பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
ஓசூர்: வறட்சியால், விவசாய சாகுபடிக்கும், குடிநீருக்கும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மழை வேண்டி, ஓசூர் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள், ஒன்பது கிராம தேவதைகளை ஊர்வலமாக எடுத்து வந்து, ஆடுகள் பலியிட்டு சிறப்பு பூஜை செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவில், இரு ஆண்டாக, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் பெய்யவில்லை. மாவட்டத்தின் பல இடங்களில், அவ்வப்போது, மழைகள் பெய்தபோதும், ஓசூர் பகுதியில் மட்டும், மழை சுத்தமாக பெய்யவில்லை. இதனால், ஆயிரம் அடிக்கு கீழ் நிலத்தடி நீர் மட்டம் சென்றது. குடிநீருக்கும், விவசாய பணிகளுக்கும், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மழையை சார்ந்த மற்ற விவசாய தொழில்கள் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். விவசாயிகள், நஷ்டத்தில் அடுத்தபோக சாகுபடி செய்ய முடியாமல், தவித்து வருகின்றனர். பெண்கள், குடிநீர் கிடைக்காமல், அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், ஓசூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெரியம்மா, காளியம்மா, சக்தி காளியம்மா, கோட்டை மாரியம்மன், முனீஸ்வரன், சப்பலம்மா, பிளேக் மாரியம்மன், கங்கம்மா, எல்லம்மா ஆகிய, ஒன்பது கிராம தேவதைகளை, பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வந்து, தாசில்தார் அலுவலக சாலையில் அலங்கரித்து வைத்து, மழை வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். மேலும், மழை வேண்டி, ஆடுகளை அம்மனுக்கு பலியிட்டு, ஏழைகளுக்கு கறி, அன்னதானம் வழங்கி, பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மழையில்லாத காலத்தில், கிராம தேவதைகளை எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டால், மழை பெய்யும் என்பது, முன்னோர்கள் கடைபிடிக்கும் ஐதீகமாக இருப்பதால், ஒன்பது கிராம தேவதைகளை எடுத்து வந்து பூஜை செய்ததாக, பக்தர்கள் தெரிவித்தனர்.