பதிவு செய்த நாள்
13
ஏப்
2013
11:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, முதன் முறையாக மாசிவீதிகளில் போலீஸ் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இத்திருவிழா, ஏப்.,14ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்.,23ல், திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்.,24ல் தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமியும், அம்மனும் தினமும் காலை, இரவு மாசி வீதிகளில் உலா வருகின்றனர். இதையொட்டி, இவ்வீதிகளில் போலீஸ் சார்பில், 5க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இரவு, சுவாமி உலா வரும்போது, பக்தர்களை கண்காணிக்க, அவர்களை நோக்கியும் விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. திருக்கல்யாணத்தன்று, பக்தர்களின் வசதிக்காக, ஆவணி மூல வீதிகள் மற்றும் அதையொட்டிய சிறு சந்துகளில், இலவச காலணி பாதுகாக்கும் இடங்கள், கோயில் சார்பில் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில், மத்திய உளவுத்துறை அறிவுரைபடி, கோயில் உள் பாதுகாப்பிற்கு முன்னாள் ராணுவத்தினர் 30 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். முதற்கட்டமாக, 8 பேர் நேற்று பணியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் அம்மன் சன்னதி, பொற்றாமரைக்குளம் உட்பட முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவர்.