பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
11:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பால மாணிக்கம் வீதியிலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வரும் 23 ம் தேதி துவங்கி 26 ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து காமாட்சியம்மன் கோவில் செயலாளர் திருவேங்கிடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொள்ளாச்சியிலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் சித்ராபவுர்ணமி விழா கோலாகலமாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்., 23 ம் தேதி காலை 11.00 மணிக்கு தெய்வக்குளம் காளியம்மன் கோவிலுக்கு சென்று தீர்த்தம் கொண்டுவரப்படுகிறது. அன்று இரவு கோவிலில் சக்தி கும்பஸ்தாபனம் செய்யப்படுகிறது. ஏப்., 24 ம் தேதி காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மாவிளக்கு, பொங்கல், சுவாமிக்கு சந்தனகாப்பு மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஏப்., 25 ம் தேதி சுவாமிக்கு காலை முத்தங்கி அலங்காரமும், காலை 9.00 மணிக்கு, காமாட்சியம்மனுக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. உற்சவத்தை தொடர்ந்து பங்கேற்கும் பக்தர்கள் மொய் சமர்ப்பிக்கும் நிகழ்வும், அதையடுத்து திருக்கல்யாண விருந்தும் நடைபெறுகிறது. இதில் அறுசுவை உணவுகள் பரிமாறப்படுகிறது. மாலை 6.00 மணிக்கு பட்டம் சூட்டிய யானையின் மீது அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. இதில் தவில் நாதஸ்வரம் மேளதாளங்களும், சிங்காரிமேளமும் முழங்குகிறது. மயிலாட்டம், ஒயிலாட்டமும் வீதி உலாவில் இடம் பெறுகிறது. இதையடுத்து இரவு 8.00 மணிக்கு வானவேடிக்கையும், அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.ஏப்., 26 ம் தேதி காலை 10.00 மணிக்கு மகா அபிஷேகமும், மதியம் 12.00 மணிக்கு வெள்ளி தங்க கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்று வடை, பாயசத்தோடு மகா நெய்வேத்தியம் செய்து சுவாமிக்கு தீபாராதனை சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்று காமாட்சியம்மனை தரிசித்து அருள்பெற வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.