பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் சித்திரை பெருவிழாவையொட்டி நடந்த கொடியேற்றம், துவக்க விழா வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இதேபோல, நடப்பாண்டு சித்திரை பெருவிழாவையொட்டி, கோவில் வளாகத்திலுள்ள அம்மன் சன்னதி வாசலில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டது. மேலும் அம்மன் சன்னிதி முன் நேற்றுக்காலை கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, வழிபட்டனர். தொடர்ந்து, ஸ்வாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. வரும் 24ம் தேதி வரை 18 நாட்களுக்கு தினம்தோறும் ஒவ்வொரு அலங்காரத்திலும் ஸ்வாமி புறப்பாடு நடக்கிறது. இதில், மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி வழியாக கோவிலை வீதியுலா அடைகிறது. இதற்கான ஏற்பாட்டை ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் அரவிந்தன், மேற்பார்வையாளர் ரங்கராஜன் செய்துள்ளனர். தஞ்சை பெரியகோவிலில் சித்திரை பெருவிழாவையொட்டி நேற்று பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, வழிபட்டனர்.