தண்டு மாரியம்மன் கோவிலில் மெகா கம்பம்: தண்ணீர் ஊற்றி பெண்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2013 11:04
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவிலில் நடப்பட்ட மெகா கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிப்பட்டனர்.சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் உள்ளது தண்டுமாரியம்மன் கோவில். பண்ணாரி மாரியம்மனுக்கு சகோதரி என்று ஐதீகம் கூறும் இக்கோவில், நூறு ஆண்டுகள் கடந்து பழமையானதாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்தரை மாதம் இங்கு கம்பம் மற்றும் குண்டம் விழா நடப்பது வழக்கம்.இந்தாண்டுக்கான குண்டம் விழா, நேற்று கம்பம் நடும் விழாவுடன் துவங்கியது. புதுபீர்கடவு பகுதியில் வெட்டிக்கொண்டு வரப்பட்ட கம்பம், மெகா அளவில் வடிவமைக்கப்பட்டது. இக்கம்பத்தை நேற்று அதிகாலை பக்தர்கள் பவானி ஆற்றுக்கு கொண்டு சென்று, கம்பத்திற்கு மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் பூசி வழிபட்டனர்.பின் பவானி ஆற்றில் இருந்து ஊர்வலமாக, பூஜிக்கப்பட்ட கம்பத்தை எடுத்து வந்து, வடக்குபேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் முன் நட்டு, சிறப்பு பூஜைகள் செய்தனர். நடப்பட்ட கம்பத்துக்கு இப்பகுதி பெண்கள் திரளாக வந்து தண்ணீர் ஊற்றி வணங்கினர்.ஏப்ரல், 24ம் தேதி அதிகாலை கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து, தங்கள் வேண்டுதலை நிறைவு செய்வர்.