பதிவு செய்த நாள்
18
ஏப்
2013
10:04
திரிச்சூர்: கேரளாவின், புகழ்பெற்ற, பூரம் திருவிழாவில், யானைகள் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆண்டு தோறும், ஏப்ரல்- மே மாதங்களில், பூரம் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதில், ஏராளமான யானைகள், அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து செல்லப்படும். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு, பகல் நேரத்தில் யானைகள் அணிவகுப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வெயில் கொடுமை காரணமாக, யானைகளுக்கு மதம் பிடிக்கும் அபாயம் இருப்பதால், வனவிலங்குகள் பாதுகாப்பு துறை சார்பில், யானைகள் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி, காலை, 11:00 மணி முதல், மாலை, 3:30 மணி வரை, யானை அணிவகுப்பிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இரவு நேரத்திலும், தொடர்ந்து, ஆறு மணி நேரத்திற்கு மேலாக, யானைகளை ஊர்வலத்தில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், பல முன்னெச்சரிக்கை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. யானைகள் ஊர்வலத்தின் போது, பொதுமக்கள், 3 மீட்டருக்கு அப்பால் இருந்து பார்வையிட வேண்டும்; யானைகளை தொட தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, யானைகளுக்கு போதிய ஓய்வு அளிக்க வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.