பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், 70 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட மடப்பள்ளி, புதுப்பிக்கப்பட்டு, நேற்று திறக்கப்பட்டது. இக்கோயிலில் அம்மன் சன்னதியில் உள்ள இரண்டாம் பிரகார கன்னி மூலையில், திருமலைநாயக்கர் மடப்பள்ளியிலும், சுந்தரேஸ்வரருக்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள, சர்க்கார் மடப் பள்ளியிலும், நைவேத்யம் தயாரிக்கப்பட்டு, படைக்கப்பட்டு வந்தது. கோயிலை சுற்றிலும் குடியிருப்புகள் பெருகின. நூற்றுக்கணக்கில் ஆழ்துளை கிணறு போடப்பட்டது. திருமலைநாயக்கர் மடப்பள்ளி கிணறு, தண்ணீரின்றி வறண்டது. இதனால், மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட நைவேத்யம் நிறுத்தப்பட்டது. மடப்பள்ளியை, 5 லட்சம் ரூபாயில் புதுப்பித்து, மீண்டும் நைவேத்யம் தயாரிக்க, நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, 50 அடி நீளத்திற்கு, மடப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது. தண்ணீர் வசதி மற்றும் மூன்று அடுப்புகள் கட்டப்பட்டன. கழிவுநீரை தொட்டியில் சேகரித்து, மோட்டார் பம்புசெட்டை இயக்கி, குழாய் மூலம் வெளியேற்றப்படவுள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட மடப்பள்ளி, நேற்று திறக்கப்பட்டது.