பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
காஞ்சிபுரம்:ஐயங்கார்குளத்தில் உள்ள நடவாவி கிணறு, நூறு ஆண்டுகளுக்கு பிறகு தூர் வாரப்பட்டது. இந்நிலையில், பணம் பற்றாக்குறை காரணமாக, பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில், ஐயங்கார்குளம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, புகழ்பெற்ற சஞ்சீவிராய சுவாமி கோவில் உள்ளது. இதன் பின்புறம், புகழ்பெற்ற "நடவாவி கிணறு உள்ளது. இதில், பூமிக்கடியில் அழகிய மண்டபம் கட்டப்பட்டு, அதன் நடுவில் கிணறு அமைந்துள்ளது. கிணற்று தண்ணீர், மண்டபம் முழுவதும் நிறைந்திருக்கும். தூர் வாரல் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஐயங்கார்குளம் கிராமத்தில் உள்ள சஞ்சீவிராயர் கோவிலுக்கு எழுந்தருள்வார். பின்னர் நடவாவி கிணற்றின் உள்ளே எழுந்தருள்வார். நடவாவி கிணறு எப்போது தூர் வாரப்பட்டது, என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதனால் தண்ணீர் மாசுபட்டு, துர்நாற்றம் வீசத் துவங்கியது. எனவே, கிணற்றை தூர் வார வேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று கோவில் நிர்வாகம், பொதுமக்கள் உதவியுடன், நடவாவி கிணற்றை தூர் வாரும் பணி, பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டது. பொதுமக்கள் வழங்கிய பணத்தில், சிறிது சிறிதாகப் பணி நடந்தது. அப்போது, கிணற்றின் உள்ளே இறங்கி, மண்டபத்திற்கு மேலே ஏறும் பகுதிக்கு கீழே, கிணற்றுக்கு செல்ல மற்றொரு வழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பணம் இல்லாததால், தூர் வாரும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. பணம் வேண்டும் இது குறித்து, தூர் வாரும் பணியிலிருந்த ஊழியர்கள் கூறியதாவது: மக்கள் தந்த பணத்தில், தூர் வாரும் பணியை துவக்கினோம். மண்டபத்தின் உட்புறம் 30 அடி ஆழத்திற்கு சகதியை எடுத்தோம். அப்போதுதான் புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு கீழே இறங்குவதற்கு வசதியாக, கற்கள் பதித்துள்ளனர். இன்னும் சகதி உள்ளது. எவ்வளவு ஆழத்திற்கு கிணறு அமைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு புறமும் அழகிய கற்களால் கிணறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு பணம் இல்லாததால், தூர் வாரும் பணியை இத்துடன் முடித்துக் கொண்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.