கணக்கில் பக்தர்களால் எழுதப்படுகிறது. ஆனால், அதை எழுதுவதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டுமெனத் தெரியுமா? ராமபிரானை ஏற்றிக்கொண்டு ரதம் வேகமாக செல்கிறது. மக்களெல்லாம் பின்னால் ஓடுகிறார்கள். ரதம் எழுப்பும் புழுதி வேகமாய் பரவுகிறது. காற்று சுடுகிறது. தாய்ப்பசுக்கள் கன்றுகளுக்கு பால் கொடுக்க மறுக்கின்றன. ராமபிரான் சகல உயிர்களுக்கும் அதிபர். எனவே உலகமே துக்கத்தால் தவித்தது. அயோத்தி நகர மக்கள் வழக்கமாக செய்யும் வேலை எதையும் செய்யவில்லை. சூரியன் இந்த துக்கத்தை காண இயலாமல் மேகத்திற்குள் மறைந்துபோனான். யானைகள் சாப்பிட மறுத்தன. நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் அன்றைய தினத்தில் பிரசவித்த பெண்களின் முகத்தில்கூட மகிழ்ச்சி என்பது கடுகளவுக்கும் இல்லை. அன்றைய தினம் சந்திரனை செவ்வாயும், குருவும், புதனும் குரூரமான திருஷ்டியுடன் பார்த்தார்கள். ஜாதக ரீதியாக இது மிகவும் மோசமான நேரம். இந்த நேரத்தில்தான் ராமன் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்.
நல்லதையும் கெட்டதையும் செய்யும் நவக்கிரகங்கள் கூட இந்த துக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் கண்மூடிக் கொண்டன. எனவே இந்த உலகமே கலங்கிப்போயிற்று. கடலில் புயல் வீசியது. பூகம்பம் ஏற்பட்டதுபோல அந்த நகரமே நடுங்குவது போல ஒரு பிரமை. பளபளப்பாக தெரியும் அஸ்வினி நட்சத்திரம் அன்று காணாமல் போய்விட்டது. துருவ நட்சத்திரம், சப்த ரிஷி மண்டலம் ஆகியவையும் ஒளி இழந்தன. அயோத்தி நகரில் உள்ள ஒருவன் கூட அன்று சாப்பிடவில்லை. அவர்கள் எண்ணமெல்லாம் ராமன் மீதே பதிந்திருந்தது. சிலர் தசரதரை நினைத்து வருத்தப்பட்டார்கள். ராமபிரான் பதவி ஏற்பதற்கு முன்பே அயோத்தியில் ராமராஜ்யம்தான் நடந்துகொண்டிருந்தது. ராமன் இருக்கும் இடத்தில் துன்பத்திற்கு இடமில்லை. மக்கள் தீர்க்காயுளுடன் வாழ்ந்தார்கள். 150 ஆண்டுகளுக்கு மேல் சாதாரண மனிதன்கூட வாழ்ந்ததால், அவன் இறந்தால்கூட துக்கப்பட யாருமில்லை. சந்தோஷமாக வழியனுப்பி வைப்பார்கள். ஏனெனில் ராமன் வாழ்ந்த இடத்தில் வசிப்பதால் அவன் வைகுண்டம் செல்வதாகக் கருதி யாரும் அழுவதில்லை. அப்படிப்பட்ட அயோத்தி மாநகரில் ராமன் அகன்றவுடன் அஞ்ஞானம் குடிபுகுந்தது. உலகத்தில் முதன் முதலாக மனிதனுக்கு அழிவு ஆரம்பித்தது ராமன் வெளியேறிய இந்த நாளில்தான். அன்றுவரை குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்தன. ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. இப்போதோ குடும்பங்களில் சந்தேகப்புயல் வீசியது.
பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்கள், இந்த ராமனிடம் கவுசல்யா எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவள் பேச்சைக் கேட்காமல் அவன் போய்விட்டானே. ராமனே இப்படி செய்தால் நம் பிள்ளைகள் எதிர்காலத்தில் நம் பேச்சை கேட்கவா போகிறார்கள்? என சொல்லி அழுதார்கள். பிள்ளைகளோ வேறு கோணத்தில் சிந்தித்தார்கள். இந்த கவுசல்யா பெற்றவள்தானா? எவ்வளவு கஷ்டப்பட்டாவது ராமனை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாமா? ராமனைப் பெற்றவளே இப்படி நடந்து கொள்கிறாள் என்றால், நம்மைப் பெற்ற தாய்மார்கள் எதிர்காலத்தில் நம்மீது எப்படி அன்பு வைப்பார்கள்? அவர்களை இனி நம்பக்கூடாது, என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆண்களும் இதே கோணத்தில் சிந்தித்தனர். நல்லவளாய் இருந்த கைகேயி ஒரே நொடியில் மனம் மாறி தன் மகனுக்கு பட்டம் சூட்டவேண்டும் என்பதற்காக கட்டிய கணவனையே அவமானகரமாகப் பேசினாள். அவரோ உயிர் போகும் நிலையில் இருக்கிறார். பெண்கள் எல்லாம் கணவனுக்கு எதிராக இப்படி திரும்பிவிட்டால் நமது நிலை என்னாவது? என பேசிக்கொண்டனர். பெண்கள் எல்லாம், இந்த தசரத மகாராஜா காமத்தின் வசப்பட்டு, கைகேயியின் சொல்லுக்கு பயந்து பெற்ற மகனையே வீட்டைவிட்டு விரட்டி விட்டார். நமது கணவன்மாரும் இதேபோல பிற பெண்களின் மீது ஆசைப்பட்டு அவர்கள் சொல்லும் சொல்லுக்காக நம் பிள்ளைகளையும் விரட்டமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தசரதரிடம் இரக்ககுணம் இல்லாததுபோல, நம் கணவன்மாரும் கொடுமைக்காரர்களாக மாறிவிடுவார்களோ, என அச்சம் கொண்டனர்.
ராமராஜ்யம் என்றால் கணவன் மனைவி ஒற்றுமை, தாய் மகன் ஒற்றுமை, மக்கள் அரசாங்க ஒற்றுமை அனைத்தும் நிறைந்ததாக இருக்கும். ராமன் இல்லாமல் போய்விட்டதால் இவை அனைத்தும் அழிந்துபோய்விட்டன. ஸ்ரீராம ஜெயம் எழுதும்போது உங்கள் சுயநலத்தை மட்டும் மனதில்கொள்ளாதீர்கள். எனக்கு திருமணம் நடக்க வேண்டும். எனக்கு பெரும் செல்வம் வேண்டும். என்னை கொடுமைப்படுத்தும் மாமியாருக்கு நோய் நொடி வந்து படுக்கையில் விழ வேண்டும். மகனுக்கு தலையணை ஓதும் மருமகள் அவனைப் பிரிந்து ஒழிய வேண்டும், என்றெல்லாம் கோரிக்கை வைக்கக்கூடாது. உலக ÷க்ஷமத்திற்காக ஸ்ரீராம ஜெயம் எழுதவேண்டும். நமது குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மனதில் நினைக்க வேண்டும். அண்ணியிடம் சண்டை போட்டு விட்டு, எனக்கு திருமணத்தடை நீங்க வேண்டும் என ராமஜெயம் எழுதும் நாத்தனாரை ராமன் கண்டுகொள்ளவே மாட்டார். மொத்தத்தில் ராமராஜ்யத்தில் நல்ல இதயங்களுக்கு மட்டுமே இடம் உண்டு. ராமபிரானே! நீ எங்களை மீண்டும் ஆள வரவேண்டும். நீ வந்துவிட்டால் எல்லாரும் திருப்தியான மனதுடன் இருப்பர். இவ்வுலகில் சண்டை என்பதற்கே இடமில்லை, என திரும்பத்திரும்ப சொல்லியபடியே ஸ்ரீராமஜெயம் எழுதவேண்டும். அப்படி செய்தால்தான் ராமராஜ்யம் வரும். உலகத்தில் ஒற்றுமை ஓங்கும். ரதம் மின்னலென பாய்ந்தது. அயோத்தி மக்களின் கோரிக்கை எடுபடவில்லை. ராமன் சுமந்திரரை அவசரப்படுத்தினார். ரதம் வேகமாக செல்லட்டும் என உத்தரவிட்டார். இருப்பினும் பின்னால் திரும்பி புழுதியின் மத்தியில் லேசாய் தெரிந்த மக்களை நோக்கி கைகூப்பினார். தூரத்தில் தசரதர் ஓடி வந்து கொண்டிருந்தார். நேற்றுவரை அவர் தெருக்களில் வரவேண்டுமானால் விதவிதமான தேர்களில் வருவார். இன்றோ மகனுக்காக வெறும் காலுடன் புழுதிபறக்கும் தெருவில் ஓடோடி வந்து கொண்டிருந்தார்.
சுமந்திரா! தேரை நிறுத்து என ஓலமிட்டார். சுமந்திரருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனின் உத்தரவுக்கு கட்டுப்படுவதா? இளவரசனின் உத்தரவை மதிப்பதா? என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். சுமந்திரரே! உங்கள் உணர்வுகள் எனக்கு புரிகிறது. தேரை நிறுத்தவேண்டாம். அரசன் சொல்லியும் ஏன் தேரை நிறுத்தவில்லை என கேட்டால் காதில் விழவில்லை என சொல்லிவிடுங்கள். ஒரு அமைச்சன் பொய் சொல்லலாமா என நீங்கள் கேட்கலாம். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் தசரதர் என்னை விடமாட்டார். நான் செய்துகொடுத்த சத்தியம் தவறிப்போகும். ஒருவருக்கு நன்மை விளைகிறது என்பதற்காக பொய் சொல்வதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை, என்றார் ராமபிரான். மின்னலென பறந்துவிட்டது தேர். தசரதர் அப்படியே சாய்ந்துவிட்டார். முழுநிலவை வானத்தில் உலாவரும் ராகு பீடித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அதே போல அவரது தோற்றம் அமைந்திருந்தது. தேர் சென்ற தடத்தைப்பார்த்து அழுதார். இந்த தடத்தின்வழியே நடந்து என் மகன் இருக்கும் இடத்திற்கு போகிறேன் என புலம்பியபடியே எழுந்தார். தள்ளாடி விழுந்தார். கவுசல்யாதேவி அவரை தாங்கி பிடித்துக்கொண்டாள். கல்மனசுக்காரியான கைகேயியோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.