பதிவு செய்த நாள்
23
ஏப்
2013
10:04
பச்சை நிறத்தில் பெண் இருக்கிறாளா! ஆம்...ஒருத்தி இருந்தாள். அவள் கரும்பச்சை நிறத்தவள். பச்சைக்கிளியை கையில் ஏந்தியவள். பிறக்கும் போதே மூன்று வயதுடையவள். இயற்கைக்கு மாறாக மூன்று ஸ்தனங்களைக் கொண்டவள். மீன் போன்ற கண்களை உடையவள். எங்கும் அவளது பார்வை பரவும். உலகையே தனித்து வெல்லும் ஆற்றல் படைத்தவள். கைலாயம் வரை போருக்குச் சென்றவள். மொத்தத்தில், அந்த மரகதவல்லி ஒரு சாதனைச் செல்வி. அவளுக்கு திருமணம் என்றால் மாப்பிள்ளை இறைவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்! அவள் அன்பால் அடக்கியாள்பவள். அவரும் அவளது அன்பில் மயங்கியிருக்கிறார். அவள் தான் அன்னை மீனாட்சி. சுந்தரேஸ்வரப்பெருமானை அவள் இன்று திருமணம் செய்ய இருக்கிறாள்.
மீனாட்சியின் தாய் காஞ்சனமாலை. இவள் முற்பிறவி ஒன்றில், வித்யாவதி என்னும் பெயரில் மீனாட்சியின் பக்தையாக இருந்தாள். தன் வாழ்நாளை, மீனாட்சியின் திருப்பணிக்காகவே அர்ப்பணித்தாள். கோயிலைச் சுத்தம் செய்வாள். மீனாட்சியை தன் மகளாக எண்ணி அவளையே பார்த்துக் கொண்டிருப்பாள். தன்னைப் பெறாத அந்தத்தாய்க்கு மீனாட்சி காட்சியளித்து, ""என்னை மகளாய் நினைப்பவளே! உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றாள். அம்மா, ""பிறவி என்ற ஒன்று வேண்டாம். அப்படி இருக்குமானால், இனி வரும் பிறவி ஒன்றில் எனக்கு நீ மகளாய்ப் பிறக்க வேண்டும். உன்னைப் பெற்ற பயனால் நான் முக்தியடைய வேண்டும், என்றாள் அந்தப்பெண்.
மீனாட்சி மனமுவந்து அந்த வரத்தை வழங்கினாள். அதுமட்டுமல்ல, அப்பிறவியில் கோயிலில் குப்பை கூட்டுபவளாக இருந்தவள், இன்னொரு பிறவியில் மகாராணியாகப் பிறந்தாள். பெயர் காஞ்சனமாலை. "காஞ்சனா என்றால் "தங்கம். தங்கமாலை எவ்வளவு அழகாக இருக்குமோ, அதுபோல் அழகு படைத்தவள் காஞ்சனமாலை. அவள் மதுரை மன்னன் மலையத்துவஜனை திருமணம் செய்தாள். பாண்டியர்களின் கொடியில் "பொதிகை மலை தான் சின்னமாக இருந்துள்ளது. "மலையத்துவஜனை "மலை+ துவஜன் என்று பிரிப்பார்கள். "துவஜம் என்றால் "கொடி. "மலைக்கொடியை உடையவன் என்று இதற்குப் பொருள். மீனாட்சியின் பிறப்புக்கு பிறகு தான் அவர்கள் மீன்கொடிக்கு மாறியிருக்க வேண்டும். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, பெரியோர் அறிவுரைப்படி புத்திரப்பேறுக்கான யாகம் செய்தான். அந்த யாகத்தீயில் இருந்து எழுந்த மூன்று வயது பெண் குழந்தை அவனது மடியில் அமர்ந்தது. அவளுக்கு "தடாதகை என்று பெயரிட்டனர். பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்கள் இருந்ததால் பெற்றோர் கவலை கொண்டனர். அப்போது, அசரீரி ஒலித்தது. ""மகனே! கவலை வேண்டாம். இவள் யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற விதி இருக்கிறதோ, அவர் அவள் எதிரே வரும் போது, ஒரு ஸ்தனம் மறைந்து விடும், என்றது. அவளை ஆணுக்கு நிகராக பெற்றோர் வளர்த்தனர். வயது வந்ததும் பட்டம் சூட்டினர். அந்த பட்டத்துராணி உலகையே வென்றாள். கடைசியாக, கைலாயத்துக்குப் போருக்கு அழைத்த போது, சிவபெருமான் அவள் எதிரே வர ஸ்தனம் மறைந்தது. தன் மணாளன் அவர் என்பதை அறிந்து போரை நிறுத்தினாள். மாப்பிள்ளை மிகவும் அழகானவராக இருந்ததால், "சுந்தரேஸ்வரர் என பெயர் பெற்றார். "சுந்தரம் என்றால் "அழகு. மதுரை வந்து மீனாட்சிக்கு மாலையிட்டார். மதுரையின் மன்னராகப் பொறுப்பேற்றார். அவரை "சுந்தர பாண்டியன் என மக்கள் அழைத்தனர். தாய், தந்தையின் திருமணத்தைக் காண திருப்பரங்குன்றம் முருகனும், தங்கையை தாரை வார்த்துக்கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் வந்தனர். மதுரையில் பெண்களுக்கே மவுசு அதிகம். அவர்களுக்கெல்லாம் மாங்கல்ய பாக்கியம் தந்து, மங்கல வாழ்வு அளித்திருக்கிறாள் மீனாட்சி.