பதிவு செய்த நாள்
22
ஏப்
2013
10:04
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவிலில் நடப்பட்டுள்ள பிரம்மாண்ட கம்பத்தை சுற்றிலும், இளைஞர்கள் பல்வேறு விதமாக நடனமாடி பார்வையாளர்களை அசத்தினர்.சத்தியமங்கலம் வடக்குபேட்டையில் உள்ளது தண்டுமாரியம்மன் கோவில். நூறு ஆண்டுகளுக்கு பழமையான இக்கோவிலில் உள்ள அம்மன், பண்ணாரி மாரியம்மனின் சகோதரி என்பது ஐதீகம். இதனால் பண்ணாரி கோவிலில் குண்டம் விழா முடிந்த அடுத்த மாதம் தண்டுமாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடப்பது வழக்கம்.இந்தாண்டு குண்டம் விழா, கடந்த, 10ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கி, கோவில் முன் கம்பம் நடப்பட்டது. இக்கம்பத்தை சுற்றிலும் தினமும் இரவு எட்டு மணி முதல், 11 மணி வரை சத்தியமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதி இளைஞர்கள், வரிசையாக கம்பத்தை சுற்றி இசைக்கலைஞர்கள் அடிக்கும் மேள, தாளத்துக்கு ஏற்ப, கால்களில் சலங்கைகள் கட்டி விதவிதமாக நடமாடுகின்றனர். ஒவ்வொரு குழு இளைஞர்களும் ஒவ்வொரு வித நடனம் ஆடுவது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.விழாவை முக்கிய நிகழ்வாக குண்டம் நிகழ்ச்சி, 24ம் தேதி அதிகாலை நடக்கிறது. 25ம் தேதி மாலை கம்பம் பிடுங்கும் விழாவும், 26ம் தேதி திருவிளக்கு பூஜை, 27ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. மே, 2ம் தேதி மறுபூஜையுடன் குண்டம் விழா நிறைவடைகிறது.