பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
10:04
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கும் அழகரை தரிசிக்க, ஐகோர்ட் உத்தரவுப்படி, வி.ஐ.பி., பாஸ் வழங்க முடியாது, என, அறநிலைய துறை இணை கமிஷனர் முத்துதியாகராஜன் கூறினார். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில், சித்திரை திருவிழா வரும் 21 ம் தேதி துவங்குகிறது. முதல் 2, நாட்களும் பெருமாள் கோயிலை வலம் வருகிறார். ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, வரும் 23ம் தேதி மாலை 5:00 மணிக்கு கள்ளழகர் வேடத்தில், தங்கப்பல்லக்கில் மதுரைக்கு அழகர் புறப்படுகிறார். ஏப்.,25ல் தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் அழகர், காலை 7.30 மணிக்குள், வைகை ஆற்றில் இறங்குகிறார். அங்கிருந்து வண்டியூர் செல்கிறார். அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகர், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில் செல்லும் வரை, பக்தர்களின் மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். விழா முதல் நிகழ்ச்சியாக கொட்டகை முகூர்த்த விழா, நேற்று தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நடந்தது. ஆயிரம் பொன் சப்பரத்தில் வைக்கப்படும் யாழி முகத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு, கொட்டகை அமைப்பதற்கான முகூர்த்த கால் கோயில் முன் நடப்பட்டது.
இணை கமிஷனர் முத்துதியாகராஜன் கூறியதாவது: இந்தாண்டு 408 மண்டகபடிகளில் அழகர் எழுந்தருளுகிறார். பக்தர்களுக்கு தண்ணீர், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்ய கோயில், மாவட்ட, காவல்துறை நிர்வாகங்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆற்றில் இறங்கும் அழகரை காண மெகா சைஸ் "டிவிக்கள் வைக்கப்படும். அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் சுவாமி தரிசனம் செய்ய, முக்கிய பிரமுகர்களுக்கு, ஐகோர்ட் உத்தரவுப்படி, இந்தாண்டு இலவச பாஸ் வழங்க வாய்ப்பில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.