பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
ஓசூர் : ஓசூர் அருகே, 800 ஆண்டு பழமையான, கர்நாடக மாநில கோவில் தேர் திருவிழாவில், பக்தர்களுக்கு பதிலாக, காளை மாடுகள், தேர்களை வடம்பிடித்து இழுக்கும் நூதன விழா, விமரிசையாக நடந்தது.
ஓசூர் அருகே, கர்நாடக மாநிலம், ஒஸ்கூரில், 800 ஆண்டு பழமையான மத்தூரம்மா கோவில் உள்ளது. இந்த கோவில், தமிழக, கர்நாடக எல்லையில் உள்ளதால், இரு மாநில பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாநில பக்தர்களும் வந்து செல்கின்றனர். பொதுவாக, கோவில் தேர் திருவிழாக்களில், தேரை, பக்தர்கள் தான் வடம்பிடித்து இழுத்துச் செல்வர்.ஆனால், ஒஸ்கூர் மத்தூரம்மா கோவில் திருவிழாவையொட்டி நடக்கும் தேரோட்டத்தில், பக்தர்களுக்கு பதிலாக, காளை மாடுகள், வடம்பிடித்து இழுத்துச் செல்கின்றன.மேலும், இந்த கோவில் தேர்கள், வீதிகளில் உலா வருவதற்கு பதிலாக, நீலகிரி தோட்டங்கள், குக்கிராமங்கள், ரயில்வே தண்டாவாளங்களை தாண்டி, 10 கி.மீ., சுற்று வட்டார பகுதிகளுக்கு, காளை மாடுகள் இழுத்துச் செல்கின்றன.நேற்று, இக்கோவில் தேர்த்திருவிழா விமரிசையாக நடந்தது. தேர்த்திருவிழாவில், 500 காளை மாடுகள், 10 தேர்களை, ஒன்றன் பின் ஒன்றாக இழுத்துச் சென்றன. கோவில் தேர்கள், ஒவ்வொன்றும், 120 அடி முதல், 150 அடி உயரம் கொண்டது.
தங்கம் வழங்கிய திப்புசுல்தான் : மைசூரை தலைநகராகக் கொண்டு, ஆட்சி செய்த, திப்புசுல்தான், 17ம் நூற்றாண்டில், ஆங்கிலேயருடன் போரிட, ஒஸ்கூரில், படைவீரர்களுடன் முகாமிட்டிருந்தார். அப்போது, அவரது படை வீரர்களுக்கு, மர்ம தோல் நோய் பரவியது. பீதியடைந்த அவரது படை வீரர்கள், ஒஸ்கூர் மத்தூரம்மாவை வழிப்பட்டவுடன், அவர்களுடைய நோய் நீக்கியது. ஆச்சரியம் அடைந்த திப்புசுல்தான், 14 கிலோ தங்க நகைகளை, மத்தூரம்மா கோவிலுக்கு வழங்கினார்.திப்புசுல்தான் வழங்கிய தங்க நகைகள், ஆணைக்கல் கர்நாடக மாநில அரசு கருவூலத்தில், இன்று வரை, பாதுகாக்கப்படுகின்றன. இந்த கோவிலின் தேர்த்திருவிழா மற்றும் விஷேச திருவிழாவின் போது மட்டும், அந்த நகைகள் பாதுகாப்புடன் கோவிலுக்கு கொண்டு வரப்படும். விழா முடிந்ததும், மீண்டும் கருவூலத்திற்கு எடுத்து செல்லப்படும்.