பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
அவலூர்பேட்டை:செஞ்சி அருகே, திருநாதீஸ்வரர் கோவிலில், புனரமைப்புபணி மேற்கொண்டபோது, 11 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த தேவனூரில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான திருநாதீஸ்வரர் கோவில் உள்ளது. பாழ்அடைந்த நிலையில் இருந்த, இந்த கோவிலை, கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், இந்து சமய அறநிலைய துறை சார்பில், 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, பணியாளர்கள் பணி மேற்கொண்ட போது, கருவறையின் பின்புறம் உள்ள இடத்தில் பள்ளம் தோண்டிய போது, சிலை ஒன்று கண்டறியப்பட்டது.தகவல் அறிந்ததும், துணை தாசில்தார் பூமிநாதன், அறநிலைய ஆய்வாளர் முருகேசன் மற்றும் வளத்தி போலீசார் கோவிலுக்குவந்தனர். அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில், மேலும், தோண்டினர். அப்போது, வள்ளி, தெய்வானை, முருகன், நடராஜர், நான்கு அம்மன் சிலைகள், இரண்டு சின்ன சிலைகள், சுந்தரர் உள்ளிட்ட, 11 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், ஒரு தங்க காசு மற்றும் செயின், மூன்று தட்டுகளுடன் கூடிய சரவிளக்குகள் நான்கு செட், வெள்ளி தலை கவசம், வெள்ளி கைகள், காதுகள், உடைந்த மூன்று தாம்பாளத்தட்டுகள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன.பச்சை நிறத்தில், அதிக பருமனாக சிலைகள் இருந்ததால், இவை, ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் என, கருதப்படுகிறது. சிலைகள் மற்றும் கிடைத்த அனைத்துப் பொருட்களும், செஞ்சி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.