பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
திருக்கழுக்குன்றம்;ஆனூர் அர்த்தபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, பல லட்சம் மதிப் பிலான நிலங்கள், ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால், அவற்றை மீட்டு பாதுகாக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனூர் ஊராட்சியில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்திரநாயகி உடனுறை ஸ்ரீ அர்த்தபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 55 ஹெக்டேர் நிலம் இக்கோவில், கடந்த 1972ம் ஆண்டிலிருந்து, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவிலுக்கு, ஆனூர் ஊராட்சியில், பல்வேறு இடங்களில், 55 ஹெக்டர் நிலம் உள்ளது. இவற்றை அங்குள்ள சிலர் ஆக்கிரமித்து, விவசாயம், குடிசை வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டியுள்ளனர். ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல், தொடர்ந்து அலட்சியப்போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஆனூர் கிராமத்தில், வல்லிபுரம் செல்லும் சாலையை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ள, புதிய பயணிகள் நிழற்குடையின் பின்புறத்தில், கோவிலுக்கு சொந்தமான, 2.30 ஏக்கர் நிலம் உள்ளது. ஆரம்ப காலத்தில், இதன் ஒரு பகுதியில் ஆக்கிரமித்து குடிசை அமைத்தவர்கள், தற்போது, முழுவதையும் ஆக்கிரமிக்க முயன்று வருகின்றனர். ஆனூர் நடுநிலைப் பள்ளி எதிரே உள்ள மூன்று ஏக்கர் நிலத்தை, ஆக்கிரமித்து, இங்கு உள்ள முக்கிய நபர்கள் சிலர், விவசாயம் செய்து வருவதுடன், திருமண மண்டபமும் கட்டி உள்ளனர். ஆனால், இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள், மவுனமாக இருக்கின்றனர். இதனால், பல லட்சம் மதிப்புள்ள கோவில் நிலம், பறிபோகும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். நடவடிக்கை இதுகுறித்து, அர்த்தபுரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் கூறியதாவது: கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது குறித்து, தற்போது தான் கவனத்திற்கு வந்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும், கோவில் நிலங்களின் அருகில், ஊராட்சிக்கு சொந்தமான நிலங்களும் உள்ளன. எனவே, இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்து, ஊராட்சி நிர்வாகத்தின் துணையுடன், நிலங்களை சர்வே செய்து, கோவில் நிலங்களை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பால கிருஷ்ணன் கூறினார்.